Published:Updated:

`தாயாருக்கு உடல்நிலை சரியில்லை; பரோல் கொடுங்கள்!' - குர்மீத் ராம் ரஹீமின் கோரிக்கை நிராகரிப்பு

சிஷ்யைகள் இருவரைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தேரா சச்சா சௌதாவின் தலைவருக்கு பரோல் வழங்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

குர்மீத் ராம் ரஹீம்
குர்மீத் ராம் ரஹீம்

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் செல்வாக்கு மிக்கவராக விளங்கியவர் சர்ச்சைக்குரிய குர்மீத் ராம் ரஹீம். பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பல அவதாரங்களை எடுத்த இவர், 1990-ம் ஆண்டு முதல் தேரா சச்சா சௌதா என்ற அமைப்பின் தலைவராக இருந்தவர். பல சர்ச்சைகளில் சிக்கியவர். இவர் தங்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக இவரின் சிஷ்யைகள் இருவர் புகார் செய்தனர்.

Vikatan

அந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், இவரைக் குற்றவாளி என்று அறிவித்து, 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தீர்ப்பு வெளியானவுடன் குர்மீத் ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.

தற்போது குர்மீத் ராம் ரஹீம், ரோட்டாக்கில் உள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்றும், அவரைப் பார்ப்பதற்காக குர்மீத் ராம் ரஹீமை பரோலில் விடுவிக்க வேண்டுமென்றும் ரஹீமின் மனைவி ஹர்ஜித் கௌர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

குர்மீத் ராம் ரஹீம்
குர்மீத் ராம் ரஹீம்

இதற்கு முன்பாக, சிர்சா ஆசிரமத்தில் உள்ள தன் நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்றும், அதற்காக தம்மை பரோலில் விடுவிக்க வேண்டுமென்றும் கடந்த ஜூன் மாதம் மனுத் தாக்கல் செய்திருந்தார் குர்மீத் ராம் ரஹீம். பிறகு, அவரே அந்த மனுவை வாபஸ் பெற்றார்.