Published:Updated:

காரைக்காலில் பஞ்சமின்றி கிடைக்கும் கஞ்சா! - சாட்டையை சுழற்றுமா போலீஸ்?

drugs
drugs ( prasanna venkatesh.b )

கஞ்சா புகைப்பதை கண்டித்த தாய் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

"கஞ்சா புகைப்பதை கண்டித்த தாய் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். கஞ்சா மயக்கத்தில் வகுப்புக்கு வந்த மாணவர்களைத் தட்டிக்கேட்ட ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளார். பள்ளி மாணவர்கள் பலர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமைகளாகி, தகாத செயல்களில் ஈடுபடும் அபாயம் நேர்ந்திருக்கிறது" - இப்படி கஞ்சா மற்றும் போதை வஸ்துகளால் தள்ளாடும் காரைக்கால் மாவட்டம் குறித்த செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

drugs
drugs
prasanna venkatesh.b

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஹைவே நகரில், ரவி என்பவரின் வீட்டிலிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் சுமார் 100 சில்லறை வியாபாரிகளின் முகவரியும் செல்போனும் இருந்திருக்கின்றன. 'சிறிய நகரமான காரைக்காலில் இத்தனை போதை வஸ்து விற்பனைக் கடைகளா?' என்று அதிகாரிகளே மலைத்தனர்.

சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுமென அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 'இனி இத்தொழிலை செய்வதில்லை என்றும், கூலி வேலைக்குச் செல்லப் போவதாக’ பொய்யான தகவலை அந்நபர் கூறியதால் கருணை அடிப்படையில் ரூ.30,000 மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டது. அதே நபர் மறுபடியும் கஞ்சா வியாபாரத்தில் முழு மூச்சில் ஈடுபடுவது கண்டு சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் பள்ளி இடைவேளையின் போதே கஞ்சா புகைத்து அரை மயக்கத்தில் வந்ததை கண்டித்த ஆசிரியரை அன்று மாலையே பள்ளிக்கு வெளியில் கடுமையாக தாக்கியுள்ளனர். காவல் நிலையத்தில் புகாரானால் பள்ளியின் பெயர் கெடுமென பள்ளி நிர்வாகம் மூடி மறைத்துவிட்டது.
Karaikal Beach
Karaikal Beach
prasanna venkatesh.b

கடந்த ஆகஸ்ட் 4 -ம் தேதி காரைக்காலிலிருந்து இலங்கைக்குப் படகு மூலம் கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுபோல் காரைக்காலிலிருந்து முத்துப்பேட்டைக்கு கார் மூலம் கடத்திச் செல்லப்பட்ட 400 கிலோ கஞ்சா, 60 கிலோ பிரவுன்சுகர் கைப்பற்றப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கஞ்சா, கோக்கைன் மற்றும் போதை மாத்திரைகள் எல்லாம் பள்ளிக்கூடங்கள் அருகிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் மாணவர்களிடையே போதைப் பழக்கம் அதிகரித்து வருவது கண்டு பெற்றோர்களும் ஆசிரியர்களும் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

இதுபற்றி காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

"காரைக்காலில் குறிப்பாக நகரிலுள்ள இரண்டு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பயன்படுத்தும் பழக்கம் அதிகம் உள்ளது. சமீபத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் பள்ளி இடைவேளையின் போதே கஞ்சா புகைத்து அரை மயக்கத்தில் வந்ததை கண்டித்த ஆசிரியரை அன்று மாலையே பள்ளிக்கு வெளியில் கடுமையாக தாக்கியுள்ளனர். காவல் நிலையத்தில் புகாரானால் பள்ளியின் பெயர் கெடுமென பள்ளி நிர்வாகம் மூடி மறைத்துவிட்டது. இது போன்ற சம்பவங்கள் தொடர்வதால் போதை பழக்கமுள்ள மாணவர்களைக் கண்டிக்கவே ஆசிரியர்கள் தயங்குகின்றனர்.

drugs
drugs
prasanna venkatesh

தீன் நகரில் வசிக்கும் ஹாஜா நாச்சியார் என்ற பெண்மணி கஞ்சா புகைக்க காசு கேட்ட மகனுக்குப் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மகன் முஹமது சாதிக் என்பவன் தாயைக் கத்தியால் குத்திவிட்டான். கஞ்சா வெறி அவனை இந்நிலைக்குத் தள்ளியுள்ளது. அவன் மீது வழக்கு போட்டுச் சிறையில் அடைத்துள்ளோம். தமிழகக் கடலோரப் பகுதிகள் கடலோரக் காவல்படை மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. ஆனால், சுமார் 11 கிலோ மீட்டர் நீளமுள்ள காரைக்கால் கடற்பகுதியைக் கண்காணிக்க ஆளில்லை. 30 பேர் கொண்ட காரைக்கால் கடலோரக் காவல்படையில், வெறும் 3 பேர்தான் பணியில் இருக்கிறார்கள்.

கடலில் ரோந்து சென்று கண்காணிக்க உள்ள படகும் வெகு காலமாக பழுதாகிக் இருக்கிறது. எனவே, இலங்கைக்குப் படகு மூலம் போதைப் பொருள்களை கடத்திச் செல்ல கடத்தல்காரர்கள் காரைக்காலை முக்கிய தளமாக்கிவிட்டனர். கஞ்சாவும் அதைப் புகைப்பதற்கு ஓ.சி.பி. பேப்பரும் சர்வ சகஜமாக விற்பனையில் உள்ளது. இதைத் தடுக்க வேண்டிய காவல் துறையின் முக்கிய அதிகாரி ஒருவரே எல்லா வகையிலும் மாமூல் வாங்கும் பணமலையாக இருக்கிறார்.

அவரைப் பற்றி மேலிடத்திற்குப் புகார் செய்தும் பலனில்லை. மாத்திரைகளையும் போதைக்காக மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய மாத்திரைகளை அளவுக்கு அதிகமாய் ஸ்டாக் வைத்திருந்த ஒருவரை கைது செய்து வழக்கு போட்டுள்ளோம்.

கஞ்சா விற்பனை முன்விரோதத்தால் மோதல்! - ஒருவர் கொலை; 6 பேருக்கு அரிவாள் வெட்டு

மீன்பிடித் தொழிலை விட போதைப்பொருள் கடத்தும் தொழிலில் அதிக பணம் கிடைக்கிறது என்பதற்காக சில மீனவர்களும் இத்தகைய தகாத செயலில் ஈடுபடுகின்றனர். இவர்களது நெட்வொர்க்கும் பெரிய அளவில் உள்ளது. போதை செலவுகளுக்காக மாணவர்களே வழிப்பறியில் ஈடுபடும் சம்பவங்களும் நடக்கின்றன. போதை தலைக்கேறியவுடன் மோசமான சகவாசமும் தொடர்கிறது. நாளுக்கு நாள் பெருகிவரும் போதை பழக்கங்களால் காரைக்கால் தள்ளாடுகிறது என்பதே உண்மை" என்றார் வேதனையுடன்.

மருத்துவர்கள் தரப்பு, "புகையிலைப் பழக்கத்தால் இளம்வயதினர் வாய் மற்றும் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நிறைய பேர் மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களை மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரிக்குப் பரிந்துரை செய்கிறோம். வாழ்க்கையைச் சீரழிக்கும் கஞ்சா போன்ற போதைப் பொருள்களை நாடவிடாமல், அவர்களைப் பாதுகாக்க வேண்டும்" என்று வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

அல்சைமர், தொழுநோய்க்கு மருந்தாக இருந்த கஞ்சா போதைப்பொருளான வரலாறு!  #DoubtOfCommonMan

இறுதியாக இதுபற்றி காரைக்கால் காவல் கண்காணிப்பாளர் மாரிமுத்துவிடம் விளக்கம் கேட்டோம். "சமீப காலமாக கஞ்சா மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் காரைக்காலில் அதிகரித்துள்ளது உண்மைதான். இதைத் தடுக்க இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி, சப் - இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் தலைமையில் சிறப்புக் காவல் படை அமைத்துள்ளோம். கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிடிபடுபவர்கள் மீது கடுமையான செக்‌ஷன்களில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கிறோம். விரைவில் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்" என்று முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு