ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ், நம்பு காளீஸ்வரன். இவர்கள் இருவரும் 2021-ம் ஆண்டு மதுபோதையில், பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவனை ஏமாற்றி, ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு சிறுவனைக் கட்டாயப்படுத்தி, அடித்து துன்புறுத்தி இருவரும் மாறி மாறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கின்றனர். பின்னர் சிறுவனிடம், `இதை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவோம்’ என மிரட்டி அனுப்பியிருக்கின்றனர்.
அவர்கள் மிரட்டலுக்கு பயந்து இதைச் சிறுவன் வீட்டில் சொல்லாமல் இருந்திருக்கிறான். இதற்கிடையே, சிறுவனுக்குத் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பது குறித்து பெற்றோரிடம் தெரிவித்திருக்கின்றனர்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இது தொடர்பாக சிறுவனிடம் விசாரித்தபோது நடந்த சம்பவங்களைக் கூறியிருக்கிறான். இதையடுத்து, இரு காமக்கொடூரர்கள் மீதும் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர் புகாரளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவுசெய்த போலீஸார் செல்வராஜ், நம்பு காளீஸ்வரன் ஆகிய இருவரையும் கைதுசெய்தனர்.
இந்த வழக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத், குற்றம்சாட்டப்பட்ட செல்வராஜ், நம்புகாளீஸ்வரன் ஆகிய இருவருக்கும் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும், கட்டத் தவறினால் மேலும் ஒரு வருடம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.