Published:Updated:

`திருப்போரூருக்கு ராணுவ வெடிகுண்டுகள் வந்தது எப்படி?!' - அதிர்ச்சி கொடுத்த அடுத்தடுத்த மரணங்கள்

திருப்போரூரில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, இன்றும் அப்பகுதியில் கடுமையான சோதனைகள் நடைபெற்றுவருகின்றன.

கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு
கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகே உள்ளது மானாமதி கிராமம். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், இங்குள்ள கங்கையம்மன் கோயில் குளம் அருகே, அப்பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் மர்மப் பொருள் ஒன்றை அங்கே கண்டெடுத்தனர். அதை உடைத்தபோது, அந்தப் பொருள் வெடித்துச் சிதறியிருக்கிறது. இதில், சூர்யா என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானர்.

வெடிகுண்டு உதிரி பாகங்கள்
வெடிகுண்டு உதிரி பாகங்கள்

மேலும், சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஜெயராமன் என்பவரும் இறந்தார். அவருடன் இருந்த திலீப், யுவராஜ், திருமால் ஆகியோர் பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். கோயில் குளம் தூர் வாரப்பட்டபோது கிடைத்த மர்மமான பொருள் வெடித்துச் சிதறியது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, நேற்று ஐஜி நாகராஜன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும் வெடிகுண்டுச் சோதனை நிபுணர்களும் அந்த இடத்தைச் சோதனை செய்துவருகின்றனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு, தீவிர சோதனை நடைபெற்றுவருகிறது. நேற்று, மேலும் ஒரு வெடிகுண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ‘சி.ஜி.ஆர்.எல் 84 எம்எம் என்ற ரகத்தைச் சேர்ந்த இந்த வெடிபொருள் ராணுவ தடவாளத்தில் பயன்படுத்தக்கூடியது.

கண்டெடுக்கப்பட்ட 
குண்டு
கண்டெடுக்கப்பட்ட குண்டு

கடந்த ஞாயிறு அன்று வெடித்தது, 2007ல் தயாரிக்கப்பட்டதாகவும், தற்போது கைப்பற்றப்பட்டது, 2009-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது’ எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை பல்லாவரத்தில், ராணுவப் பயிற்சியளிக்கும் அதிகாரிகள் பயிற்சிக் கழகம் உள்ளது.

இங்குள்ளவர்கள், சிங்கபெருமாள் கோயில் அருகே உள்ள அனுமந்தபுரம் வனப்பகுதியில் பயிற்சிபெறுவார்கள். பயிற்சியின்போது வெடித்த உலோகப் பொருளின் பாகங்களை அப்பகுதியினர் இரும்பு வியாபாரிகளிடம் விற்றுவிடுவார்கள். அப்போது, வெடிக்காத குண்டுகளும் அவர்களுக்குக் கிடைத்திருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.

வெடிகுண்டு சோதனை
வெடிகுண்டு சோதனை

இந்த நிலையில், இன்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அப்பகுதியில் மோப்ப நாய்களுடன் சோதனை செய்துவருகிறார்கள். வெடிக்காத குண்டுகள் இந்தப் பகுதிக்கு வந்தது எப்படி என்பது குறித்தும் விசாரணை நடத்திவருகிறார்கள். இந்த நிலையில், அப்பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழைய இரும்புக் கடை நடத்திவந்த ரஹீம் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.