Published:Updated:

தேடி அலைந்தது போலீஸ்... எக்ஸாம் ஹாலில் கொள்ளையன்!- ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ருசிகரம்

இதுவரை 7 வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறிய கொள்ளையன், 'போலீஸ் ஆகவேண்டும் என்பதே லட்சியம்' என்று கூறி காவல்துறையினரை அதிரவைத்திருக்கிறான்.

விஜயகாந்த்
விஜயகாந்த் ( வி.சதீஷ்குமார் )

வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டுக்கொண்டே இன்னொரு பக்கம் போலீஸ் வேலையில் சேர முயன்ற திருடனை, போலீஸ் தேர்வு எழுதிவிட்டு வந்தபோது கைதுசெய்த சம்பவம், மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்த்
விஜயகாந்த்
வி.சதீஷ்குமார்

மதுரையின் பல பகுதிகளில் தொடர்ந்து நகை பறிப்புச் சம்பவங்கள் நடந்துவருகின்றன. இதில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களைப் பிடிப்பது, காவல்துறைக்கு பெரும் சவாலாக இருந்துவருகிறது.

இந்த நிலையில், புதூரில் நகை பறிப்புச் சம்பவம் நடந்த இடத்திலுள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் ஆய்வுசெய்ததில், திருடனின் முகமும் அவன் வந்த டூவீலரின் பதிவு எண்ணும் நன்றாகப் பதிவாகி இருந்தது. அந்தப் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், அது கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த விஜயகாந்த் மற்றும் அவரது நண்பர் என்பதை உறுதிசெய்தது போலீஸ். விஜயகாந்த் வீட்டுக்குச் சென்று விசாரித்தபோது, சரியான தகவல் கிடைக்கவில்லை.

அந்தத் தெருவிலுள்ள அவனது நட்பு வட்டத்தில் போலீஸார் விசாரித்ததில், 'அவன் இங்குதான் இருக்கிறான், சீக்கிரம் போலீஸ் ஆகப்போவதாகக் கூறிக்கொண்டிருந்தான். இன்னைக்கு நடக்குற போலீஸ் தேர்வு எழுதப்போவதாக சொல்லிக் கொண்டிருந்தான்' என்றனர். மதுரையில் போலீஸ் தேர்வு நடக்கும் ஒவ்வொரு மையமாக விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர், கடைசியாக அழகர்கோயில் செல்லும் வழியிலுள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுதியதைக் கண்டுபிடித்தனர்.

அவன் இங்குதான் இருக்கிறான். சீக்கிரம் போலீஸ் ஆகப்போவதாகக் கூறிக்கொண்டிருந்தான். இன்னைக்கு நடக்குற போலீஸ் தேர்வு எழுதப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தான்.
ஊர்க்காரர்கள்

தேர்வு முடியும் வரை காத்திருந்த காவல்துறையினர், விஜயகாந்த் வெளியில் வந்தபோது பிடித்து, காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். முதற்கட்ட விசாரணையில், இதுவரை 7 வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறியவன், போலீஸ் ஆக வேண்டும் என்பதே லட்சியம் என்று கூறி, காவல்துறையினரை அதிர வைத்திருக்கிறான். சினிமாவைவிட நிஜத்தில் நடக்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.