Published:Updated:

நள்ளிரவு நேரம்... ரத்த வெள்ளத்தில் அம்மா, அப்பா... கதறிய சிறுவன்!- டெல்லியைப் பதறவைத்த கொலை

டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மற்றும் அவரது மனைவி கொலை வழக்கில் கைதானவர் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Murder
Murder

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விக்ரம் சிங் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் டெல்லியில் வசித்து வருகிறார். விக்ரம் சிங்குக்கு பிபிஓ நிறுவனத்தில் சீனியர் அசோசியேட்டர் பணி. இவர்களுடன் விக்ரமின் சகோதரர் சைலேந்திரா தங்கியுள்ளார். அதிகாலையில் குழந்தையின் அலறல் சத்தம் அருகில் குடியிருக்கும் அஜித்துக்குக் கேட்டுள்ளது. உடனடியாக அஜித் சென்று பார்த்தபோது, விக்ரமின் மனைவி ரத்த வெள்ளத்தில் படிக்கட்டுகளிலும் விக்ரம் மார்பில் ரத்தம் வழிந்த நிலையில் வீட்டு அறையிலும் கிடந்துள்ளனர்.

Crime
Crime

விக்ரமின் 7 வயது மகன் அழுதுகொண்டிருந்தான். அப்போது அந்த வீட்டில் நான்காவதாக ஒரு நபர் இருப்பதைக் கண்டார். அதற்குள் அக்கம்பக்கத்திலிருந்த சிலர் அங்கு வந்து அந்த நபரைப் பிடித்தனர். இந்தத் தகவலை உடனடியாக விக்ரம் சகோதரர் சைலேந்திராவுக்குத் தெரிவித்தார். சைலேந்திரா கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அதிகம் ரத்தம் வெளியேறியதால் இருவரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விக்ரம் மற்றும் அவரது மனைவியைக் கொலை செய்தது அவரது நண்பர் அபிநவ் அகர்வால் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து விக்ரம் சகோதரர் சைலேந்திரா பேசுகையில், “அபிநவ் அகர்வாலும் எனது அண்ணன் விக்ரமும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரே அலுவலகத்தில் பணியாற்றி வந்தனர். வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அபிநவ் அகர்வால் ரூபாய் 1.5 லட்சம் விக்ரமிடமிருந்து வாங்கினார். ஆனால் அவர் சொன்னபடி வேலை வாங்கித்தரவில்லை. சரி வேலைதான் வாங்கித் தரவில்லையே பணத்தை திருப்பித் தாருங்கள் எனக் கேட்டார். இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதுண்டு.

Murder
Murder

இந்த விவகாரத்தைப் பேசி முடிக்கலாம் எனக் கூறி புதன்கிழமை வீட்டுக்கு வந்தார். இரவு 9.30 மணி இருக்கும் இருவரும் வீட்டின் மாடியில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். நான் அருகில் இருக்கும் எனது உறவினர் வீட்டுக்குச் சாப்பிடச் சென்றேன். இரவு உணவு முடித்துவிட்டு அங்கேயே உறங்கிவிட்டேன். அதிகாலை 3.50 மணியளவில் சத்தம் கேட்டு வீட்டிற்குச் சென்றேன். வீட்டின் தரையில் ரத்த வெள்ளத்தில் அண்ணன் கிடந்தார். படிக்கட்டுகளுக்கு மேலே எனது அண்ணி காயங்களுடன் கிடந்தார். இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளோம். விசாரித்து வருகின்றனர்” என்றார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் பேசுகையில், ``அபிநவ் அகர்வாலிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பணம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்திருப்பதாக தெரிகிறது. அபிநவ் இரவில் அந்த வீட்டிலே தங்கியுள்ளார். நள்ளிரவில் விக்ரம் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தபோது அவரை கடுமையாகத் தாக்கி கொலை செய்துள்ளார். அவரது சத்தம் கேட்டு மனைவி ஜோதி சிங் கண் விழித்துப் பார்த்துள்ளார். உடனே உதவிக்கு ஆட்களை கூப்பிட சத்தம் போட்டுக்கொண்டு அறையைவிட்டு வெளியே ஓடியுள்ளார். அவரை பின் தொடர்ந்த அகர்வால் மாடிப்படியில் வைத்து கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு அவர்களது 7 வயது மகன் கண்விழித்து பார்த்துள்ளான்.

நள்ளிரவு நேரம்... ரத்த வெள்ளத்தில் அம்மா, அப்பா... கதறிய சிறுவன்!- டெல்லியைப் பதறவைத்த கொலை

சிறுவனை அபிநவ் எதும் செய்யவில்லை. தந்தை ரத்தவெள்ளத்தில் தட்டுத் தடுமாறி செல்வதைப் பார்த்து சிறுவன் பயத்தில் கத்தியுள்ளான். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் எழுந்து வந்துள்ளனர். இதற்கிடையில் வீட்டிலிருந்து அபிநவ் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அந்த மாடிக்குடியிருப்பின் மெயின் கேட் பூட்டியிருந்ததால் வெளியில் தப்பிச் செல்ல முடியவில்லை. மாடி வழியாக தப்பிக்க ஓட முயன்றுள்ளார். ஆனால், பொதுமக்கள் அவரை பிடித்துவிட்டனர். விக்ரம் சகோதரர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் வீட்டில் கிடைக்க வில்லை. அபிநவிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.