இதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தான் காரணம் என்று அப்போது சிக்கய்ய நாயக்கர் கல்லூரிப் பேராசிரியர்களும், மாணவர்களும்
போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களோடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், வங்கி ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட அமைப்பினர் ஒன்று சேர்ந்து 'சிக்கய்ய நாயக்கர் கல்லூரி பாதுகாப்புக் குழு' என்ற பெயரில் ஒரு குழுவை ஏற்படுத்தியதோடு, உண்ணாவிரதப் போராட்டம், தெருமுனைப் பிரசாரம், பேரணி என நான்கு கட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு, விரைவில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரினர். 19.03.08 மற்றும் 25.05.08 ஜூ.வி. இதழ்களில் இதுபற்றியெல்லாம் எழுதியிருந்தோம்.
தற்போது சிக்கய்ய நாயக்கர் கல்லூரிக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது. கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்தான் இந்தக் கல்லூரியின் பாதுகாவலராக இருந்து வருகிறார். நாம் செய்தி வெளியிட்ட பின்னர் இந்தப் பதவியில் இருந்த டாக்டர் ருத்ரப்பன் பணியில்இருந்து ஓய்வு பெற்றதால், புதிதாகப் பொறுப்பேற்ற டாக்டர் வீ.ராஜகோபாலன் கல்லூரியில் நிலவும் காலியிடங்களை நிரப்ப பெரும் முயற்சி எடுத்துக்கொண்டார்.
இக்கல்லூரியில் மொத்தம் 47 பணியிடங்கள் காலியாக இருந்ததால், முதற்கட்டமாக ஒன்பது துறைகளுக்கான 27 காலி இடங்களை நிரப்ப முடிவு செய்தார் ராஜகோபாலன்.
ஏற்கெனவே மார்ச் மாதத்தில் நடைபெற்ற இன்டர்வியூவின்போது தகுதியுள்ள நபர்களைத் தேர்வு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுத்திருந்தார் அவர்.
கடந்த அக்டோபர் மாதம் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. 200-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்ததால், முதற்கட்டமாக எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தக் கல்லூரி கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால், இதைத் தவிர்த்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகப் பேராசிரியர்களை அழைத்து இரண்டு முறை தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் தேர்வான 101 பேருக்கு, நேர்முகத் தேர்வுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. கடந்த மாதம் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் 27 பேர் விரிவுரை யாளர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்க ஒரு விழாவையே டிசம்பர் முதல் தேதி சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் ஏற்பாடு செய்துவிட்டார் ராஜகோபாலன். மத்திய சமூக நீதி மற்றும் அமலாக்கத் துறை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கையால் நியமன ஆணைகள் புதிய விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்டன.
''இன்னும் நிரப்பப்படாமல் இருக்கும் 20 பணியிடங்களுக்கும் இதேபோல் துரித நடவடிக்கை வேண்டும்!'' என்று வேண்டுகோள் வைத்தார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.
|