Published:Updated:

அதகள யானைகள்...

அதகள யானைகள்...

நாசமாகும் விளைநிலங்கள்..
அதகள யானைகள்..
அதகள யானைகள்...

யற்கைச் சீற்றங்கள்தான் விவசாயிகளை வாட்டி வதைக்கிறதென்றால், கூட்டம் கூட் டமாக வரும் காட்டு யானைகளும் தங்கள் பங்குக்கு விளைநிலங்களைச் சீரழித்தால் என்ன செய்வார்கள் விவசாயிகள்? அப்படியரு துயரம் நெல்லை மாவட்டத்தின் மலையோர விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதகள யானைகள்...

நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 'களக்காடு புலிகள் காப்பகம்' உள்ளது. இந்தப் பகுதிகளுக்குள் கடந்த ஒரு வார காலமாக கேரளாவில்

இருந்து படையெடுத்து வரும் யானைக் கூட்டங்கள் பயிர்களையும் பனைகளையும் பிடுங்கி எறிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் நிம்மதி இழந்து தவிக்கிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய அப்பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்ற விவசாயி,

''ஒவ்வொரு வருசமும் டிசம்பரிலிருந்து மார்ச் வரைக்கும் இந்த யானைகளோட போராட வேண்டி யிருக்கு. எப்பவும் ஒண்ணு ரெண்டு யானைகள்தான் வரும். இந்த வருசம் பத்துப் பதினைஞ்சு யானைங்க கூட்டமா வந்திருக்கு. அதில் ஒண்ணு எப்பவும் ஒத்தையாவே சுத்திக்கிட்டு இருக்கறதால தோட்டத்துப் பக்கம் போகவே பயமா இருக்கு. நிலத்தில் எதையும் பயிரிட முடியல. அதனால் பனை மரங்களுக்கு நடுவில் முந்திரித்தோட்டம் போட்டு பாதுகாத்துக்கிட்டு வர்றோம். ஆனா, இப்ப வந்திருக்கற யானைக் கூட்டம் பனைகளையும் விட்டு வைக்கல. பனையை அப்ப டியே வேரோடு சாய்ச்சு குருத்தை உடைச்சுத் திங்குது. அதுங்களை விரட்ட பட்டாசு வெடித்தால், கோபத்துல முந்திரி செடிகளைப் பிடுங்கி எறிஞ்சுட்டுப் போகுது!'' என்றார் வேதனையுடன்.

ராஜா என்பவர், ''முந்தியெல்லாம் காட்டு யானைகளை விரட்டுனா போயிடும். ஆனா, இப்ப அதுக ஒண்ணு சேர்ந்துக்கிட்டு எங்களை விரட்டுது. இந்தப் பகுதியில் பதநீர் தொழில் அமோகமா நடக்கும். ஆனால், வருசந்தோறும் படையெடுக்கும் யானைக் கூட்டம் பனைகளை அழிச்சுட்டு வர்றதால... இப்ப அந்தத் தொழிலே சுத்தமா நின்னுபோச்சு. பனையை மட்டுமில்லாமல், புளிய மரம், தேக்கு, முந்திரினு எல்லாத்தையும் நாசப்படுத்திட்டுப் போயிடுது. யானைகளை விரட்டுறதுக்காக இந்தப் பகுதியில் மின்வேலி போடச் சொல்லி நாங்களும் கரடியா கத்திக்கிட்டு வர்றோம். அதையும் செஞ்சு தரமாட்டேங்குறாங்க. இப்படியே போச்சுன்னா பேசாம ஊரை காலி செஞ்சுட்டு போறதைத்தவிர வேறு வழியில்லை!'' என்றார் அழாத குறையாக.

அதகள யானைகள்...

யானைகள் விவகாரம் குறித்து களக்காடு புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் பத்ரசாமியிடம் கேட்டதற்கு, ''அடர்ந்த காட்டுக்குள் இந்த சீஸனில் கொசுத்தொல்லை அதிகம் இருக்கும். அதிலிருந்து தப்புவதற்காக மலையிலிருந்து கீழிறங்கும் யானைகள் உணவுக்காக இப்படி விளைநிலங்களில் புகுந்துடுது. ஐயப்பன் சீஸனில் கேரளக் காடுகளில் வெடிகள் போடுவதாலும், மக்கள் கூட்டத்தைப் பார்த்தும் அங்கிருந்து வெளியேறும் யானைகள் தமிழக வனப்பகுதிக்குள் வருகின்றன. இனப்பெருக்கத் துக்காகவும் இங்கு அவை வருகின்றன. இவற்றைத் தடுக்க சிறப்பு காவலர்கள் மூலமாக வெடி வைத்து விரட் டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகையையும் முன்னுரிமை அடிப்படையில் தந்துக்கிட்டு இருக்கோம்!'' என்றார்.

-- ஆண்டனிராஜ்
படங்கள் ஆ.வின்சென்ட் பால்