ஆன்லைன் மற்றும் சோஷியல் மீடியா மூலம் மோசடி செய்வது அதிகரித்திருக்கிறது. அதுவும் வெளிநாட்டில் வேலை என்று கூறி அதிகமானோரிடம் மோசடி செய்துவருகின்றனர்.
இந்த நிலையில் மும்பை அந்தேரியைச் சேர்ந்த 29 வயது பெண் வங்கி ஒன்றில் பணியாற்றிவருகிறார். அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை இருப்பதாக அமெரிக்க தூதரகம் அனுப்பியது போன்ற ஒரு மெயில் வந்தது. அதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த அந்தப் பெண் அமெரிக்காவில் வேலை என்ற மகிழ்ச்சியில், ஆன்லைனில் வைக்கப்பட்ட நேர்முகத்தேர்விலும் கலந்துகொண்டார். அதோடு வேலைக்கான அப்பாயின்மென்ட் கடிதமும் கொடுக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரை பல்வேறு கட்டணங்கள் என்று கூறி மர்ம நபர்கள் 26 லட்சம் வரை அந்தப் பெண்ணிடமிருந்து வசூலித்துவிட்டனர்.

மேலும் தொடர்ந்து பணம் கேட்டதால் சந்தேகமடைந்த அந்தப் பெண் மேற்கொண்டு பணம் கொடுக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸின் சைபர் பிரிவு அதிகாரிகள் இது குறித்து விசாரித்தனர். விசாரணையில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜாம்பியா, கானா, உகாண்டா, நமிபியா நாடுகளைச் சேர்ந்த நான்கு பேர் புனேயில் கைதுசெய்யப்பட்டனர். நான்கு பேரும் மேலும் சிலருடன் சேர்ந்துகொண்டு அமெரிக்க தூதரக அதிகாரிகள் போன்று நடித்து மும்பை பெண்ணிடம் பணத்தை மோசடி செய்திருக்கின்றனர். இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சிலரை மும்பை போலீஸார் தேடிவருகின்றனர்.

இது குறித்து, மும்பை சைபர் பிரிவு போலீஸ் அதிகாரி கூறுகையில், ``கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 2 லட்சம் இமெயில் ஐடி, 1 லட்சத்துக்கும் அதிகமான மொபைல் போன் நம்பர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தக் கும்பல், சைபர் குற்றங்களில் ஈடுபடும் கும்பலிடமிருந்து இந்த இமெயில் மற்றும் போன் நம்பர் டேட்டாக்களை வாங்கியிருக்கின்றனர். கைதுசெய்யப்பட்டவர்கள் அந்த டேட்டாவைப் பயன்படுத்தி அமெரிக்காவில் வேலை, பரிசு விழுந்திருக்கிறது, வெளிநாட்டிலிருந்து பரிசு அனுப்பியிருக்கிறோம் எனப் பல்வேறு காரணங்களைக் கூறி மெயில் அனுப்பி மோசடி செய்துவந்திருக்கின்றனர். மும்பையில் இந்தக் கும்பலிடம் மேலும் பலர் ஏமாந்திருக்கின்றனர்'' எனத் தெரிவித்தனர்.