ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

''ஊழலை விடவா என் கார்ட்டூன் களங்கம் ஏற்படுத்துகிறது?''

''ஊழலை விடவா என் கார்ட்டூன் களங்கம் ஏற்படுத்துகிறது?''

##~##

ரு பத்திரிகையாளரை அரசுக்குப் பிடிக்காமல் போனால், என்ன செய்யலாம்? சரியான நேரம் வரும் வரை காத்திருந்து, சிக்கும்போது தேசத்துரோக வழக்கைப் போடலாம். அதிர்ச்சி அடையாதீர்கள். கான்பூர் கார்டூனிஸ்ட் அசீம் திரிவேதி மீது அப்படித்தான் வழக்குப் போட்டு, அவரைக் கைது செய்து இருக்கிறது அரசு. 

இந்திய நாடாளுமன்றத்தை விமர்சித்து, அதை கழிப்பறை​போல் வரைந்து அதற்கு 'தேசியக் கழிப்பறை’ என்று பெயர் கொடுத்திருந்தார் அசீம் திரிவேதி. அதே போல், இந்திய அரசின் சிங்க லட்சிணையை விமர்சித்து - சிங்கங்களை ரத்தம் ஒழுகும் ஓநாய்கள்​போல் வரைந்து 'வாய்மையே வெல்லும்’ என்னும் வாசகத்தை 'ஊழலே வெல்லும்’ என்று குறிப்பிட்டு வரைந்திருந்தார். 'தேசியச் சின்னங்களையும் அரசியல் சாசனத்தையும் அவமதிக்கும் வகையிலும் கலவரத்தைத் தூண்டும் வகையிலும் அவருடைய சித்திரங்கள் இருந்தன’ என்பதுதான் அசீம் திரிவேதியைக் கைதுசெய்ய காவல்துறை சொன்ன நியாயம்.

''ஊழலை விடவா என் கார்ட்டூன் களங்கம் ஏற்படுத்துகிறது?''

''நான் ஓர் காந்தியவாதி. நான் இந்தச் சமூகத்தை எப்படிப் பார்க்கிறேனோ, அப்படியே என்னுடைய கலையைப் பிரதிபலிக்கிறேன். இந்த நாட்டின் நாடாளுமன்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் மதிப்பும்நொறுங்கிக்​கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் ஆட்சி​யாளர்கள்தான். இந்த நாட்டுக்கு ஊழல் ஏற்​படுத்தாத களங்கத்தையா என்னுடைய கேலிச்​சித்திரங்கள் ஏற்படுத்தி விட்டன?''  என்று நியாயம் கேட்கிறார் அசீம் திரிவேதி.

''பிரச்னை, அசீம் திரிவேதி வரைந்த கேலிச்​சித்திரங்கள் அல்ல. கடந்த ஆண்டு, அரசாங்கத்தை அண்ணா ஹஜாரே குழுவினர் நிலைகுலைய வைத்தபோது, அவர்களுடைய பிரசாரத் துப்பாக்கிகளின் முக்கியமானதோட்டாக்​ ​களாக இருந்தவை அசீம் திரிவேதியின் கேலிச்​சித்திரங்கள்தான். இணையத்தில் அவர் வெளியிட்ட கேலிச்சித்திரங்கள் சமூக ஊடகங்களில் அலை அலையாகப் பரவின. அரசின் மானத்தை வாங்கின. அரசு நீண்ட காலமாகவே அவரைக் குறிவைத்துக் காத்திருந்தது. இப்போது, ஹஜாரே குழுவுக்கு மக்களின் ஆதரவு சரிந்துவிட்ட நிலையில்,அரசு பழி தீர்த்துவிட்டது'' என்கின்றனர் மும்பைப் பத்திரிகையாளர்கள். குஜராத்தில் மோடியை விமர்சித்ததற்காக ஹரீஷ் யாதவ், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை விமர்சித்த​தற்காக பேராசிரியர் அம்பிகேஷ் மகா​பத்ரா, மகாராஷ்டிரத்தில் இப்போது அசீம்திரிவேதி... விமர்சனங்களைச் சகித்துக்கொள்ள எந்த கட்சியின் தலைவருமே தயாராக இல்லை!

அரசியல்வாதிகள் தங்களை விமர்சிப்போர் மீது காட்டும் வஞ்சத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கவனத்தையேனும் குறையைத் திருத்திக்கொள்வதில் காட்டினால் கூட நாடு  உருப்பட்டு விடும்!

- மகா.தமிழ் பிரபாகரன்