Published:Updated:

பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்!

பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்!

பாய்ச்சல் பாதுகாப்பு ஆய்வாளர்...
பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்!
பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்!
பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்!

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, 'இந்தியாவுக்கும் பாகிஸ் தானுக்கும் இடையே போர் உருவாகுமா?' என உலகம் தழுவிய பரபரப்பு பற்றிக் கொண்டுள்ள நிலையில்... உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்திருக்கின்றன.

ஜூ.வி. தன் பங்குக்கு, முன்னாள் கடற் படை அதிகாரியும், மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள பாதுகாப்பு கல்வி மற்றும் ஆய்வு மையத்தின் (Institute for Defence Studies and Analyses) இயக்குநருமான கமாண்டர் உதய் பாஸ்கரிடம் இந்தியாவின் பாதுகாப்பு பற்றி சில கேள்விகளை வைத் தது. 37 ஆண்டுகள் பணி அனுபவம் மிக்க இவர், பாதுகாப்பு விஷயங்களில் அரசுக்கு பல்வேறு அறிக்கைகளை வழங்கியவர்.

''பாதுகாப்பு விஷயத்தில் நாம் எங்கு கோட்டை விடுகிறோம்? இதிலிருந்து மீள என்னதான் தீர்வு?''

''1998-ல் நடந்த கார்கில் போருக்குப் பின்னர் நாட்டின் பாதுகாப்பு பற்றி ஆராய ஐ.ஏ.எஸ். உயரதிகாரியாக இருந்த சுப்பிரமணியம் தலைமையில் மத்திய அரசு ஒரு கமிட்டியை அமைத்தது. அந்த கமிட்டி நான்கு விதமான திட்டங்களை மேற்கொள்ள உபதேசித்தது. இதில் இரண்டு சிபாரிசுகள் உயர்தர ராணுவ நிர்வாகம்

மற்றும் ஒருங்கிணைந்த இன்டலிஜென்ஸ் சம்பந்தப்பட்டவை. மற்ற இரண்டும் உள்நாட்டுப் பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை. இந்த கமிட்டியின் அறிக்கை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதை இப்போது மீண்டும் நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்து விவாதிக்கவேண்டும். கடந்த பத்தாண் டுகளாக உள்நாட்டுப் பாதுகாப்பு விஷயத்தில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படாமல் இந்தப் பிரச்னை, 'வாக்குவங்கி அரசியலுக்காக' மட்டுமே விவாதிக்கப்பட்டு வருகிறது. எங்களைப் போன்றவர்கள் பல முறை அரசிடம் நாட்டின் பாதுகாப்பு குறித்து முழுமையான ஆய்வு தேவை எனக் கூறியும், அதன் தீவிரம் புரியாமல் எங்களுடைய வேண்டுகோளை அலட்சியப்படுத்தியது அரசு. அதன் விளைவுதான் பயங்கர வாதிகளின் அட்டூழியம் தொடர்கிறது.''

''பொதுமக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளை எப்படிக் கட்டுப்படுத்துவது?''

''நம் நாட்டில் வி.ஐ.பி-க்களின் உயிருக்கு ஒரு விலை; சாதாரணப் பிரஜைகளின் உயிருக்கு ஒரு விலை! வி.வி.ஐ.பி-க்கள் பாதுகாப்புக்கு எந்த அளவு நவீன தொழில்நுட்பங்கள் உபயோகிக் கப்படுகிறதோ, அதே அளவுக்கு மார்கெட்டுகள், ரயில்வே ஸ்டேஷன்கள் போன்ற பொது இடங்களின் பாதுகாப்பையும் நவீனப்படுத்தவேண்டும். இதற்கு எத்தனையோ தொழில்நுட்ப வசதிகள் இருந்தும், அதிலெல்லாம் அரசு அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. முக்கியமாக இன்னொரு குறைபாட்டைச் சுட்டிக்காட்டவேண்டும். நம்முடைய போலீஸ் அமைப்பு 1902-ல் உருவாக்கப்பட்ட நடைமுறைகளையே இன்னும் பின்பற்றுகிறது. போலீஸ் துறையை இந்த நிமிடத்திலிருந்தாவது சீர்திருத்தம் செய்தாகவேண்டும்.

இன்று போலீஸ் துறை பெரும்பாலும் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. மாநில முதலமைச்சர்கள் தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளையே முக்கியமான பதவிகளுக்கு நியமிக்கின்றனர். சில மாநிலங்களில் போலீஸ் தேர்வாணையத் துறையையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ள போலீஸ் தேர்வு மோசடிகளே இதற்கு உதாரணம். ஆகவே, போலீஸ் துறையை மத்தியத் தொகுப்புக்குள் கொண்டுவர முடியாவிட்டாலும் குறைந்தபட்சம், மாநில அரசின் தலையீடு இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்படவைக்கலாம். அதாவது, புரொஃபஷனல் ஃபோர்ஸ் ஆக (Professional force) வைத்திருக்கவேண்டும். நாடாளுமன்றத்தில் இதற்கான மாற்றத்தைச் செய்ய சட்டம் கொண்டு வரவேண்டும்.''

''தேசிய பாதுகாப்புக் கட்டமைப்பில் என்னனென்ன மாற்றங்கள் தேவை?''

''உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் பதவி விலகியதோடுவிவகாரம் முடியவில்லை. மீதம் இருப்பவர்களில் பொறுப்பற்றவர்கள் யார்... தவறான நபர்கள்

பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்!

யார்... என்பதையும் கண்டறியவேண்டும். பாதுகாப்பு முறையின் குறைபாடுகள் பற்றியும் ஆராயவேண்டும். உதாரணமாக, மகாராஷ்டிரா போலீஸில் இதுவரை மரைன் போலீஸ் (கடலோரக் காவற்படை) இல்லை. 1993-ல் இதே மாதிரியே கடல் வழியாகத் தீவிரவாதிகள் வந்தனர். பின்னர் இதேபோல தொலைக்காட்சியினர் போலீசுக்கே லஞ்சம் கொடுத்து கடத்தல் நாடகத்தை நடத்தி அது ஒளிபரப்பானது. இதெல்லாம் பாதுகாப்பு ஓட்டை யையே காட்டுகின்றன. தமிழ்நாடு கடலோரக் காவல்படை போல மற்ற கடலோர மாநில அரசுகள் பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்யவில்லை. தீவிரவாதிகள் வசம் நவீன கம்ப்யூட்டர்கள் நவீன ஆயுதங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால், பல மாநில போலீஸ் நிலையங்களில் மேஜை நாற்காலி, மின்சார வசதிகள்கூட இல்லை. இந்த நிலையை மாற்றி போலீஸ் துறையை நவீனப்படுத்த வேண்டும்!''

''இந்தியா-பாகிஸ்தான் போர் மூளுமா... அது சரியா?''

''பயங்கரவாதிகளின் பயிற்சி மையங்களைக் கண்டுபிடித்து நாம் தாக்கினாலும் அதனால் மட்டும் பிரச்னை தீராது. பயங்கரவாதிகள் பாகிஸ்தானை விட்டால் பங்களாதேஷ், பங்களாதேஷை விட்டால் பாகிஸ்தான்... ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று தாவு வார்கள். பாகிஸ்தானில் ஜெ-.இ.-எம், எல்.இ.டி. உள்பட பன்னிரண்டுக்கும் மேற்பட்ட தீவிரவாதக் குழுக்கள் உள்ளன. இவை அனைத்தும் அல்-கொய்தாவின் வழிகளைப் பின்பற்றுபவை. வாகாபி (wahabi- -இஸ்லாமியக் கிளைப் பிரிவினர்) ஐடியாலஜி என்று சொல்லப்படும் கொள்கை வெறியர்கள். பெண்கள் பள்ளிக்குப் போவது இஸ்லாத்துக்கு எதிரானது என்று கூறி, ஆப்கானிஸ்தானில் பள்ளிக்குப் போகும் பெண் குழந்தைகள் முகத்தில் ஆசிட்டை வீசுகின்றனர். இப்படிப்பட்ட ஐடியாலஜிஸ்ட்கள் மேற்கத்திய நாடுகளும் இந்தியாவும் தங்கள் எதிரி என நினைக்கின்றனர். இதற்கெல்லாம் சவூதி அரேபியாவிலும் ஆதரவு இருக்கிறது. இப்படி பல சிக்கல்கள் இருப்பதால், நாம் இதில் பல்முனை அணுகுமுறைகளைக் கையாண்டுதான் தீர்வு காண முடியும். பாகிஸ்தானுக்கு மற்ற நாடுகள் மூலமாக நெருக்கடி கொடுப்பதுதான் புத்திசாலித்தனம். மற்றபடி, போர் என்று இறங்கினால் அது அத்தனை தூரம் சாதகமாக இருக்குமா என்பது சந்தேகம்தான்!''

- சரோஜ் கண்பத்
படங்கள் பூனம் தஷ்வீரேன்