Published:Updated:

ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை; வீரர் தற்கொலை! - நள்ளிரவில் பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் நடந்தது என்ன?

Representational image
Representational image

சென்னையை அடுத்த பல்லாவரம் ராணுவக் குடியிருப்பில் ராணுவ அதிகாரியை சுட்டுக் கொலை செய்த வீரர், தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். நள்ளிரவில் நடந்த இந்தச் சம்பவம் பல்லாவரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் ராணுவ குடியிருப்பு உள்ளது. இதில் அதிகாரிகளுக்கான குடியிருப்பில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் ஜோஷி ஹவில்தார் குடும்பத்துடன் குடியிருந்து வந்தார். இவருக்குக் கீழ் ரைபிள் மேனாக ஜெக்தீர் என்பவர் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்றிரவு பிரவீன்குமாருக்கும் ரைபிள் மேனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரவீன்குமார், ரைபிள் மேன் ஜெக்தீரை அவதூறாக இந்தியில் திட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த ஜெக்தீர், பிரவீன்குமார் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

Representational image
Representational image

இதையடுத்து பிரவீன்குமார், வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, தூங்காமல் ஆத்திரத்தில் இருந்த ஜெக்தீர், துப்பாக்கியோடு பிரவீன்குமார் அறைக்குச் சென்றார். அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் பிரவீன்குமார் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தன.

ரத்த வெள்ளத்தில் அவர் இறந்தார். நள்ளிரவில் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டு பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பிரவீன்குமார் வீட்டுக்கு வந்தனர். அப்போது இன்னொரு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. உள்ளே சென்று பார்த்தபோது பிரவீன்குமாரும் அவரின் ரைபிள் மேனான ஜெக்தீரும் இறந்துகிடந்தனர்.

pallavaram
pallavaram
Vikatan

இதுகுறித்து பல்லாவரம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரரணயில் ரைபிள் மேன் ஜெக்தீர்தான் ராணுவ அதிகாரி பிரவீன்குமாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லாவரத்தில் நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு