ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

பெங்களூருவில் குண்டு வைத்தது நெல்லை தீவிரவாதிகளா?

பெங்களூருவில் குண்டு வைத்தது நெல்லை தீவிரவாதிகளா?

##~##

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரி கட்டுமா? என்பார்கள். சில தினங்களுக்கு முன் கர்நாடகாவில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை அதிர வைத்திருக்கிறது. 

அந்தச் சம்பவத்துக்கு காரணமானவர்கள் என, கர்நாடக போலீஸாரால் அடையாளம் காணப்பட்ட ஆறு பேர் மேலப்பாளையத்தை சேர்ந்தவர்கள் என்பதுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம். கர்நாடகாவில் மே 5-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் ஜுரம் அங்குள்ள அரசியல் கட்சிகளை ஆட்டிப் படைக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகம் அருகே கடந்த 17-ம் தேதி பைக் வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 11 போலீஸார் உட்பட 17 பேர் பலத்த காயம் அடைந்தனர். குண்டு வைத்தது யார்? என்பது குறித்து மத்தியப் புலனாய்வு அமைப்பும் கர்நாடகப் போலீஸாரும் தீவிரமாக விசாரித்தனர்.

பெங்களூருவில் குண்டு வைத்தது நெல்லை தீவிரவாதிகளா?

இந்த நிலையில்தான் நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த கிச்சான் புகாரி, பஷீர், பீர்முகமது, ரசூல் மைதீன், சலீம், முகமது சாலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கர்நாடகாவில் குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருப்பதால் இந்த வழக்கு விசாரணையை மத்தியப் புலனாய்வு அமைப்புகள் உன்னிப்பாகக் கவனிக்​கின்றன. இந்தச் சம்பவம் பற்றி தமிழகக் காவல் துறை அதிகாரி ஒருவர், ''சில வருடங்களுக்கு முன் தமிழகத்​தில் மத மோதல்கள் ஏற்பட்ட சமயத்தில்தான் மேலப்பாளையம் வெளியே தெரிய ஆரம்பித்தது. அதற்குப் பிறகு, கோவை குண்டு வெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களிலும் இங்குள்ள சிலருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தீவிரவாதச் செயல்களுக்காக இங்கு இருபது பேர் வரை சிறைக்குப் போயிருக்கிறார்கள். அதில் பலரும் விடுதலையாகிவிட்ட நிலையில், கோவை குண்டு வெடிப்பில் தொடர்புடைய நான்கு பேர் மட்டும் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். இப்படி இந்த ஊரில் உள்ள சில இளைஞர்களுக்கும் தடை செய்யப்பட்ட சில அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால், தீவிரவாத அமைப்புகளைக் கண்காணிப்பதற்காகக் காவல் துறையில் உருவாக்கப்பட்டு இருக்கும் பிரத்யேக

பெங்களூருவில் குண்டு வைத்தது நெல்லை தீவிரவாதிகளா?

புலனாய்வு அமைப்புகளின் பார்வை இந்த ஊரின் மீது பதிய ஆரம்பித்தது. அதனால், தீவிரவாத குணம் கொண்ட இளைஞர்கள் பலரும் வெளி இடங்களுக்குச் சென்றுவிட்டனர். அதனால், கடந்த மூன்று வருடங்களாக மேலப்பாளையத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனாலும், வெளியூரில் இருக்கும் இளைஞர்களுக்குள் ஒருங்கிணைப்பு இருப்பதை அறிந்து அவர்களைக் கண்காணித்தோம். பெங்களூரு குண்டு வெடிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த வாகனம் பயன்படுத்தப்பட்டது. அத்துடன், இரு சக்கர வாகனத்தில் பைப் வெடிகுண்டை இணைத்து அதை வெடிக்கச் செய்திருப்பது தெரியவந்தது. பைப் வெடிகுண்டு தென் மாவட்டங்களில்தான் பிரபலம்'' என்றார்.

வெடிகுண்டு வெடித்த இடத்தில் உள்ள செல்போன் டவரில் அந்த சமயத்தில் பேசிய 600 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. அதில் 150 பேர் மீது சந்தேகம் எழுந்ததால் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதில் 30 பேர் மட்டும் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் செல்போனில் அதிகமாக பேசியதை உறுதிசெய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடந்திருக்கிறது.

இறுதியில், சென்னையில் தங்கி இருந்த பஷீர், பீர் முகமது ஆகியோருக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற முடிவுக்கு கர்நாடக காவல் துறை வந்திருக்கிறது. இதுபோன்ற தீவிரவாதச் செயல்களுக்குப் புதியவர்களான அவர்களிடம் போலீஸார் 'வழக்கமான’ பாணியில் விசாரணையை நடத்தியிருக்கிறார்கள்.  இந்தச் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது கிச்சான் புகாரி என்பதையும் அவருடன் இணைந்து செயல்பட்டவர்களின் பெயர்களையும் இருவரும் ஒப்பித்து விட்டனர். அதன்பிறகுதான், எல்லோரையும் கொத்தாக அள்ளிச் சென்றது கர்நாடக போலீஸ்.

பெங்களூருவில் குண்டு வைத்தது நெல்லை தீவிரவாதிகளா?

தமிழக உளவுப்பிரிவு அதிகாரி, ''1998-ல் நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 130-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த கிச்சான் புகாரி, அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பத்து வருடங்கள் சிறையிலிருந்து விடுதலையானார். அவர் மீது ஏழு கொலை வழக்குகள் இருந்தன. அதில் மூன்றில் ஆயுள் தண்டனை பெற்ற போதிலும் மேல்முறையீடு செய்து வழக்கில் இருந்து விடுதலை ஆனார். மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த டாக்டர் செல்லக்குமார், கண்ணன், முத்துக்கிருஷ்ணன், அபுபக்கர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும் இவருக்குத் தொடர்பு இருப்பதாக அந்த சமயத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கோவை சிறையில் இருந்த சமயத்தில் கேரளாவைச் சேர்ந்த மதானி உள்ளிட்ட பலருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. கிச்சான் புகாரி வெடிகுண்டு செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர் என்ற தகவல் கிடைத்திருப்பதால் அதுபற்றியும் அவரிடம் விசாரிக்கும் திட்டம் இருக்கிறது'' என்றார்.

ஆனால், கிச்சான் புகாரி உள்ளிட்டோரை கர்நாடக போலீஸ் கைதுசெய்து இருப்பதை தமிழக முஸ்லிம்

பெங்களூருவில் குண்டு வைத்தது நெல்லை தீவிரவாதிகளா?

அமைப்புகள் கண்டித்து இருக்கின்றன. 'இது, இஸ்லாமிய சமூகத்தை திட்டமிட்டு பழிவாங்கும் செயல்’ என பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன. த.மு.மு.க. சார்பில் மேலப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதுதவிர, பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்துப் பேசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவரான தெஹ்லான் பாகவி, ''குண்டு வெடிப்பு போன்ற வன்முறைச் சம்பவங்கள் எங்கு நடந்தாலும் அது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. அதே சமயத்தில் நிரபராதிகளை அரசியல் லாபத்துக்காகப் பிடித்துச் சென்று அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுவாக, தேர்தல் சமயங்களில் அரசியல் ஆதாயத்துக்காக ஒரே மாதிரியான சம்பவங்கள் நடப்பது நாடு முழுவதும் வழக்கமாகி விட்டது. தேர்தல் பரபரப்பு நேரத்தில் சாமி சிலைகள் உடைக்கப்படும் அல்லது அரசியல் கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்படும். அதன் தொடர்ச்சியாகக் கடையடைப்பு இருக்கும். அதில், வியாபாரிகள் மிரட்டப்படுவார்கள் இந்தப் பழிகள் எல்லாம் இஸ்லாமிய சமூகத்தின் மீது போடப்பட்டு மக்களிடம் அவர்கள் மீது கோபத்தை ஏற்படுத்துவார்கள்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில், அதுவும் அந்த மாநிலத்தில் பி.ஜே.பி-க்குப் பெரும் பின்னடைவாக இருக்கும் என பத்திரிகைகள் அனைத்தும் கணித்து இருக்கும் சூழலில், அங்கே குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது.

கிச்சான் புகாரியைப் பொறுத்தவரை அவரது 36 வயதில் 15 வருடத்தை சிறையில் கழித்துவிட்டு இப்போதுதான் வெளியே வந்திருக்கிறார். அவர், இஸ்லாமிய சமூக மக்கள் மேம்பட அறக்கட்டளை அமைத்து அதன் மூலமாக நல்ல செயல்களை செய்துகொண்டு இருந்தார். அவரை இந்த வழக்கில் திட்டமிட்டு சேர்த்திருக்கிறார்கள்.

மேலப்பாளையம் என்றாலே ஏதோ சமூக விரோதிகள் வாழும் இடம் என்பது போல திட்டமிட்டு பிரசாரம் செய்யப்படுகிறது. இதன் மூலம் அந்தப் பகுதியில் வசிக்கும் ஏழை இஸ்லாமிய இளைஞர்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் வாய்ப்புகள் மறுக்கப்படும் அவலம் இருக்கிறது. இதுபோன்ற செயல்கள் தொடர்வது இஸ்லாமிய மக்களை தனிமைப்படுத்துவதாக அமைந்துவிடும்'' என எச்சரித்தார்.

நித்தமும் ஷாக் தொடர்ந்துகொண்டே இருக்கிறது!

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்