செங்குன்றம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ் எஸ்.ஐ அசோக், காவலர்கள் மகேஷ், கிருஷ்ணமூர்த்தி, வல்லரசு ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள்மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பின்னணி குறித்து விசாரித்தோம்.
இது குறித்து ஆவடி கமிஷனர் அலுவலக போலீஸாரிடம் பேசினோம். ``கடந்த ஜனவரி 30-ம் தேதி இரவு செங்குன்றம் பகுதியில் கர்நாடக பதிவு எண்ணைக் கொண்ட ஆடி கார் ஒன்று நீண்ட நேரம் நின்றிருக்கிறது. அப்போது அங்கு சொகுசு காரில் வந்த போலீஸ் எஸ்.ஐ அசோக், காவலர்கள் மகேஷ், கிருஷ்ணமூர்த்தி, வல்லரசு ஆகியோர் அந்த காரிலிருந்த புரசைவாக்கத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் விசாரித்திருக்கிறார்கள். அப்போது பிரகாஷ், `காரில் பெட் அனிமல்ஸ் இருக்கின்றன. அவற்றை வளர்ப்பதற்கான லைசென்ஸ் எங்களிடம் இருக்கிறது' எனக் கூறியதோடு, ஆதாரங்களையும் காண்பித்திருக்கிறார். அதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பெட் அனிமல்ஸ் குறித்து சிலரிடம் விசாரித்திருக்கிறார். அவர்களும் லைசென்ஸ் இருந்தால் ஒன்றும் பிரச்னையில்லை என்று கூறியிருக்கின்றனர். அதனால் போலீஸ் எஸ்.ஐ அசோக், காவலர்கள் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். பெட் அனிமல்ஸ் இருந்த சொகுசு காரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டது.

இந்த நிலையில் பெட் அனிமல்ஸை காரில் கொண்டு சென்ற பிரகாஷ், ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் ஒரு புகாரளித்தார். அதில், `கொளத்தூரைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஆனந்த் என்பவர், போலீஸ் பெயரைக் கூறி, என்னுடைய சொகுசு காரைப் பறித்துச் சென்றுவிட்டார். அதோடு போலீஸ் பெயரைச் சொல்லி 25 லட்சம் ரூபாயையும் அவர் என்னிடமிருந்து பறித்துக்கொண்டார். எனவே ஆனந்தையும், போலீஸாரையும் விசாரிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் விசாரணை நடத்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இதையடுத்து மணலி உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி, சம்பந்தப்பட்ட போலீஸாரிடம் விசாரித்தார். அதற்குள் பிரகாஷிடமிருந்து பெறப்பட்ட பணத்தை ஆனந்த் திருப்பிக் கொடுத்துவிட்டார். அதனால் பிரகாஷும் ஆனந்தும் சமரசமாகச் செல்வதாக விசாரணையின்போது தெரிவித்தனர். இருப்பினும் போலீஸ் எஸ்.ஐ அசோக்கும், மூன்று காவலர்களும், சொகுசு காரில் கொண்டுசெல்லப்பட்ட பெட் அனிமல்ஸ் குறித்து எந்த தகவலையும் உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்லவில்லை. அதனால்தான் போலீஸ் எஸ்.ஐ அசோக், மூன்று காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.
இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு ``போலீஸ் எஸ்.ஐ அசோக், மூன்று காவலர்கள் சம்பவத்தன்று பிரைவேட் வாகனத்தில் செங்குன்றம் பகுதியில் சென்றிருக்கிறார்கள். அப்போதுதான் சொகுசு காரில் `பெட் அனிமல்ஸ்’ என்ற பெயரில் நான்கு அரியவகைக் குரங்குகளை பிரகாஷ் விமான நிலையத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறார். இந்தத் தகவல் போலீஸ் எஸ்.ஐ அசோக், காவலர்களுக்குத் தெரிந்தும் பிரகாஷ்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் பிரகாஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்து போலீஸ் எஸ்.ஐ அசோக், மூன்று காவலர்கள்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். பிரகாஷை மிரட்டி ஆனந்த் என்பவர் பணம் வாங்கியதில் போலீஸ் எஸ்.ஐ அசோக், காவலர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.

இது குறித்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்கள் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``போலீஸ் எஸ்.ஐ அசோக்கும் மற்ற காவலர்களும் வழக்கு ஒன்றில் குற்றவாளிகளைப் பிடிக்கத்தான் அன்றைய தினம் பிரைவேட் வாகனத்தில் அந்த வழியாகச் சென்றார்கள். அப்போதுதான் செங்குன்றம் பகுதியில் ஆடி கார் ஒன்று சாலை ஓரத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நிற்பதைப் பார்த்து விசாரித்திருக்கிறார்கள். அதன் பிறகு போலீஸ் எஸ்.ஐ அசோக்கும் அவருடன் வந்த போலீஸாரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். பிரகாஷ் அளித்த புகாருக்குப் பிறகே இந்தச் சம்பவம் வெளியில் தெரிந்து போலீஸ் எஸ்.ஐ அசோக், அவருடன் வந்த காவலர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் போலீஸ் எஸ்.ஐ அசோக் என்பவர், துணை கமிஷனர் தனிப்படையிலிருந்தபோது சிறப்பாகச் செயல்பட்டார் என்பதற்காக காவல்துறை அதிகாரிகளால் பாராட்டப்பட்டவர்" என்றனர்.
இந்த விவகாரத்தை விசாரித்த உதவி கமிஷனர் தட்சணாமூர்த்தியிடம் பேசினோம். ``சொகுசு காரில் அரியவகை குரங்குகள் இருக்கும் தகவல் போலீஸ் எஸ்.ஐ அசோக் உள்ளிட்டோருக்குத் தெரிந்தும், அதைக் காவல்துறை உயரதிகாரிகளுக்கு அவர்கள் தெரிவிக்கவில்லை. அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் அவர்கள்மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பிரகாஷ் குற்றம்சாட்டிய ஆனந்துக்கும் போலீஸ் எஸ்.ஐ அசோக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என விசாரித்துக்கொண்டிருக்கிறோம். போலீஸ் எஸ்.ஐ, ஆனந்த் இருவரும் சம்பவ இடத்துக்குச் சென்றதற்கான சிசிடிவி ஆதாரம் கிடைத்திருக்கிறது" என்றார்.