ராமநாதபுரம் மாவட்டம், கீழச்செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் பாபு, இவர் வீல் சேர் கிரிக்கெட் அணியின் `இந்திய அணி கேப்டன்' எனக் கூறி வலம் வந்திருக்கிறார். வங்காள தேசம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற நாடுகளில் நடந்த ஆசிய கோப்பை, உலகக் கோப்பை போட்டிகளில் தனது தலைமையில் இந்திய அணி விளையாடி வெற்றி பெற்றதாக... கடையில் வாங்கிய கோப்பைகளைக் காட்டி வசூலும் செய்துவந்திருக்கிறார்.
அதன்படி கடந்த ஆண்டு பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியை வென்று இந்திய நாட்டுக்குப் பெருமை சேர்த்திருப்பதாகக் கூறி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் கடையில் வாங்கிய கோப்பையைக் காட்டி வாழ்த்து பெற்றிருக்கிறார்.

மேலும், அந்தப் புகைப்படங்களைக் காண்பித்து அடுத்ததாக லண்டனில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவிருப்பதாகவும், அதற்குப் பண உதவி செய்யுமாறும் அமைச்சர் ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் எம்.எல்.ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன், எம்.பி நவாஸ்கனி, சில தனியார் நிறுவனங்களிடமிருந்து பண வசூலில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த நிலையில், ஆசிய கோப்பையுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற வந்த வினோத் பாபுவை, ராமநாதபுரம் பாரா ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர் ஆனந்த பாண்டியன் யதேச்சையாகச் சந்தித்து, தன்னால் முடிந்த உதவியைச் செய்வதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். ``லண்டனில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிக்குச் செல்வதற்கு பணம் போதவில்லை, ஸ்பான்சர்களைப் பிடித்து பண உதவி செய்யுங்கள்" என்றும் அவரிடம் கேட்டிருக்கிறார்.

வினோத் பாபு உண்மையான இந்திய அணி கேப்டன் என நம்பி, சில தனியார் கல்லூரிகள், பள்ளிகளுக்கு அவரை அழைத்துச் சென்று ரூ.50,000 வரை பண உதவி கிடைக்கச் செய்திருக்கிறார். ஆனால், `இந்தப் பணம் போதாது...' என மீண்டும் கூறியதால் சத்திரக்குடியில் பேக்கரி நடத்திவரும் தன்னுடைய நண்பர் தினேஷ்குமார் என்பவரிடம், மாற்றுத்திறனாளி வினோத் பாபு குறித்து கூறி அவரை நேரடியாக கீழசெல்வனூர் கிராமத்திலுள்ள வினோத் பாபு வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ஆனந்த பாண்டியன்.
``இந்த ஏழ்மை நிலையிலும் நாட்டுக்குப் பெருமை தேடித்தர போராடும் வினோத் பாபுவுக்கு, நான் உதவி செய்கிறேன்" எனக் கூறி, ரூபாய் ஒரு லட்சத்தை தினேஷ்குமார் கொடுத்திருக்கிறார். பணம் மொத்தத்தையும் வசூலித்துக்கொண்டு, தான் இந்திய அணியுடன் லண்டன் செல்வதாகக் கூறிவிட்டு வினோத் பாபு புறப்பட்டிருக்கிறார். அதன் பிறகு வினோத் பாபு யாரையும் தொடர்புகொள்ளவில்லை, அவரையும் யாரும் தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்த நிலையில், கடந்த 16-ம் தேதி ஆனந்த் பாண்டியனின் செல்போன் எண்ணுக்குத் தொடர்புகொண்டு பேசிய வினோத் பாபு, ``நான் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றுவிட்டேன். வெற்றிக் கோப்பையுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர், அமைச்சரைச் சந்திக்கவிருக்கிறேன். எனவே நீங்கள் புறப்பட்டு வாருங்கள்" எனக் கூறியிருக்கிறார்.

உலகக் கோப்பையுடன் முதலமைச்சரைச் சந்தித்த புகைப்படங்கள் வெளியான பிறகு, உளவுத்துறைக்குக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் வினோத் பாபுவிடம் பாஸ்போர்ட்டே இல்லை என்பதும், கடையில் விதவிதமான கோப்பைகளை வாங்கி ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது. வினோத் பாபுவின் இந்த நூதன மோசடி தமிழகம் முழுவதும் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், ``வினோத் பாபு என்னை நம்பவைத்து ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்ததோடு மட்டுமல்லாமல், முதலமைச்சரைச் சந்தித்த புகைப்படத்தில் நானும் இருப்பதைப் பார்க்கும் எனது உறவினர்கள், நண்பர்கள், ஊர்க்காரர்கள் `அவருடைய மோசடிக்கு நானும் உடந்தை' என எண்ணுகின்றனர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சல் அடைந்திருக்கிறேன். எனவே வினோத் பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ராமநாதபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் தினேஷ்குமார் புகாரளித்தார்.

இதையடுத்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரன் 406, 420 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வினோத் பாபு மீது வழக்கு பதிவுசெய்திருக்கிறார்.
இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம், ஏ.பி.ஜே மிஷல் பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன், ராமநாதபுரம் மாவட்ட பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பிலும் வினோத் பாபு மீது புகாரளிக்கப்பட்டிருக்கிறது.