Published:Updated:

`செய்வினையை எடுக்காவிட்டால், உன் மகன் உயிருக்கு ஆபத்து!'- பெண்ணை ஏமாற்றிய 3 போலி சாமியார்கள்

`வீட்டில் உள்ள செய்வினையை எடுக்கவில்லை என்றால், உன் மகனின் உயிருக்கு ஆபத்து' என்று பெண்ணைத் தந்திரமாக மிரட்டிப் பணம் பறித்த போலி சாமியார்கள் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

போலி சாமியார்கள்
போலி சாமியார்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், பழனியம்மாள். இவரது வீட்டுக்கு, சில மாதங்களுக்கு முன்பு வந்த ஒருவர், தன்னை சாமியார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, பழனியம்மாளின் கையில் எலுமிச்சம் பழத்தை வைத்து, அவரது நிகழ்காலம், எதிர்காலம் குறித்து வாக்கு சொல்லியிருக்கிறார். சாமியார் தெரிவித்த வாக்கு, பழனியம்மாளின் குடும்பச் சூழ்நிலையுடன் ஒத்துப் போகவே, சாமியாரை பயபக்தியோடு வணங்கியுள்ளார்.

தன்னை சாமியார் என்று பழனியம்மாள் முழுமையாக நம்புவதை அறிந்துகொண்டு, அவரின் அறியாமையைப் பயன்படுத்தி, ''உங்க வீட்டுல செய்வினை இருக்கு. அதை எடுக்கவில்லை என்றால், உன் மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். செய்வினை செய்ததே, உங்க வீட்டு தோட்டத்தில் உள்ள புதையலை நீங்க எடுக்கக்கூடாதுன்னு தான். தற்போது, அந்தப் புதையலை எடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. அதை எடுக்கவில்லை என்றால், உங்கள் மகன் உயிர் ஆபத்தில் முடியும்" என்று தந்திரமாகக் கூறியிருக்கிறார். இதனால் பயந்துபோன பழனியம்மாள், செய்வினையை எடுக்கும்படி கேட்டுள்ளார்.

மத்தூர் காவல் நிலையம்
மத்தூர் காவல் நிலையம்

போலி சாமியாரின் வாக்கால் பயந்துபோன பழனியம்மாள், முதலில் 10 ஆயிரமும் 2-வது முறையாக 50 ஆயிரமும் 3-வது தவணையாக வீட்டிலிருந்த நகைகளை எல்லாம் அடகு வைத்து 45 ஆயிரத்தை வங்கி மூலமாக போலி சாமியாருக்குக் கொடுத்துள்ளார். பழனியம்மாளிடமிருந்து பணத்தை வாங்கினார்களே தவிர, செய்வினையை எடுக்கவில்லை.

இந்த நிலையில், 'செய்வினையை நான் ஒருவன் மட்டுமே எடுக்க முடியாது, உதவிக்கு இரண்டு பேர் வேண்டும்' என மேலும் 50 ஆயிரம் பணம் கேட்டு தொந்தரவு செய்யவே, சந்தேகமடைந்த பழனியம்மாள், `முதலில் செய்வினையை எடுங்க, பிறகு மீதி பணத்தைத் தருகிறேன்' என்று தெரிவித்துவிட்டு, மத்தூர் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துவிட்டார்.

கடந்த 25-ம் தேதி இரவு, செய்வினையை எடுப்பதற்காக பென்னாகரத்தைச் சேர்ந்த சுரேஷ், ஈச்சம்பாடியைச் சேர்ந்த செந்தில்குமார், குமாரபாளையத்தைச் சேர்ந்த சிவா மூவரும் பழனியம்மாளின் வீட்டுக்கு காரில் வந்து இறங்கியுள்ளனர். அப்போது, அங்கு மறைந்திருந்த மத்தூர் போலீஸார், மூவரையும் மடக்கிப்பிடித்து விசாரணை செய்தபோது, பழனியம்மாள் நிலத்தில் செய்வினை இருப்பதாகத் தந்திரமாக மிரட்டி பணம் மோசடி செய்ததாக, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.

Vikatan

இந்தச் சம்பவம் தொடர்பாக, மத்தூர் காவல் ஆய்வாளர் பழனிசாமியிடம் பேசினோம். ``மூவரும் திட்டமிட்டு, பழனியம்மாளின் அறியாமையைப் பயன்படுத்தி செய்வினை, புதையல் என மோசடிசெய்து, மூன்று தவணையாக 1 லட்ச ரூபாய்க்கும் மேல் பறித்துள்ளனர். மூவரையும் பிடித்து விசாரித்ததில், போலிகள் என்பது தெரியவந்தது. இவர்கள்மீது மோசடி வழக்குகள் உள்ளதா என்று விசாரித்துவருகிறோம்'' என்றார்.