Published:Updated:

`தவறு செய்திருந்தாலும் மகளை மன்னித்திருப்பேன்' - இன்ஜினீயரிங் மாணவி மனிஷாவின் தந்தை கதறல்

எஸ்.மகேஷ்

``ஆயிரம் தவறு செய்திருந்தாலும் மனிஷாவை மன்னித்திருப்பேன்'' என்று திருமணமான 7வது நாளில் தற்கொலை செய்த இன்ஜினீயரிங் மாணவியின் தந்தை கண்ணீர்மல்க கூறினார்.

manisha and abinraj
manisha and abinraj

சென்னை திரிசூலம், லட்சுமணன் நகரைச் சேர்ந்தவர் அபின்ராஜ். டிரைவரான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகனின் மகள் மனிஷாவுக்கும் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் நடந்து 7-வது நாளில் மனிஷா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன் மனிஷா, அபின்ராஜ், அவரின் தோழி அனிதா ஆகியோர் பேசிய ஆடியோ வெளியானது. அதன்பிறகு மனிஷாவின் தற்கொலை வழக்கில் அபின்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

manisha and abinraj
manisha and abinraj

மனிஷாவின் தந்தை முருகனிடம் பேசினோம். ``என்னுடைய சொந்த ஊர் நெல்லை மாவட்டம் புளியங்குடி. நான் சென்னையில் உள்ள இன்ஜினீயரிங் கல்லூரியில் பஸ் டிரைவராக பணியாற்றிவருகிறேன். எனக்கு ஒரு மகன், ஒரு மகள். மகள் மனிஷாவுக்கு 3 வயது இருக்கும்போது என் மனைவி இறந்துவிட்டாள். அதன்பிறகு கஷ்டப்பட்டு மகனையும் மகளையும் வளர்த்தேன். இரண்டு பேரையும் இன்ஜினீயரிங் படிக்க வைத்தேன்.

நான் பணியாற்றும் இன்ஜினீயரிங் கல்லூரியில்தான் மனிஷா இன்ஜினீயரிங் படித்தார். முதல் இரண்டு வருடம் ஹாஸ்டலில் தங்கியிருந்தார். மூன்றாமாண்டு வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்றுவந்தார். டிரைவர் அபின்ராஜிம் மனிஷாவும் காதலிப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதனால், மகளையும் அபின்ராஜையும் கண்டித்தேன். திரிசூலம், லட்சுமணன் நகரில் இருந்தால் பிரச்னை எனக்கருதி வீட்டை அனகாபுத்தூருக்கு மாற்றினேன்.

murugan
murugan
ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் காதல்; இன்ஜினீயரிங் மாணவியுடன் திருமணம்- 7வது நாளில் நடந்த சோகம்

அதன்பிறகு மகளின் காதலை மறந்துவிட்டேன். ஆனால் அவர்கள் இருவரும் எனக்கு தெரியாமல் காதலித்துவந்துள்ளனர். கடந்த ஆண்டு மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர், பாப்பாவை (மனிஷா) அழைத்துக்கொண்டு செல்கிறேன் என்று கூறினார். அதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். என்னிடம் போனில் பேசியவரிடம் நீங்கள் யார் என்று கேட்டேன். அதற்கு அவர் நான் அபின்ராஜ் என்று கூறினார். இதனால், என் மகளின் செல்போனில் பேசினேன். அந்த போனையும் அபின்ராஜ் எடுத்து பதிலளித்தார்.

கல்லூரியில் மாணவர்களை இறக்கிவிட்டு சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். போலீஸார் அபின்ராஜிடம் பேசினார்கள். அப்போது மாலையும் கழுத்துமாக இருவரும் வந்தார்கள். போலீஸாரிடம் நாங்கள் இருவரும் மேஜர் என்பதால் நண்பர்கள், உறவினர்கள் சாட்சியாக திருமணம் செய்துகொண்டதாகக் கூறினார்கள். அப்போது என் மகளிடம், `நீ படித்துமுடித்துவிட்டு அபின்ராஜை திருமணம் செய்து கொள்' என்று கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. என் பேச்சை மட்டும் அவர் கேட்டிருந்தால் இன்று மனிஷா உயிரோடு இருந்திருப்பார்.

manisha
manisha

வீட்டை விட்டு வெளியில் சென்ற நாள் முதல் மனிஷா என்னிடம் பேசவில்லை. கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி அதிகாலையில் திரிசூலத்திலிருந்து எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், மனிஷா இறந்துவிட்டதாகக் கூறினார். அதைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். குரோம்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறையில் என் மகளைப் பார்த்தேன். பல்லாவரம் காவல் நிலையத்தில் என் மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி புகார் கொடுத்தேன். சென்னையில் எனக்கு சொந்தம் என யாரும் இல்லாததால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அருகில் உள்ள மயானத்திலேயே மனிஷாவின் உடலை தகனம் செய்தேன். தற்போது என் மகனுக்காக உயிரோடு இருக்கிறேன்.

வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த எனக்கு திரிசூலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் மனிஷா மரணம் தொடர்பாக முக்கியமான ஆதாரம் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த நபரிடம் அந்த ஆதாரத்தைக் கேட்டேன். அவரின் செல்போனுக்கு மனிஷா, தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஒரு ஆடியோ ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். அந்த ஆடியோவைக் கேட்டு நான் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன். தாலி பிச்சைக் கேட்டு அனிதா என்ற பெண்ணிடம் மனிஷா கதறி அழுவதை என்னால் கேட்க முடியவில்லை. இப்படியொரு நிலைமை எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது.

abinraj
abinraj

அந்த ஆதாரத்தை எடுத்துக்கொண்டு பல்லாவரம் காவல் நிலையத்துக்குச் சென்றேன். அதைக்கேட்ட போலீஸார் தற்கொலை வழக்கை தற்கொலைக்குத் தூண்டியதாக மாற்றினர். அதன்பிறகு அபின்ராஜையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் என் மகள் மரணத்தில் இன்னமும் சில சந்தேகங்கள் உள்ளன. நள்ளிரவில் என் மகள் இறந்த தகவல் லட்சுமணன்நகரில் உள்ள பலருக்குத் தெரிந்துள்ளது. மனிஷாவின் கழுத்து, காலில் ரத்தக் காயங்கள் உள்ளன. அவர் தூக்குப் போட்டதால் கழுத்தில் காயங்கள் இருப்பதாக போலீஸார் சொல்கின்றனர். மனிஷாவின் சடலத்தை யார் கீழே இறக்கினார்கள், காலில் எப்படி காயம் ஏற்பட்டது போன்ற கேள்விகளுக்கு இன்னமும் பதில் இல்லை.

வீட்டை விட்டு அபின்ராஜ் வீட்டுக்குச் சென்ற மனிஷா அங்கு நிம்மதியாக வாழவில்லை என்று அந்தப்பகுதி மக்கள் சொல்கின்றனர். மேலும், பல சித்ரவதைகளை அவர் அனுபவித்துள்ளார். தாயில்லாமல் நான் மனிஷாவைக் கஷ்டப்பட்டு வளர்த்தேன். அவருக்கு இப்படியொரு நிலைமை வரும் என்று கனவில்கூட நினைக்கவில்லை.

கடைசிவரை தனக்கு நடந்த கொடுமைகளை மனிஷா என்னிடம் சொல்லவில்லை. ஆயிரம் தவறு செய்துவிட்டு மனிஷா என் வீட்டுக்கு வந்தால் கண்டிப்பாக அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டிருப்பேன்'' என்றவரால் தொடர்ந்து பேச முடியவில்லை.

manisha
manisha

அவருக்கு ஆறுதல் கூறி மீண்டும் பேச வைத்தோம்.

``மனிஷாவின் ஆடியோவைக் கேட்ட திரிசூலம் பகுதி மக்கள் ஒன்று திரண்டு அவரின் மரணத்துக்கு நீதிகேட்டு காவல்துறை உயரதிகாரிகளை என்னோடு சேர்ந்து சந்தித்தனர். அவர்கள் மட்டும் இல்லையென்றால் மனிஷாவின் மரணத்தில் மறைந்திருந்த உண்மைகள் மூடிமறைக்கப்பட்டிருக்கும். காவல் துறை அதிகாரிகளும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். மனிஷா பயன்படுத்திய செல்போன், லேப்டாப் ஆகியவற்றில் இன்னமும் சில உண்மைகள் இருக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே மனிஷாவின் செல்போன், லேப்டாப்பை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என்றார் கண்ணீர் மல்க.

அபின்ராஜ் குடும்பத்தினரிடம் பேச பலதடவை முயற்சி செய்தோம். ஆனால் அவர்கள் பேசவில்லை. அவர்களின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிட தயாராக உள்ளோம்.