ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

கண்ணதாசன் பேட்டிகள்

தொகுப்பாசிரியர்: ஆர்.பி.சங்கரன்ஜூ.வி. நூலகம்

##~##

ண்மை பேசினால் எப்படி இருக்கும்... என்பதற்கு உதாரணம் இந்தப் புத்தகம்!

பொய்மை, பாசாங்கு ஏதும் இல்லாமல் சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் பேசத்தெரியாத மனிதனாக வாழ்ந்து மறைந்தவர் கண்ணதாசன். புகழின் உச்சிக்கு வந்தபோதும் தன் மீதான எந்தப் புகாரையும் மறைக்காமல் ஒப்புக்கொண்டு, அதைத் தன்னுடைய நேரடி வாக்குமூலமாகவே பதிவு செய்த சத்தியவான். திரும்பிய பக்கம் எல்லாம் இவரது திரை இசைப் பாடல்கள் ஒலித்த நேரத்தில்கூட, ''இவை தொழில் ரீதியாக எழுதப்படும் பாடல்கள். இவை எல்லாமே எனக்கு உடன்பாடானவை என்று சொல்லிவிட முடியாது. எல்லாம் தேவைக்கேற்ப, சம்பவங்களுக்கு ஏற்ப எழுதப்படுபவை. டைரக்டர்களும் தயாரிப்பாளர்களும் சொல்கிறபடிதான் எழுத வேண்டியிருக்கிறது'' என்று சர்வசாதாரணமாய்ச் சொல்லியவர். ஆனால் அவை, சாகாவரம் பெற்றவையாக இன்றும் இரவுகளில் நம்மைத் தாலாட்டுகின்றன.

கண்ணதாசன் பேட்டிகள்

கவிஞருக்கு நெருக்கமான இரண்டு நண்பர்களே அந்தக் காலகட்டத்தில் முதல் அமைச்சர்களாக இருந்தனர். அந்த இருவரையும் சம தராசில் வைத்து விமர்சிக்க இவர் தயங்கவில்லை. 'கருணாநிதி அற்புதமான நிர்வாகி. லஞ்சம், ஊழல், விளம்பர ஆசை ஆகியவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால், அவர் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் சதாவதானி’ என்று சொல்லும் துணிச்சலும், 'எனக்கு அரசவைக் கவிஞர் பதவியை முதல்வர் எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். அவரை அதிகம் விமர்சித்த எனக்கும் ஒரு பதவியைக் கொடுத்ததற்குக் காரணம், நான் எனது துறையில் வகித்த செல்வாக்கு மட்டுமே'' என்ற நெத்தியடியும் கண்ணதாசனுக்கு மட்டுமே உரியது.

''நாங்கள் மாலையில் மேடையில் ஒருவரை ஒருவர் காரசாரமாகத் தாக்கிக் கொள்வோம். இரவு 10 மணிக்கு மேல் தொலைபேசியில் ஒருவரை ஒருவர் குசலம் விசாரித்துக்கொள்வோம்'' என்று தனக்கும் அன்றைய முதல்வர் கருணாநிதிக்குமான தொடர்பைச் சொல்லிவிட்டு, ''எங்கள் வெளிப் பேச்சை மட்டும் வைத்துக்கொண்டு ஏமாறாதீர்கள்'' என்று கண்ணதாசன் சொல்வது அரசியலே எத்தகைய நாடகம் என்பதை அம்பலப்படுத்துகிறது. 'தமிழ்நாட்டில் தகுதியே தேவைஇல்லாத தொழில்கள் இரண்டுதான். ஒன்று அரசியல். இன்னொன்று சினிமா’ என்று இரண்டிலுமே இருந்த கண்ணதாசன் சொல்கிறார்.

கண்ணதாசன் - சோ இருவரும் நடத்திய ஒரு சந்திப்பு இதில் முழுமையாக உள்ளது. யாரைப் பாராட்டி எழுதினோமோ அவர்களைத் திட்டி எழுதவேண்டி இருப்பதைச் சொல்லிவிட்டு, 'இனி செத்துப்போனவர்களைப் பற்றி மட்டுமே எழுதுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்’ என்கிறார் கண்ணதாசன். உடனே சோ, 'அப்படியானால் ஜனநாயகத்தைப் பற்றி எழுதுங்கள்’ என்கிறார். இப்படி எத்தனையோ சுவாரஸ்யங்கள் இந்தப் புத்தகத்தில் உண்டு. இந்தத் தொகுப்பைப் படித்து முடித்து மூடிவைத்த பிறகும் நெஞ்சைக் கனக்கவைக்கும் ஒரு செய்தி... அன்று நடந்த இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக்கு கண்ணதாசன் அழைக்கப்படவில்லை என்பதுதான். வாழ்ந்த காலத்தில் உதாசீனம் செய்துவிட்டு, செத்த பிறகு சிலை வைக்கும் சமூகம்தானே நாம்?

- புத்தகன்