உச்ச நீதிமன்றத்தில் வழக்கு... கலக்கத்தில் வருவாய்த்துறை
##~## |
பிப்ரவரி 18... ஒட்டுமொத்த வருவாய்த் துறை ஊழியர்களும் கலக்கத்தோடு எதிர்பார்க்கும் தேதி!
வருவாய்த் துறை ஊழியர்களுக்கு பதவிஉயர்வு வழங்குவது தொடர்பான வழக்கின் விசாரணை அன்றுதான் உச்ச நீதிமன்றத்தில் இறுதி கட் டத்துக்கு வருகிறது. துணை தாசில் தார், ஆர்.டி.ஓ., மாவட்ட வருவாய் அலுவலர் என்று பல உயர் அதி காரிகளின் பதவிக்கு வேட்டு வைக் கும் சமாசாரங்கள் அந்த வழக்கில் அடங்கி இருக்கின்றன.
வருவாய்த் துறையில் அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்கள், ரெக்கார்டு கிளர்க் குகள் ஆகியோர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு எழுதி பணியில் சேரு கின்றனர். அவர்கள், துறைத் தேர்வுகள் எழுதி... உதவியாளர், துணைத் தாசில்தார், தாசில்தார் என்று

படிப்படியாகப் பதவி உயர்வு பெறுகின்றனர். குரூப்-2 தேர்வு மூலம் நேரடியாக உதவியாளர் பணியில் சேருபவர்கள், துறைத் தேர்வுகள் எழுதி பதவிஉயர்வு மூலம் அடுத்த பதவிகளை அடைகின்றனர். உதவியாளரில் இருந்து துணைத் தாசில்தாராகப் பதவிஉயர்வு பெறுவதில்தான், இரு கோஷ்டிக்கும் பல ஆண்டுகளாக சகோதரச் சண்டை நடக்கிறது.
குரூப்-4 மூலம் பதவிக்கு வருபவர்கள் உதவியாளர் பணியில் இருந்து துணைத் தாசில்தார் பதவியை அடைய எட்டு ஆண்டுகள் அனுபவம் வேண்டும். இந்த நிலையில், கடந்த 1992-ம் ஆண்டு அரசு ஓர் உத்தரவு பிறப்பித்தது. 'துணைத் தாசில்தார் பதவி உயர்வுக்கு நேரடி உதவியாளர்களுக்கு ஐந்து ஆண்டுகள் அனுபவம் போதும். துணைத் தாசில்தார் பதவி உயர்வில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்’ என்கிறது அந்த உத்தரவு. அப்போது ஆரம்பித்த இந்தப் பிரச்னை இப்போது உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு பதவிஉயர்வு வருவாய்த் துறை அலுவலர்கள் நலச்சங்க நிர்வாகி ரத்தினசாமி, ''டிகிரி படித்தவர்கள் என்பதால்தான், அவர்கள் குரூப்-2 தேர்வு மூலம் நேரடி உதவியாளராக வருகிறார்கள். குரூப்-4 தேர்வு மூலம் வந்த பலர், பணியில் சேர்ந்த பிறகு டிகிரி முடித்து இருக்கின்றனர். டிகிரி படித்தவர்கள் என்ற காரணத்துக்காக, நேரடி உதவியாளர்களுக்கு மட்டும் எப்படி

துணைத் தாசில்தார் பதவி உயர்வில் முன்னுரிமை கொடுக்க முடியும்? பல ஆண்டுகள் சர்வீஸ் செய்துவிட்டு துணைத் தாசில்தார் பதவி உயர்வுக்காகக் காத்திருப்போம். ஆனால், எங்களுக்குப் பிறகு, வேலையில் சேரும் நேரடி உதவியாளர்கள்... சீக்கிரமே துணைத் தாசில்தார், தாசில்தார் என்று பதவிஉயர்வு வாங்கிக்கொண்டு சீனியரான எங்களை விரட்டி வேலை வாங்குவார்கள். இது எந்த விதத்தில் நியாயம்?
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். 'துணைத் தாசில்தார் பதவி உயர்வில் டிகிரி படித்த நேரடி உதவியாளர்களையும், குரூப்-4 மூலம் ஜூனியர் அசிஸ்டென்ட்டாக வேலைக்குச் சேர்ந்தவர்களில் டிகிரி படித்து இருப்பவர்களையும் சமமாகக் கருத வேண்டும். பத்தாம் வகுப்பு படித் தவர்களைத் துணைத் தாசில்தாராகப் பதவி உயர்வு கொடுப்பது தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்து கொள்ள வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. துணைத் தாசில்தார், தாசில்தார் பதவி களுக்கு டிகிரி தகுதி தேவைஇல்லை என்று தமிழக அரசும் முடிவு செய்தது.
இந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் பிப்ரவரி 18-ம் தேதி பதில் மனுத் தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவு போட்டுள்ளது. துணைத் தாசில்தார் பதவி உயர்வு தொடர்பான தனது நிலைப்பாட்டை அரசு பதில் மனுவாகத் தாக்கல் செய்ய இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் தீர்ப்பை பொறுத்துதான் நேரடி உதவியாளர்களாக இருந்து பதவிஉயர்வு மூலம் துணைத் தாசில்தார், தாசில்தார், ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அலுவலர்களின் பதவி தப்பும். இல்லை என்றால், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.டி.ஓ-வாகவும், தாசில்தார்கள் துணைத் தாசில்தார்களாகவும் பதவிஇறக்கம் செய்யப்படுவது நடக்கும். சில மாவட் டங்களில் துணைத் தாசில்தார் பதவி உயர்வுப் பட்டியலை சீரமைத்து வெளியிட்டு உள்ளனர். அதில், 100-க்கும் அதிகமான துணைத் தாசில்தார்களாகப் பதவிஉயர்வு பெற்ற நேரடி உதவியாளர்கள், மீண்டும் உதவியாளர்களாகப் பதவிஇறக்கம் செய்யப் பட்டுள்ளனர். உடனே அவர்கள், உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளனர். இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. நல்லது நடக்கும் என்று நம்புகிறோம்'' என்றார்.
நேரடி உதவியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ரங்கநாதன், ''அரசாங்கத்துக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக இருப்பது வருவாய்த் துறைதான். ஊழலை ஒழிக்கவும் பணியின் தரத்தை மேம்படுத்தவும்தான் டிகிரி படித்த எங்களை நேரடி உதவி யாளர்களாக நியமிக்கிறார்கள். பத்தாம் வகுப்பு, ப்ளஸ் டூ படித்து விட்டு வருகிறவர்கள் செய்யும் வேலைக்கும், டிகிரி முடித்தவர்கள் செய்யும் வேலைக்கும் வித்தியாசம் இருக்கும். அதனால்தான், துணைத் தாசில்தார் பதவி உயர்வில் டிகிரி படித்த நேரடி உதவியாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. டாக்டர்கள், ஆசிரியர்கள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் போன்ற எல்லாப் பணிகளுக்கும் கல்வித் தகுதி இருக்கிறது. துணை தாசில்தார், தாசில்தார் பதவிகளுக்கு எந்தத் கல்வித் தகுதியும் கிடையாது என்பதுதான் வேதனை'' என்றார்.
உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்புத் வழங்கப் போகிறது?
- எம்.கார்த்தி
படம்: ஆர்.எம்.முத்துராஜ்