அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், சுகாதாரத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர் விஜயபாஸ்கர். இவர் 2016-21 காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். தொடர்ந்து 2021, அக்டோபர் 18-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரிலுள்ள விஜயபாஸ்கரின் வீடு உட்பட தமிழகம் முழுவதும் அவர் தொடர்புடைய 50 இடங்களில் ஒரே நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கோடிக்கணக்கில் பணம், நகை, ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டன.

இதில், ரூ.35,79,90,081 வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்ததாக, விஜயபாஸ்கர், அவருடைய மனைவி ரம்யா ஆகியோர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது. இந்த நிலையில்தான், இன்று லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி இமயவர்மன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார், இது தொடர்பாக, புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், 216 பக்கங்களைக்கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.
முன்னாள் அமைச்சர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஏற்கெனவே குட்கா வழக்கு, ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடா வழக்கு ஆகியவற்றில் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி அ.தி.மு.க சீனியர் நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தபோது, ``பழிவாங்கும் நடவடிக்கைகளை தி.மு.க அரசு தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. விஜயபாஸ்கர், சிறந்த அமைச்சராகச் செயல்பட்டவர்.

தற்போதும் விராலிமலை எம்.எல்.ஏ-வாகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். அவரை முடக்குவதற்காகத்தான் இந்த நடவடிக்கைகளெல்லாம் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, விரைவிலேயே நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கின்றனர். தி.மு.க-வில் அமைச்சர்கள் பலர் வெளிப்படையாகவே ஊழல் செய்கின்றனர். அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். எங்கள் முன்னாள் அமைச்சர்கள் குற்றமற்றவர்கள். இதிலிருந்தெல்லாம் மீண்டு வருவார்கள்" என்றனர்.