Published:Updated:

இறந்த சடலங்களையும் விட்டுவைக்காத ஸ்வீட் மாஸ்டர்! - பாண்டியம்மாள் கொலை வழக்கில் 4 ஆயுள் சிறை

pandiyammal and her daughters
pandiyammal and her daughters

ஒரே இரவில் தாயையும் மூன்று மகள்களையும் கொலை செய்துவிட்டு இறந்தவர்களிடம் தவறாக நடந்த மாஸ்டர் உதயனுக்கு 4 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னையை உலுக்கிய கொலைகளில் பாண்டியம்மாள் மற்றும் அவரின் மூன்று மகள்கள் கொலையும் ஒன்று. ஈவு இரக்கமின்றி 4 பேரை நள்ளிரவில் கொலை செய்த சின்ராஜ் என்கிற உதயனை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. தற்போது உதயனுக்கு 4 ஆயுள் சிறைத்தண்டனைகளை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது மகிளா நீதிமன்றம்.

வழக்கின் ஃப்ளாஷ்பேக்

24.6.2016 - ராயப்பேட்டை பழைய போலீஸ் ஸ்டேஷன் பின்புறத்தில் உள்ள முத்துதெருவில் உள்ள மாடி வீடு பரபரப்பாகக் காணப்பட்டது. பூட்டிய வீட்டுக்குள் இருந்து தூர்நாற்றம் வீசுவதாக ராயப்பேட்டை காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் கோபாலகுரு தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று 4 பேரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர்கள் பாண்டியம்மாள், அவரின் மகள்கள் பவித்ரா, பரிமளா, சினேகா எனத் தெரியவந்தது. தவறான நட்பே இந்தக் கொலைக்கு முக்கிய காரணம் என்பதைக் கண்டறிந்த போலீஸார், கொலை செய்த ஸ்வீட் மாஸ்டர் சின்ராஜ் என்கிற உதயனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

udhyan
udhyan

பாண்டியம்மாளின் சொந்த ஊர் காரைக்குடி திருப்பத்தூர்- கட்டையாம்பட்டி கிராமம். பாண்டியம்மாளின் கணவர் சின்ராஜ். கருத்துவேறுபாடு காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் 3 பெண் குழந்தைகளைக் காப்பாற்ற பாண்டியம்மாள், காரைக்குடியில் உள்ள ஸ்வீட்ஸ் கடைக்கு வேலைக்குச் சென்றார். அங்குதான் உதயனை அவர் சந்தித்தார். இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. அப்போது, `உன்னையும் 3 குழந்தைகளையும் நான் பார்த்துக்கொள்கிறேன்' என்று உதயன் தெரிவிக்க, அதை பாண்டியம்மாளும் நம்பியுள்ளார். இதனையடுத்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அனைவரும் சென்னை வந்தனர். ராயப்பேட்டை முத்து தெருவில் கணவன்-மனைவி என்ற அறிமுகத்துடன் வாடகை வீட்டில் குடியிருந்தனர்.

உதயன், சென்னையிலும் ஸ்வீட்ஸ் தயாரித்து கடைகளுக்கு சப்ளை செய்துவந்தார். குழந்தைகளின் படிப்பு மற்றும் சில காரணங்களுக்காக உதயன், பாண்டியம்மாளின் கணவரின் பெயரான சின்ராஜ் பெயரில் வாழத் தொடங்கினார். இதனால் சின்ராஜ் என்கிற உதயன் என்ற பெயரில் ஆவணங்கள் இருந்தன. ஆரம்பத்தில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் சென்ற இவர்களின் வாழ்க்கையில் உதயனால் தொல்லைகள் வரத் தொடங்கின. பாண்டியம்மாளின் மகள் ஒருவரிடம், `என்னை நீ கல்யாணம் செய்துகொள்கிறாயா?' என்று உதயன், கேட்க வீட்டில் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.

Representational image
Representational image

இதனால் வீட்டைவிட்டு உதயனை பாண்டியம்மாள் விரட்டிவிட்டார். இருப்பினும் உதயன், பாண்டியம்மாள் வீட்டின் வாசலிலேயே தங்கியிருந்தார். அவ்வப்போது குடும்பச் செலவுக்காகப் பணமும் கொடுத்துவந்தார்.

2016 ஜூன் மாதத்தில் வாசலில் படுத்திருந்த உதயன், வீட்டுக்குள் சென்றார். உலக்கையால் பாண்டியம்மாளின் தலையில் அடித்துக் கொலை செய்தார். அடுத்து, அவரின் மகள்கள் 3 பேரையும் கொலை செய்தார். அதன்பிறகுதான் உதயனின் இன்னொரு முகம் வெளியில் தெரிந்தது. கொலை நடந்த பிறகு உயிரற்ற பாண்டியம்மாளின் மகள்களிடம் உதயன் தவறாக நடந்து கொண்டார். இந்தத் தகவல் பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. இதனால் ராயப்பேட்டை போலீஸார் உதயன் மீது கொலை மற்றும் வன்புணர்ச்சி ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நடந்தது. நீதிபதி மஞ்சுளா, தற்போது இந்த வழக்கில் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் கைதான உதயன் மீதான குற்றங்கள், சாட்சிகள் அடிப்படையிலும் ஆதாரங்கள் அடிப்படையிலும் நிரூபணமாகியுள்ளதால் 4 ஆயுள் தண்டனையும் 20,000 ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை என்றும் உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.

உலக்கையால் பாண்டியம்மாளின் தலையில் அடித்துக் கொலை செய்தார். அடுத்து, அவரின் மகள்கள் 3 பேரையும் கொலை செய்தார். அதன்பிறகுதான் உதயனின் இன்னொரு முகம் வெளியில் தெரிந்தது.
போலீஸ் விசாரணை அதிகாரி

பாண்டியம்மாள் மற்றும் அவரின் மகள்களின் சடலங்களை அவர்களது உறவினர்களிடம் போலீஸார் ஒப்படைத்தனர். அப்போது பாண்டியம்மாளின் தந்தை, `என் மகளையும் பேத்திகளையும் கொலை செய்த உதயனைத் தூக்கில் போடுங்கள்' என்று ஆவேசமாகக் கூறினார். தற்போது உதயனுக்கு 4 ஆயுள் தண்டனை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆயுள்காலம் முழுவதையும் சிறையிலேயே கழிக்க வேண்டிய சூழல் உதயனுக்கு ஏற்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு