ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

கரிசனம் காட்டும் கேரளா.. கண்டுகொள்ளாத ஜெயலலிதா!

திருப்பூர் சிறுமி பலாத்காரம்..

##~##

லைநகர் டெல்லியில் மட்டுமல்ல... நாட்டின் எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது சிறுமிகள் பாலியல் பலாத்கார கொடுமைகள். திருப்பூரில் இரண்டாம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், கேரள சட்டசபை வரை எதிரொலித்திருக்கிறது.

 கடந்த 12 தேதி மாலை... திருப்பூர், சத்யா நகரில் வசித்த எட்டு வயது கேரளச் சிறுமி, பள்ளி முடிந்து வீடு திரும்பினாள். பனியன் கம்பெனி கூலித் தொழிலாளியான தாய் வேலைக்குச் சென்றுவிட்டதால், வீட்டில் தனியாக இருந்தாள். இரவில் வீடு திரும்பிய தாய், படுக்கையில் தனது மகள் அலங்கோலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, தனியார் மருத்துவமனைக்கு மகளை கொண்டு சென்றார். திருப்பூர் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கரிசனம் காட்டும் கேரளா.. கண்டுகொள்ளாத ஜெயலலிதா!

போலீஸ் விசாரணையில் குற்றவாளிகள் உடனே பிடிபட்டனர். சிறுமியின் வீட்டுக்கு அருகில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன், தேவேந்திரன், சரவணன், ராஜா ஆகிய நான்கு இளைஞர்கள் தங்கி இருந்தனர். நால்வரும் அன்று மாலை வீட்டில் மது அருந்தியுள்ளனர். இதில் கண்ணன் என்பவன், சிறுமி தனியாக இருப்பதை அறிந்து, வீட்டுக்குள் நுழைந்துள்ளான். 'அண்ணா... என்னன்ணா வேணும்?’ என அன்புடன் கேட்ட சிறுமியை, படுக்கையில் தள்ளி வாயை அடைத்து பலாத்காரம் செய்துள்ளான் அந்தக் கொடூரன். சிறுமியை மிக கொடூரமான முறையில் வன்புணர்ச்சிக்கு ஈடுபடுத்தியவன், அவள் முகத்தில் தலையணையை அழுத்தி கொலைசெய்யவும் முயற்சித்துள்ளான்.

விசாரணையில் இந்த விவரங்கள் தெரியவர, நான்கு வாலிபர்களையும் கைதுசெய்தது போலீஸ். சிறுமியை பலாத்காரம் செய்த கண்ணன் மீது, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது போலீஸ். மற்ற மூவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வாரம் கடந்த பிறகும், சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. இதையடுத்து, சிறுமியை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த 21-ம் தேதி இரவு மாற்றிய மாவட்ட நிர்வாகம், சிகிச்சைக்கான முழுச் செலவையும் ஏற்பதாக அறிவித்தது.

கரிசனம் காட்டும் கேரளா.. கண்டுகொள்ளாத ஜெயலலிதா!
கரிசனம் காட்டும் கேரளா.. கண்டுகொள்ளாத ஜெயலலிதா!

இதற்கிடையே, ஏற்கெனவே அறிவித்தபடி 22-ம் தேதி காலை மறியல், கடையடைப்பு போராட்டம் நடந்தது. மறியல் ஆரம்பித்த ஒரு சில நொடிகளில் போலீஸார் தடியடி நடத்தினர். 57 பேரை போலீஸார் கைதுசெய்தனர். இதைக் கண்டித்து, ஜனநாயக மாதர் சங்கத்தினரும் மறியல் நடத்த, அவர்களையும் கைதுசெய்தது போலீஸ்.

சிறுமிக்கு உயர்தர சிகிச்சை வழங்கக்கோரி மக்கள் நடத்திய போராட்டம் குறித்த செய்திகள் பரவலாக வெளியாகின. சிறுமி மலையாளி என்பதால், கேரள மாநிலத்தில் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் வழங்கப்பட, கொந்தளித்தது கேரளா. இதுகுறித்து, கேரள சட்டசபையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அச்சுதானந்தன், 'ஆதரவற்ற ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமியை கேரளாவுக்கு அழைத்து வந்து, நல்ல முறையில் சிகிச்சையளிக்க வேண்டும்’ என்று வற்புறுத்தினார். சிறுமியின் மருத்துவச் சிகிச்சைக்கு உதவிசெய்யத் தயாராக இருப்பதாக அறிவித்த கேரள முதல்வர் உம்மன்சாண்டி, தமிழக அரசுடனும் பேசியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், உறவினர்களுடன் முதல்வர் உம்மன்சாண்டி மற்றும் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் ஆகியோர் நலம் விசாரித்தனர்.

கரிசனம் காட்டும் கேரளா.. கண்டுகொள்ளாத ஜெயலலிதா!

இதற்கிடையே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம், கேரள முதல்வர் உம்மன்சாண்டி போனில் பேசிய​தாகவும், 'சிறுமிக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்படும். அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிடுவார்கள்’ என, ஜெயலலிதா உறுதி அளித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அமைச்சர்கள் யாரும் சிறுமியை பார்க்க வியாழக்கிழமை வரை வரவில்லை. ''கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டு, அந்த மாநில முதல்வர் போனில் நலம் விசாரிக்கிறார். ஆனால், சம்பவம் நடந்து 12 நாட்களாகியும் தமிழக முதல்வர் இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை'' என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் காமராஜ்.

சிறுமியும் அவரது தாயும் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களைப் பார்க்க அனுமதி இல்லை. சிறுமியின் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது என்று, அவரது உறவினர்களிடம் பேசினோம். ''சேர்க்கப்பட்டபோது உடல் அளவில் இருந்த பாதிப்புகள் சற்று குறைந்துள்ளன. ஆனால், பெரிய அளவில் மாற்றம் இல்லை. மனதளவில் இன்னும் கொஞ்சம்கூட மீளவில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவிகள் செய்யப்படுகிறது'' என்றனர்.

இனியும் தொடரக் கூடாது இந்தக் கொடூரம்!

- ச.ஜெ.ரவி

படங்கள்: தி.விஜய்