Published:Updated:

"இன்னா கலாய்க்கிறீயா... முகத்தைக் கிழிச்சிடுவேன்!'' - குட்கா 'ஸ்டிங் ஆபரேஷன்' அனுபவம்!

ரஞ்சித் ரூஸோ
க.சுபகுணம்

வில்லிவாக்கம் - கொரட்டூர் மெயின் ரோட்டில் உள்ள சில பெட்டிக்கடைகளில் குட்கா கேட்டபோது, நம்மை ஏற இறங்கப் பார்த்துவிட்டு "இன்னா கலாய்க்கிறீயா... முகத்தைக் கிழிச்சிடுவேன்... போயிடு" என்றார்கள். சிலரோ, "அதெல்லாம் கிடைக்காதுப்பா!"

குட்கா
குட்கா

செயின்ட் ஜார்ஜ் கோட்டை தொடங்கி டெல்லி செங்கோட்டை வரை அரசியல் அதிர்வை ஏற்படுத்திய விவகாரம், குட்கா ஊழல். அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி முன்னாள் டி.ஜி.பி, உயரதிகாரிகள் எனப் பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஆனாலும், குட்கா புழக்கம் குறைந்தபாடில்லை. தெருவுக்குத் தெரு தாராளமாகக் கிடைக்கிறது. இந்த நிலையில்தான் லஞ்சம், ஊழல் தொடர்பாக வாசகர்கள் புகார் அளிக்க, விகடனில் வாட்ஸ் அப் எண் அளித்திருந்தோம்.

ஆகஸ்ட் 5-ம் தேதி வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வாசகர் ஒருவர், 'சென்னை நகர் முழுவதும் குட்கா பரவலாக விற்பனையாகிறது. எங்கள் பகுதியில் பள்ளி சிறுவர்கள்கூட குட்காவுக்கு அடிமையாகிவிட்டார்கள். ஏதாவது நடவடிக்கை எடுங்கள்' என்று புகார் அளித்திருந்தார். உடனடியாக களம் இறங்கியது ஜூனியர் விகடன் டீம். நமக்கு புகார் அளித்த வாசகரின் வில்லிவாக்கம் ஏரியாவிலிருந்தே குட்கா 'ஸ்டிங் ஆபரேஷனை'த் தொடங்கினோம். https://bit.ly/2KK4J6l

குட்கா
குட்கா

வில்லிவாக்கம் - கொரட்டூர் மெயின் ரோட்டில் உள்ள சில பெட்டிக்கடைகளில் குட்கா கேட்டபோது, நம்மை ஏற இறங்கப் பார்த்துவிட்டு "இன்னா கலாய்க்கிறீயா... முகத்தைக் கிழிச்சிடுவேன்... போயிடு" என்றார்கள். சிலரோ, "அதெல்லாம் கிடைக்காதுப்பா!" என்றார்கள். இரண்டு மணி நேரம் கடந்தும் தேறவில்லை. அப்போது ஒரு முதியவர் நம்மை அணுகி, "என்னப்பா, ரொம்ப நேரமா இங்கயே சுத்திட்டு இருக்கீங்களே?" என்றார். அவரிடம், "குட்கா எங்கே கிடைக்கும்?" என்றோம். "இங்க எல்லா பெட்டிக்கடையிலும் விக்குறாங்க. ஆனா, புதுசா போய் கேட்டா, கொடுக்க மாட்டாங்க. நான் வழக்கமா வாங்குற கடை இருக்கு. அங்க போலாம் வாங்க. ஆனா, எனக்கு நாலு பாக்கெட் வாங்கிக் குடுக்கணும்" என்ற நிபந்தனையுடன் அழைத்துச் சென்றார். தொடர்ந்து அவரே, "குட்கான்னு கேட்டால்லாம் தர மாட்டானுங்க. அதுக்குன்னு ஒரு கோட் வேர்டு இருக்கு. அதைச் சொல்லி கேட்டாதான் தருவாங்க" என்றவர் ஒரு பெட்டிக்கடைக்கு அழைத்துச் சென்றார்.

கடையில் இருந்த பெண்மணியிடம், "..... (கோட் வேர்டு சொல்லி) இருக்காங்க?" என்றோம். நம்மை ஏற இறங்க பார்த்தவர், உடன் வந்த பெரியவரைப் பார்த்தார். பெரியவர் சிக்னல் கொடுத்தவுடன், குட்கா பாக்கெட்டுகளை பேப்பரில் மடித்துக் கொடுத்தார். பிறகு அந்தப் பெரியவர் நம்மிடம், கடைகளில் குட்காவை எப்படி வாங்குவது என்று சில டிப்ஸ்களைக் கொடுத்து அனுப்பிவைத்தார். அவர் சொன்ன டிப்ஸ்கள்படியே கேட்டபோது, அடுத்த தெருவில் இருந்த ஒரு கடையில் ஒரு சரம் குட்கா பாக்கெட்டுகளும், ஐந்து ஹான்ஸ் பாக்கெட்டுகளும் கிடைத்தன.

அயனாவரம் ரோடு, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ஐஸ்ஹவுஸ் டாக்டர் நடேசன் ரோடு, சூளைமேடு அண்ணா நெடும்பாதை, அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோயில் தெரு, கோயம்பேடு புறநகர் பேருந்துநிலைய சாலை, திருவான்மியூர் போஸ்ட் ஆபீஸ் ரோடு, வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் இங்கெல்லாம் சென்றோம். நாம் விசாரித்த வரை, இங்கெல்லாம் பெரும்பாலான கடைகளிலும் குட்கா தாராளமாக விற்கப்படுகிறது. நமது 'ஸ்டிங் ஆபரேஷன்' குழு, 120 குட்கா பாக்கெட்டுகளையும், 55 ஹான்ஸ் பாக்கெட்டுகளையும் பெற்றது.

குட்கான்னு கேட்டால்லாம் தர மாட்டானுங்க. அதுக்குன்னு ஒரு கோட் வேர்டு இருக்கு

அம்மா வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமியின் அரசு, ஜெயலலிதா தடைசெய்த குட்காவை தாராளமாகப் புழங்க அனுமதிப்பது ஏன்? பொதுமக்களின் ஆரோக்கியத்தின் மீது இந்த ஆட்சியாளர்களுக்கு அக்கறையில்லையா... அல்லது, ஆட்சியாளர் களுக்கும் இந்த ஊழலில் பங்கு இருக்கிறதா? தினமும் வசூலாகும் லஞ்சப் பணம் யாருக்கெல்லாம் செல்கிறது? பதில் சொல்ல வேண்டிய கடமை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது.

- ஜூனியர் விகடன் ஸ்பெஷல் ஸ்டோரி-யின் சிறு பகுதி இது. முழுமையாக வாசிக்க > நாற்றம் எடுக்குது குட்கா ஊழல்! - ஒரு மாதத்துக்கு ரூ.600 கோடிக்கு விற்பனை... அதில் லஞ்சம் மட்டும் ரூ.300 கோடி... என்ன பதில் சொல்லப்போகிறார் எடப்பாடி? https://www.vikatan.com/social-affairs/judiciary/gutka-scandal-issue

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/