ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

சவுதியில் செத்து மடியும் தமிழர்கள்!

ஆக்ஷனில் இறங்கிய ஜூ.வி.

##~##

''சார், நான் ஆத்தூரில் இருந்து பேசுறேன். என் வீட்டுக்காரர் பேரு தங்கவேலு. நாலு வருஷத்துக்கு முன்னால சவுதிக்கு வேலைக்குப் போனார். அங்க சொன்னபடி சம்பளம் தரலை. அங்கிருந்து திரும்பி வரவும் முடியலை. ஏதோ ஆபத்துல மாட்டிக்கிட்டார். ரகசியமா போன் செஞ்சு 'இனி நான் உங்களைப் பார்க்க முடியாது’னு சொல்லி அழுறார். நான் இரண்டு குழந்தைகளை வச்சுக்​கிட்டு கஷ்டப்படுறேன். என்ன செய்றதுன்னே தெரியலை. நீங்கதான் உதவி செய்யணும்'' என்று, நமது ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-66802929) போன் செய்து அழுதது அந்தப் பெண் குரல். 

பரபரவென காரியத்தில் இறங்கினோம். குரலுக்குச் சொந்தமான மகாலட்சுமியிடம் பேசி, சவுதியில் இருக்கும் தங்கவேலு பற்றிய தகவல்​களைத் திரட்டினோம். அடுத்த கட்டமாக சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தா மாநகரின் தமிழ்ச் சங்க உறுப்பினர் விஜயனைத் தொடர்புகொண்டு தங்கவேலுவின் நிலைமையைப் பற்றிச் சொன்னோம்.

ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் பெரும்உதவியால், போன உயிர் திரும்பியதுபோல் தன் சொந்த ஊருக்குத் திரும்பி வந்திருக்கிறார் தங்கவேலு. சவுதியில் அவர் பட்டபாடு சொல்லி மாளாது. அவரைப் பத்திரமாகத் திருப்பிக் கொண்டுவந்து அவருடைய வீட்டில் சேர்க்கும் வரை, மனைவி மக்களை மீண்டும் பார்ப்போம் என்ற நம்பிக்கையே இல்லை அவருக்கு.

சவுதியில் செத்து மடியும் தமிழர்கள்!

தங்கவேலுவை அவரது வீட்டில் சந்தித்தோம். ''சார் என்னுடைய சொந்த ஊர் ஆத்தூர் பக்கத்தில் இருக்கிற கல்பாகனூர். எட்டாம் வகுப்பு வரை படிச்​சேன். என் மனைவி மகாலட்சுமி. எங்களுக்கு ஒரு பையன். ஒரு பொண்ணு. எனக்கு சொந்தமான மூணு ஏக்கர் பூமியில் விவசாயம் செஞ்சுகிட்டு இருந்தேன். குடும்பச் சூழ்நிலை காரணமா அந்த பூமியும் கைமாறிப் போச்சு. ஆடு,மாடு மேய்ச்சுகிட்டு இருந்தேன். அப்போ சவுதியில் இருந்து வந்த எங்க தூரத்துச் சொந்தக்காரர் சேகர், 'இங்கு ஆடு மேய்ப்பதுபோல சவுதியில் ஆடு மேய்ச்சா கை நிறைய சம்பளம் தருவாங்க. 30 ஆடு, 30 பேரிச்சை மரம், 2 சொட்டுநீர் தெளிப்பான்... இதைப் பார்த்துக்கிட்டா போதும். மாசம் 700 ரியால் தருவாங்க. இந்தியக் கணக்குல மாசம் 9,000 வரும்’னு சொன்னார்.

அதை நம்பி 45 ஆயிரம் செலவுசெஞ்சு விசா எடுத்து, 35 ஆயிரம் விமான டிக்கெட் எடுத்து சவுதிக்குப் போனேன். அங்கு வாதிதிவாவாஸ் என்ற பாலைவனப் பகுதியில் ஷாக்​முத்ராக் என்பவர்கிட்ட சேகர் என்னை ஒப்படைச்சார். அவர், '100 ஆடுகள், 6 ஒட்டகங்கள், 647 பேரிச்சை மரங்கள், 5 சுழற்சி சொட்டு நீர் தெளிப்பான்களைப் பார்த்துக்கணும். சம்பளம் அப்புறமா சொல்றேன்’ என்றார்.

சவுதியில் செத்து மடியும் தமிழர்கள்!

அஞ்சு மாசம் கழிச்சு, 'மாசம் 600 ரியால் சம்பளம். சாப்பாட்​டுக்கு 250 ரியால், போனுக்கு 50 ரியால் பிடித்தது போக, 300 ரியால் கொடுப்போம். வருஷம் ஒரு முறை அடையாள அட்டை வாங்க 600 ரியால் செலவாகும். அதை உன் சம்பளத்தில்தான் பிடிப்போம்’னு சொன்னார். அதாவது, இந்தியக் கணக்குல மாசம் 3,500 சம்பளம். வருஷத்துக்கு ஒரு தடவை 7,000 பிடிச்சுக்குவோம்னு சொன்னாங்க.

இதை சேகரிடம் சொல்லி அழுதேன். 'சவுதியில் எல்லாரும் கஷ்டப்பட்டுத்தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. பேசாம போய் வேலையைப் பாரு’னு சொல்லிட்டாரு. நாலு வருஷம் வேலை பார்த்தும் வீட்டுக்குப் பணம் அனுப்ப முடியலை. கூடுதலா சம்பளம் கேட்டதுக்கு, என்னை அடிச்சு பாஸ்போர்ட்டையும் அடையாள அட்டையையும் பறிச்சுகிட்டு துரத்திட்டாங்க. திக்குத் தெரியாத பாலைவனத்துல சோறு தண்ணி இல்லாம தவிச்சேன். வெளியில அடையாள அட்டை இல்லாம திரிஞ்சா, போலீஸ் பிடிச்சு ஜெயிலில் போட்டுடும்.

தாங்க முடியாத மனவேதனையில் என் மனைவிக்கு போன் செய்து அழுதேன். அதன்பிறகுதான் என் மனைவி 'ஜூ.வி’-க்கு போன் செஞ்சு அழுதிருக்கு. அதையடுத்து, ஜெத்தா தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த விஜயன், நான் இருந்த வனாந்தர காட்டுக்கு வந்தாரு. போலீஸிடம் என்னைக் கூட்டிப்போனாரு. என் பொண்டாட்டி புள்ளைய பாக்க உதவி செஞ்சாரு. என்னைப்போல ஆயிரக்கணக்கான தமிழர்கள்

சவுதியில் செத்து மடியும் தமிழர்கள்!

வாழவும் முடியாம, திரும்பி வரவும் முடியாம, அங்க அவதிப்பட்டுக்கிட்டு இருக்காங்க. அவங்களையும் மீட்டு தாயகம் திரும்ப தமிழக அரசு உதவி செய்யணும்'' என்றார்.

அவரது மனைவி மகாலட்சுமி, ''என் வீட்டுக்காரரைக் காப்பாத்திக் கொடுத்த விகட​னுக்குக் கோடான கோடி நன்றி'' என்று உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.

சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தா தமிழ் சங்கத்தின் உறுப்பினர் விஜயனிடம் பேசினோம். ''சவுதியில் மலையாளிகளுக்கு அடுத்தபடியாக தமிழர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள மலையாள எம்.பி-க்கள் இ.அகமது, வயலார் ரவி போன்றவர்கள் வெளிநாடுகளில் வாழும் மலையாளிகள் மீது தனிக்கவனம் செலுத்தி, அடிக்கடி சவுதியில் நடத்தும் விழாக்களில் கலந்து கொள்கிறார்கள். அதனால், மலையாளிகளுக்கு சவுதியில் சின்னப் பிரச்னை ஏற்பட்டாலும், உடனே இந்தியத் தூதரகம் மூலம் தீர்க்கப்படுகிறது. ஆனால், ஒருமுறைகூட தமிழ் எம்.பி-கள் சவுதி தமிழ்ச் சங்கத்துக்கு வந்தது இல்லை. ஜெத்தா மாநகரில் 250 தமிழர்கள் நாடு திரும்பிவர முடியாமலும் தங்குவதற்குகூட இடம் இல்லாமலும் பாலைவனத்தில் கந்ரா பாலத்தின் அடியில் பசியும் பட்டினியுமாகப் பரிதவித்தபடி இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் படும் கஷ்டங்களை யாராலும் பார்த்து சகித்துக்கொள்ள முடியாது. சவுதியில் கடுமையான சட்டங்கள் இருப்பதால், தமிழ்ச் சங்கத்தால் மட்டுமே அவர்களை மீட்டு அனுப்ப முடியாது. இந்தியத் தூதரகம் இவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். தமிழக அரசும் தமிழ் எம்.பி-களும் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தால்தான், அவர்களை மீட்க முடியும்'' என்றார்.

போகிற இடமெல்லாம் தமிழனுக்கு இத்தனை காயங்களா? ஒருவேளை தமிழனாக இருப்பதே தவறா?

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: தே.சிலம்பரசன்

 'வெளிநாட்டில் ஆடு மேய்த்தவன் நான்!’

சவுதியில் செத்து மடியும் தமிழர்கள்!

'வெளிநாட்டில் ஆடு மேய்த்தவன் நான்’ என்று தன்னுடைய சூட்கேஸில் கொட்டை எழுத்தில் எழுதி தமிழகம் முழுக்கப் பிரசாரம்​செய்து வரும் கடலூரை சேர்ந்த சேரன், ''நானும் சவுதியில் டைலரிங் வேலைக்காக என்று அழைத்துச் செல்லப்பட்டு, ஆடுகளும் ஒட்டகங்களும் மேய்த்து பல கொடுமை​களை அனுபவித்தவன். அங்குள்ள மலை​யாளிகளுக்கு மலையாள சங்கங்கள் மிகுந்த உதவிகளை செய்கிறது. ஆனால் தமிழர்​களுக்கு யாரும் உதவி செய்வது இல்லை. பல தமிழர்கள் இதுபோன்ற சம்பவங்களால் மனநிலை பாதிக்கப்பட்டு அங்கேயே பைத்தி​யமாகத் திரிகிறார்கள். சிலர் அங்கேயே இறந்தும் போகிறார்கள். ஆயிரக்கணக்கான தமிழர்கள் சவுதியில் சித்ரவதைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை தமிழக அரசு மீண்டுக் கொண்டுவர வேண்டும்'' என்றார்.