பணம்... பதவி... துப்பாக்கி!
##~## |
வடசென்னையில் ரயில்வே பொருட்களை இறக்கிஏற்றும் கான்ட்ராக்ட் பிரச்னையில், குடியரசு கட்சிப் பிரமுகர் பாளையம் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டதில், பிரபல ரௌடி நாகேந்திரன் தரப்புக்கு லாபம் சில கோடிகள்!
* ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள பிரபல தொழில் நிறுவனங்களிடம் இருந்து பழைய இரும்புகளை வாங்கும் பிசினஸில் பல கோடிகள் புழங்கும். இதில் ஏற்பட்ட தகராறில் புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த குமரன் என்ற பிரமுகரை மதுரையைச் சேர்ந்த கூலிப்படையினரை ஏவிக் கொன்றார் குன்றத்தூர் பிரமுகர்.
* காஞ்சி மடத்து மேலாளர் சங்கரராமன் கொலையில் சம்பந்தப்பட்ட கதிரவன், தென்சென்னையில் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து 74 லட்சத்தைப் போலீஸ் கைப்பற்றியது.
* மதுரை அட்டாக் பாண்டி போன்ற ரௌடிகளுக்கு பணம் முக்கியமல்ல... அரசியல் பதவிகள்தான். 'எனக்கு கட்சியிலோ, ஆட்சியிலோ பதவி தருவீர்களா?' என்று சொடக்குப்போடும் தளபதிகளும் இருக்கின்றனர்.

* கூலிப்படையினரை ஏவி தொழில் அதிபர்கள், அவர்களின் வாரிசுகளைக் கடத்திச் சென்று கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டும் கும்பல் சென்னை பகுதியில் அதிகம்.
* கூலிப்படையினருக்கு கள்ளத் துப்பாக்கிகள் தேவைப்படுமே... சினிமாவில் வரும் துப்பாக்கிச் சந்தையைப்போல ரகசியமாக கள்ளத் துப்பாக்கி குடோன்களை தமிழகத்தில் நடத்தும் சிலர் இருக்கின்றனர். தமிழகத்தில் எங்கே கூலிப்படை துப்பாக்கியுடன் பிடிபட்டாலும், அதைக் கொடுத்தது திண்டுக்கல் மோகன்ராம் என்பது விசாரணையில் வெளிவரும். பிரபல ரௌடியான இந்த மோகன்ராம், பீகாரில் உள்ள தனது நண்பர்கள் மூலமாக மலிவு விலையில் துப்பாக்கிகளை வாங்குவான். தமிழகத்தில் உள்ள கூலிப்படைக்கு அந்தத் துப்பாக்கிகளை கொழுத்த லாபத்துக்கு விற்பான். இவன் சில நாட்களுக்கு முன், கோவையில் பிடிபட்டிருக்கிறான்.
- இதுவரை சொன்னதெல்லாம் கூலிப்படையினரின் ஆதிக்கம் தமிழகத்தில் பரவி இருப்பதற்கு சில உதாரணங்கள். முன்பெல்லாம் கூலிப்படையினருக்கு விலைப்பட்டியல் உண்டு. கை, கால் எடுக்க ஒரு

ரேட்... தலை எடுக்க ஒரு ரேட் என்று நிர்ணயித்து இருந்தனர். சென்னையில்தான் கூலிப்படையின் எண்ணிக்கை அதிகம். ரேட்டும் இங்கே அதிகம். அடுத்த ரேங்கில் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுச்சேரி ஆகியவை இருந்தன.
இப்போது, கொலை செய்யும் கூலிப்படை இளைஞர்களுக்கு கொடுக்கும் பணம் மிகவும் குறைவு. கூலிப்படைத் தலைவனுக்கோ பணம் கோடிகளில் புரள்கிறது. தென்சென்னையில் சி.டி. மணி தலைமையிலான கோஷ்டியை கோபத்துடன் பார்க்கிறது போலீஸ். திண்டுக்கல் பாண்டியின் கூட்டாளியாக இருந்த 'கட்டை' என்ற அடைமொழியை வைத்திருக்கும் ஒரு பிரமுகருடன், இப்போது புதிதாக இணைந்திருப்பது யார் தெரியுமா? திண்டுக்கல் பாண்டியின் மகன் பாண்டியராஜ். தங்கள் கஸ்டடிக்குள் தென்சென்னையை கொண்டுவருவதில் கூலிப்படையுடன் வலம் வருகிற இன்னொரு பிரமுகர் ஆற்காடு என்ற அடைமொழியை வைத்திருப்பவர். இப்போது தலைமறைவாகத் திரியும் இவரின் பெயரைக் கேட்டாலே, புளியந்தோப்பு, வியாசர்பாடி ஏரியாக்கள் அலறும். பூந்தமல்லி நீதிமன்றம் அருகே, சின்னா என்பவரைக் கொலைசெய்த விவகாரத்தில் தொடர்புடையவர். மூன்று கொலை, ஐந்து கொலை முயற்சிகள், ஒரு ஆள் கடத்தல் என்று இவருக்குத் தனியாக குற்ற வரலாறு உண்டு. தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தும் கூலிப்படை இளைஞர்களை விமானத்தில் அழைத்துச் சென்று, காரியத்தை நிறைவேற்றுகிறவர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்...
தமிழக சட்டசபையில், போலீஸ் மானியக் கோரிக்கையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, ''நாங்கள் பொறுப்பேற்ற பிறகு, குற்ற சதவிகிதம் குறைந்துள்ளது. ஆதாயக் கொலைகள் என்பது மிகக் கொடியவை. எனது ஆட்சியில் ஆண்டுக்கு 5.2 சதவிகிதம் என்ற அளவுக்கு கொலைகள் குறைந்துள்ளன. கொலைச் சம்பவங்களில் பெரும்பாலானவை குடும்பப் பிரச்னை, காதல் விவகாரங்கள், வாய்த் தகராறு, நிலப் பிரச்னைகள் காரணமாக நடத்துள்ளன. திடீரென ஏற்படும் உண்ர்ச்சிக் கொந்தளிப்பின் காரணமாக நடக்கும் இதுபோன்ற கொலைகளைப் போலீஸாரால் தடுக்க இயலாது. கூலிப்படையினரால் நிகழ்த்தப்படும் கொலைகளை காவல் துறையால் கட்டுப்படுத்த முடியும். 2011-ம் ஆண்டு கூலிப்படையால் செய்யப்பட்ட கொலைகள் ஆறு. இதுவே 2012-ம் ஆண்டு மூன்று என குறைந்துள்ளது'' என்று புள்ளிவிவரங்களை அடுக்கினார்.

இதோ.... தலைநகர் சென்னை, புளியந்தோப்பு பகுதியில் அண்மை காலகட்டத்தில் ஒன்பது கொலைகள் நடந்துள்ளன. இவற்றில், கூலிப்படையை ஏவி நடந்தவை ஐந்து என்று போலீஸாரே சொல்கிறார்கள். இந்த மாத தொடக்கத்தில் ஆரம்பித்து ஏப்ரல் 20-ம் தேதி வரை தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் கூலிப்படையால் செய்யப்பட்ட கொலைகள் 18-ஐ தாண்டுகிறது.
கூலிப்படைகளை ஒழிக்கவே முடியாதா? என்று, சென்னையில் உள்ள க்ரைம் போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ''சிறைச்சாலைதான் கூலிப்படையினருக்கு பயிற்சி மையமாக மாறிவருகிறது. அங்கே எல்லாமே தாராளமாகக் கிடைக்கிறது. பிரபல தொழில் அதிபர் ஒருவரின் குடும்ப உறுப்பினர் சமீபத்தில் சிறைக்குச் சென்றார். உயர் அதிகாரியின் டேபிளில் அமர்ந்து தினமும் பிரியாணி சாப்பிடுகிறார். அவர் தினமும் செய்யும் செலவு பல ஆயிரங்கள். கேட்டால், அவர் சொன்னார்... இவர் சொன்னார் என்று கீழ்மட்ட அதிகாரிகள் சமாளிக்கிறார்கள். கூலிப்படையின் தலைவர்கள், யாரைக் கொலை செய்யலாம் என்று நாள் முழுவதும் ஆலோசனை செய்கிறார்கள். செல்போனில் உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்கள். எப்படி கொலை செய்வது என்று, சிறையில் டெமோ செய்துகாட்டினாராம் ஒருவர். இதற்கெல்லாம் முடிவு கட்டினால்தான் கூலிப்படையினரின் அட்டகாசம் குறையும். சிறை வாசலில் மத்திய ரிசர்வ் படையினரை நிறுத்தி சோதனை நடத்த வேண்டும். பிரபல ரௌடிகளை ஒரே சிறையில் அடைக்கக் கூடாது. கைதிகளுக்கு உதவும் அதிகாரிகள் மீது தயவுதாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மொத்தத்தில் ஜெயில், ஜெயிலாக இருக்க வேண்டும். அப்போதுதான் கூலிப்படைகளைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்'' என்கிறார்.
சிறைச்சாலை இப்படியென்றால்... போலீஸுக்கும் கூலிப்படையினருக்கும் கூட 'லிங்க்' உண்டு என்று அதிரவைக்கிறார் மதுரைப் பிரமுகர் ஒருவர். அது...
அடுத்த இதழில்...