திருப்பூர் மாவட்டம், பல்லடம் கே.அய்யம்பாளையம் பகுதியிலுள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றிவருபவர், ஒடிசாவைச் சேர்ந்த அர்ஜூன்குமார் (26). இவர் மனைவி கமலினி (24). கர்ப்பிணியான கமலினி கடந்த 22-ம் தேதி பிரசவத்துக்காக, தாராபுரம் சாலையிலுள்ள திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கமலினிக்கு அன்றைய தினமே ஆண் குழந்தை பிறந்தது.
பிரசவத்துக்குப் பிறகு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கமலினிக்கு அருகே சிகிச்சைக்காக எஸ்தர் ராணி என்ற பெண் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உதவியாக உமா என்ற பெண் இருந்திருக்கிறார். அருகருகே இருந்ததால் உமா, கமலினியின் குழந்தையை கவனித்து உதவி செய்திருக்கிறார். இந்த நிலையில், உமா உதவி செய்துவந்ததால், அர்ஜூன்குமார் செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்றிருக்கிறார்.

வேலை முடிந்து செவ்வாய்க்கிழமை மாலை, மருத்துவமனைக்கு வந்த அர்ஜூன்குமார் மனைவி கமலினியிடம் குழந்தையைக் கேட்டிருக்கிறார். அப்போது, குழந்தையை இன்குபேட்டரில் வைக்க செவிலியர்கள் கேட்டதாகக் கூறி, உமா வாங்கிச் சென்றதாகத் தெரிவித்திருக்கிறார். இன்குபேட்டர் அறைக்குச் சென்று பார்த்தபோது, உமாவும் குழந்தையும் இல்லாதது தெரியவந்தது. வார்டுக்கு வந்தபோது, அருகே அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்தர் ராணியையும் காணவில்லை.
இது குறித்து தகவலறிந்து வந்த திருப்பூர் தெற்கு போலீஸார், மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில், எஸ்தர் ராணி, அவருடைய கணவர், உமா மூவரும் சேர்ந்து குழந்தையைக் கடத்திச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர்.

எஸ்தர் ராணியின் செல்போன் எண்ணுக்கு தொடர்புகொண்டபோது, அது விழுப்புரத்தில் கடைசியாக ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது தெரியவந்தது. எனவே, அவரின் புகைப்படங்களை வெளியிட்டு போலீஸார் தேடுதலைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். இதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி, குழந்தை கடத்தப்பட்டு மீட்கப்பட்டது. தற்போது ஒரு மாதத்திலேயே மீண்டும் ஒரு குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பாதுகாப்பில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.