Published:Updated:

`ஏய் தள்ளி நின்னு பேசு. எனக்கும் ஒட்டிக்கும்!' - டிராஃபிக் போலீஸாரின் செயலால் கலங்கிய இயக்குநர் ரமணா

Ramana Chandrasekar
Ramana Chandrasekar

காவலர் ஒருவர், ` ஏய்... தள்ளி நின்னு பேசுடா. மேல எச்சில் படப்போகுது... உன் நோய் எனக்கும் ஒட்டிக்கும்' என்று பேசியதால், மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

நடிகர் விஜய்-யின் கரியரில் திருப்புமுனையாக அமைந்த படம், திருமலை. இந்தப் படத்தைத் தொடர்ந்தே, விஜய் பல ஆக்‌ஷன் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தனுஷை வைத்து 'சுள்ளான்' படத்தையும் விஜய்யை வைத்து இரண்டாவதாக 'ஆதி' என்ற படத்தையும் இயக்கினார், ரமணா. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர், படம் இயக்குவதிலிருந்து விலகியிருந்தார். தற்போது, கேன்சரிலிருந்து முழுமையாகக் குணமடைந்துவிட்டார்.

இந்நிலையில், காவல்துறை அதிகாரி ஒருவர் தரக்குறைவாகப் பேசியதுகுறித்து ஃபேஸ்புக்கில் அவர் வேதனை தெரிவித்துள்ளார். அவரது பதிவில், `கண்ணியம்மிக்க காவல்துறை மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. நான் சந்திக்க நேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் குமரன், காவலர் ராமர் ஆகிய இருவரும் அந்தக் கண்ணியமான, நேர்மையான அதிகாரிகள் வட்டத்துக்குள் வராதது மட்டுமல்லாமல், ஒரு சராசரி மனிதப்பிறவியாகக்கூட கருதத்தகுதியற்றவர்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

Ramana with family
Ramana with family

`என்ன நடந்தது?' என இயக்குநர் ரமணாவிடம் கேட்டோம். ``பிள்ளைகளின் பிறந்தநாளுக்காக நான், என் மனைவி, மகளுடன் காரில் வெளியே சென்றிருந்தேன். பட்டினப்பாக்கம் சிக்னல் அருகே யூ டர்ன் எடுக்கவேண்டியிருந்தது. பச்சை சிக்னல் தென்பட்டது. நான் யூ டர்ன் செய்தேன். அப்போது, சிக்னல் மாறியதை நான் கவனிக்கவில்லை. உடனே அங்கிருந்த காவலர் ராமர், காரை நிறுத்தச்சொல்லி வழிமறித்து, நான் விதியை மீறி திரும்பியதாகக் கூறி அபராதம் கட்டச் சொன்னார். ஆனால், நான் விதியை மீறவில்லை எனக் கூறி அபராதம் கட்ட மறுத்தேன். அதற்கு அவர், என்னை காரில் இருந்து இறங்க வற்புறுத்தி, எனது லைசென்ஸை வாங்கி, அங்கு அபராதம் விதித்துக்கொண்டிருந்த உதவி ஆய்வாளர் குமாரிடம் தந்தார்.

அதற்கு நான், அந்த உதவி ஆய்வாளரிடம் அபராதம் கட்டுவதற்காக காவலரிடம் என் லைசென்ஸை தரவில்லை. எனக்கு வாகனம் ஓட்டத் தகுதி இருப்பதற்கு அத்தாட்சியாக மட்டுமே தந்ததாகவும் கூறி, அபராதம் கட்ட மறுத்தேன். அப்போது உதவி ஆய்வாளர் குமார் என்னைப் பார்த்து, `ஏய்... தள்ளி நின்னு பேசுடா... மேல எச்சில் படப்போகுது. உன் நோய் எனக்கு ஒட்டிக்கும்...' என்று கூற, கேன்சரால் பாதிக்கப்பட்டதை அறிந்தும் அவர் அப்படிப் பேசியதில் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

கேன்சரால் பாதித்தவனை அரசாங்கத்தின் காவல்துறையில் பொறுப்பிலிருக்கும் ஒருவர், இப்படி மனிதாபிமானமற்ற முறையில் பேசியது வேதனைக்குறியது மட்டுமல்ல, கண்டிக்கத்தக்கதும்கூட. அதைவிடக் கொடுமை. அழைத்துவந்த காவலர் ராமரிடம், ``பாதியிலயே சாவப்போறவனயெல்லாம் என்கிட்ட கூட்டிக்கிட்டு வந்து என் உயிர ஏன் எடுக்குற..?” என்று கடுகடுத்தார். நான் அவரிடம், ``நீங்கள் அப்படிப்பேசுவது தவறு” என்று சுட்டிக்காட்டினேன்.

Director ramana
Director ramana

அதற்கு, `அப்படித்தாண்டா பேசுவேன். நீ என்ன...’ என்று தன் பதவியையும் பொறுப்பையும் உணராமல் கீழ்த்தரமாகப் பேசினார். கோபத்தால் நானும் அவரை, அவர் கூறிய அதே வார்த்தைகளால் திருப்பித்திட்ட, வாக்குவாதம் நீடித்தது. அப்போது, உண்மையை உணர்ந்த மற்றொரு உதவி ஆய்வாளர் என்னை சமாதானப்படுத்தி, அபராதம் விதிக்காமல் அங்கிருந்து என்னை அனுப்பிவைத்தார்.

அங்கு நிலவிய சூழலால் நானும் காரை எடுத்துக்கொண்டு நகர, சற்றுதூரம் வந்தவுடன் என் ஒரிஜினல் லைசென்ஸ் அந்த கண்ணியமற்ற காவல் அதிகாரிடம் இருப்பதை உணர்ந்து, மீண்டும் அவ்விடத்திற்கு காரை திருப்ப முயன்றேன். என் மகள் தர்ஷினி, `வேண்டாம்ப்பா... நீங்க மறுபடியும் போகவேண்டாம். நான் சென்று வாங்கிவருகிறேன்’ என்று கூறினார். மேலும் சூழலை சிக்கலாக்க விரும்பாமல், மகளை லைசென்ஸ் வாங்க அனுப்பினேன்.

Ramana fb post
Ramana fb post

ஆனால், குமார் என்ற உதவி ஆய்வாளர், பெண் என்ற காரணத்தாலும் அவளின் அமைதியான குணத்தையும் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அவளை வேண்டுமென்றே நீண்ட நேரம் காத்திருக்கவைத்து, `உன் அப்பன் என்னை எதிர்த்துப் பேசியதால், அபராதம் கட்டினால்தான் லைசென்ஸை தருவேன்' என்று நிர்பந்தித்தார்.

அருகிலிருந்தவர்கள்கூட,` அந்தப் பெண்ணை அனுப்பிடுங்க. நீண்ட நேரமாக நிற்கிறாள்’ என்று சொல்லியும், `நிக்கட்டும் அவ அப்பன் கொஞ்ச பேச்சா பேசுனான்’ என்று கூறியுள்ளார். இறுதியாக, அபராதம் கட்டித்தான் கொண்டுவந்தார். அபராதம் கட்டியதை என் மகள் என்னிடம் கூறவில்லை. இரவுதான் கூறினாள்.

அரசாங்கத்தின் விதிமுறைகள், ஆணைகள் மக்களை நெறிப்படுவதற்காக இருக்க வேண்டும். மாற்றாக, இதுபோன்ற மனிதாபிமானமற்ற மோசமான செயலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு சாதகமாய் இருப்பது வேதனை. குறிப்பாக, கேன்ஸர் பாதித்த ஒருவனையே இப்படி அந்த ஆய்வாளர் நடத்துவாறென்றால்... சராசரி மக்களிடம் அவரது அணுகுமுறை என்னவாக இருக்கும் என்று நினைக்கவே பயங்கரமாக உள்ளது. ” என்றார் வேதனையான குரலில்.

ரமணாவுக்கு நேர்ந்தது குறித்துப் பேசும் காவல்துறை அதிகாரி ஒருவர், ``இந்த விவகாரம் தொடர்பாக நேரடியாக ரமணாவிடமும் அவரது மகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு