Published:Updated:

வரலாற்றைத் திரிக்கும் கருணாநிதி!: பழ.நெடுமாறன்

வரலாற்றைத் திரிக்கும் கருணாநிதி!: பழ.நெடுமாறன்

பழ.நெடுமாறன்
வங்கிகள் தேசியமயம்... வரலாற்றைத் திரிக்கும் கருணாநிதி!
வரலாற்றைத் திரிக்கும் கருணாநிதி!: பழ.நெடுமாறன்
வரலாற்றைத் திரிக்கும் கருணாநிதி!: பழ.நெடுமாறன்

''நான் முதன் முதலாக டெல்லியில் பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசும்போது, 'சேலம் இரும்பாலை, சேது சமுத்திரத் திட்டம் ஆகியவை தமிழ்நாட்டுக்குத் தேவை' எனவும், 'இந்தியாவில் இருக்கிற பெரிய வங்கிகளை தேசியமயமாக ஆக்குங்கள். அப்படிச் செய்தால் சாதாரணமானவர்களுக்குச் சுலபமாக கடன் கிடைக்கும்' என்றும் பேசினேன். சில மாதங்களுக்குப் பிறகு பிரதமர் இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கி ஆணை பிறப்பித்தார்!''

-கடந்த நவம் பர் 26-ம் தேதி மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு மணி மேகலை விருது வழங்கும் விழா வில் முதல்வர் கருணாநிதி பேசியதுதான் மேற்கண்டது.

வரலாற்றுப் புரட்டல் என்பது இதுதான்! பிரதமர் இந்திரா காந்தி 1969-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி 14 வங்கிகளைத் தேசிய மயமாக்கும் ஆணையைப் பிறப்பித்தார்.

ஆனால், வங்கிகள் தேசியமய மாக்கப்பட வேண்டும் என்ற திட்டம் குறித்து, பிரதமராக நேரு இருந்த காலத்திலேயே தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. 1963 அக்டோபரில் திட்டக்குழு உறுப்பினராக இருந்த டாக்டர் வி.கே.ஆர்.வி.ராவுடன் இந்தத் திட்டம் குறித்து நேரு கலந்து ஆலோசித்தார்.

'சந்தையில் விற்கப்படும் வங்கி களின் பங்குகளை அவ்வப்போது வாங்குமாறு ஆயுள் காப்பீட்டுக் கழகத்துக்கு உத்தரவு பிறப்பியுங்கள். போதுமான அளவுக்குப்

பங்குகள் வாங்கப்பட்டதும் வங்கிகள் தேசிய மயமாக்கப்படுவது எளிதாகிவிடும்' என்றும் அப்போது நேருவிடம் ராவ் யோசனை கூறினார்.அதன்படியே நேருவும் ஆணை பிறப்பித்தார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜர் பொறுப் பேற்ற பிறகு, இந்தத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றும்படி நேருவிடம் வற்புறுத்தினார்.

நேரு அவர்களின் உடல் நலக் குறைவும், நாட்டின் அரசியல் நிலைமையும் இவற்றுக்குத் தடையாக இருந்துவிட்டன. அவருடைய மறைவுக்குப் பிறகு பிரதமர் லால்பகதூர் காலத் திலும் இந்தத் திட்டம் பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது நிதி அமைச்சராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி இதற்கான நகல் திட்டத்தைக்கூட தயாரித்து விட்டார். ஆனால், எதிர்பாராதவிதமாக பாகிஸ் தானுடன் போர் மூளவே, திட்டம் பின் னுக்குத் தள்ளப்பட்டது. போரைத் தொடர்ந்து டி.டி.கிருஷ்ணமாச்சாரியின் பதவி விலகல், லால் பகதூரின் எதிர்பாராத மறைவு ஆகியவை மீண்டும் இந்தத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை ஆயின.

1966-ம் ஆண்டு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது.

1967-ம் ஆண்டு ஜூன் மாதம் 23, 24, 25 ஆகிய தேதிகளில் டெல்லி யில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் குழு கூட்டத்தின் தலைவர் காமராஜர் 10

வரலாற்றைத் திரிக்கும் கருணாநிதி!: பழ.நெடுமாறன்

அம்ச திட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றச் செய்தார். அதில் முதலாவது திட்டமே வங்கி கள் தேசியமயமாக்கப்படும் திட்டம்தான். பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் 10 அம்சத் திட்டத்தை உருவாக்க காமராஜர் வழிவகுத்தார். இந்த இரண்டிலும் வங்கிகளை தேசியமயமாக்கும் திட்டம் இடம் பெற்றது.

1968-ம் ஆண்டு ஜபல்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்கு முன்பாக பிரதமராக இருந்த இந்திராவை, காமராஜர் சந்தித்துப் பேசினார். வங்கிகள் தேசியமயத் திட்டத்தை அந்த மாநாட்டில் நிறைவேற்ற வேண்டுமென வேண்டிக்கொண்டார்.

ஆனால், மாநாட்டில் பேசிய துணை பிரதமர் மொரார்ஜி தேசாய், ''வங்கிகள் மீது சமூகக் கட்டுப்பாடு செய்தால் போதும்!'' என்று வங்கிகள் தேசியமயமாக்கப்படக் கூடாது என்ற குரலில் பேசினார். காம ராஜர் இதற்கு இணங்கவில்லை. ஆனால், பிரதமர் இந்திராவோ, மொரார்ஜியின் கருத் தையே ஆதரித்தார்.

அடுத்து பரிதாபாத்தில் நடைபெற்ற அகிலஇந்திய காங்கிரஸ் குழுக் கூட்டத்திலும் வங்கிகள் தேசியமாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை காமராஜர் வற்புறுத்தினார்.

மீண்டும் 1969-ம் ஆண்டில் பெங்களூர் காங்கிரஸ் மாநாட் டுக்கு முன்பாக நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்திலும், காமராஜர் இந்தப் பிரச்னையை எழுப்பினார். அப்போதும் இந்திரா மௌனம் சாதித்தாரே தவிர, வங்கிகள் தேசியமயமாக்கப்படுதலுக்கு ஆதரவாகப் பேசவில்லை. இடதுசாரித் தலைவரான திருமதி அருணா ஆசப் அலிக்குச் சொந்தமான 'லிங்க்' ஏடு ஜூலை 13, 1969 இதழில் பின்வருமாறு படம் பிடித்துள்ளது.

''அகில இந்திய காங்கிரஸ் குழு முன் வைக்கப்படவேண்டிய நகல் தீர்மானத்தில் சேர்க்கப்பட வேண்டியவை குறித்துச் செயற் குழு விவாதித்தது. பரிதாபாத் மாநாட்டில் கிளப்பியதை காமராஜர், மராட்டிய முதல்வர் வி.பி.நாயக் ஆகியோர் மீண்டும் எழுப்பினார்கள். வங்கிகள் தேசியமயம் உட்பட தீவிரமான பொருளாதாரத் திட்டங்களை அவர்கள் எழுப்பியபோது வழக்கம்போல இந்திராவிடம் இருந்து எத்தகைய ஆதரவும் கிட்டவில்லை. காமராஜர், நாயக் ஆகியோர் பிரதமர் தங்களுக்காக வாதாடுவார் என எதிர்பார்த்து ஏமாந்தார்கள்!'' என அப்போதைய நிலவரத்தை படம்பிடித்திருக்கிறது.

இதற்கிடையில், ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக என். சஞ்சீவிரெட்டியை தேர்ந்தெடுப்பதென காங்கிரஸ் நாடாளுமன்ற குழு முடிவெடுத்தது. ஆனால், பிரதமர் இந்திராவின் வேட் பாளர் ஜெகஜீவன்ராம் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதையடுத்து துணை குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரி, பதவியை விட்டு விலகுவதாகவும் ஜனாதிபதி பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார். தான் கூறிய வேட் பாளரை காங்கிரஸ் நாடாளுமன்ற குழு ஏற்க மறுத்துவிட்டதால், கடும் கோபத்தில் இருந்த இந்திராகாந்தி, வி.வி.கிரியை ஆதரிப்பதென முடிவெடுத்தார். இதனால், காங்கிரஸ் இரண்டாக பிளவுபடும் நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் நாடாளுமன்ற குழுவில் பிரதானமாக இருந்து தனக்கு எதிராக செயல்பட்ட மொரார்ஜியிடமிருந்து நிதித்துறையை பறித்து தன்னகத்தே வைத்துக் கொண்டார் இந்திரா. அதன்பிறகு, மொரார் ஜியை பிற்போக்காளராகவும் தன்னை முற்போக் காளராகவும் காட்டிக்

வரலாற்றைத் திரிக்கும் கருணாநிதி!: பழ.நெடுமாறன்

கொள்வதற்காக ஏற்கெனவே மொரார்ஜியால் எதிர்க்கப்பட்டு வந்த வங்கிகள் தேசிய மயமாக்கல் திட்டத்தை திடுமென ஆதரிப்பதென அறிவித்து நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில், பெங்களூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் போது செயற்குழுவுக்கு பிரதமர் அனுப்பிய பொருளாதாரக் குறிப்பில் வங்கிகள் தேசிய மயத் திட்டம் இடம் பெற்றது. உடனே, மாநாட்டில் அறிவிக்கப்பட்ட பிரதமரின் குறிப்பை ஏற்றுக் கொண்டு அதை செயல்படுத்த அரசுக்கு அனுப் பும்படி செயற் குழுவில் காம ராஜர்வற்புறுத்தினார்.

வங்கிகள் தேசியமயத் திட்டத்தை ஆரம்பம் முதல் வலியுறுத்தி வந்தவர் காமராஜரே. பின்னர், வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டவுடன் 20.07.1969-ல் காமராஜர் அதை வரவேற்று வெளியிட்ட அறிக்கையில், ''நீண்டகாலமாக இந்த நடவடிக்கைகளுக்காகப் போராடி வந்துள்ளேன். அதை ஏற்று, செயல்படுத்த அரசாங்கம் தற்போது முன்வந்திருப்பதை கண்டு மகிழ்கிறேன்!'' என குறிப்பிட்டார்.

ஆனால், 1969-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்ற மு.கருணாநிதி, தான் கூறிய யோசனைப்படிதான் பிரதமர் இந்திரா வங்கிகளைத் தேசியமயமாக்கினார் என்று கூறுவது வரலாற்றைத் திரிப்பது மட்டுமல்ல நகைப்புக்கும் உரியது!