Published:Updated:

உடையும் சிதம்பர ரகசியம்!

உடையும் சிதம்பர ரகசியம்!

உடையும் சிதம்பர ரகசியம்!
இலாகா மாற்றம்...
உடையும் சிதம்பர ரகசியம்!

''எங்க எஃப்.எம்., இப்போ ஹோம் மினிஸ்டர் ஆயிட்டார். எடுத்துக்கோங்க ஸ்வீட்...'' - நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உள்துறை அமைச்சரான சந்தோஷத்தை, சிவகங்கை மாவட்டத்திலுள்ள வங்கி உயரதிகாரிகள் சிலர் தங்கள் ஸ்டார் கஸ்டமர்களுடன் இப்படித்தான் கொண் டாடி வருகிறார்கள்!

உடையும் சிதம்பர ரகசியம்!

சிதம்பரத்தின் இலாகா மாற்றம் குறித்து அவருடைய கட்சியில் இருக்கும் சிலரிடம் பேசினோம்.

''வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தீவிரவாதமும் விலைவாசி உயர்வும் காங்கிரசுக்குப் பெரிய சவாலாக இருக்கும். விலைவாசி யைக் கட்டுப்படுத்துவது

உள்பட சில விவகாரங்களில் மத்திய நிதியமைச் சகத்தின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது பிரதமரிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் சோனியா காந்தி. அதேநேரம், சில அறிவிப்புகளால் பங்கு வர்த்தகம் அடிக்கடி ஸ்திரத்தன்மை இழந்து தள்ளாடியது குறித்தும் சோனியாவுக்கு புகார்கள் போயிருக்கின்றன.

'வங்கிகளின் கையிருப்பு விகிதத்தைக் கூட்டப் போகிறோம்' என்றொரு அறிவிப்பு நிதியமைச்சக வட்டாரத்திலிருந்து அவ்வப்போது வெளியாவதைப் பார்த்திருப்பீர்கள். வங்கிக்குச் சொந்தமான பணம் வெளியில் புழக்கத்தில் இருந்தால்தான் வட்டி பெருகும்; வருமானம் கூடும். அப்படிக் கூடினால்தான் வங்கிகளின் ஷேர் மதிப்பு ஏறும். அதில்லாமல் 'வங்கிக் கையிருப்பைக் கூட்டப்போகிறோம்' என்றால், 'புழக்கத் தில் உள்ள பணத்தை வசூலித்துப் பெட்டகத்தில் வைத்துப் பூட்டப்போகிறோம்' என்றுதான் அர்த்தம். அப்படிப் பூட்டிவிட்டால், வங்கியின் வருமானம் பாதிக்கும்! அதன்மூலம் வங்கிகளின் ஷேர் மதிப்பு மளமளவென கீழே இறங்கும். அந்தநேரம் பார்த்து, கில்லாடி யானவர்கள் சரிந்து கிடக்கும் வங்கிகளின் ஷேர்களை மொத்த மொத்தமாக வாங்கி விடுவார்கள்! அடுத்த சில தினங்களிலேயே, 'வங்கிக் கையிருப்பை அதிகரிக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை' என்றொரு அறிவிப்பு வெளியாகும்போது, வங்கிகளின் ஷேர் விலை எகிறும். இதற் காகவே காத்திருப்பவர்கள், தாங்கள் வாங்கிப்போட்ட வங்கிகளின்

உடையும் சிதம்பர ரகசியம்!

ஷேர்களை லாபமான தொகைக்கு விற்றுவிட்டுப் போய்விடுவார்கள்! இப்படி ஒரே நாளில் எத்தனையோ கோடி ரூபாய்வரை ஷேரில் புரண்ட சம்பவங்கள் உண்டு!

வங்கிகளில் மட்டுமில்லாமல் ஸ்டீல், பார்மசூட்டிக்கல்ஸ், சுரங்கங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இதுபோன்ற அறிவிப்புகளை சூதாட்டம்போலவே பயன்படுத்தி பலனடைபவர்களால், இந்தியப் பங்கு வர்த்தகம் செயற்கையான, ஸ்திரமற்ற பாதிப்புகளுக்கு உள்ளானது!'' என்கிறார்கள் அப்பச்சிக்கு எதிரணியினர்.

''அது சரி, இதெல்லாம் தலைமைக்குத் தெரியாமலா நடந்திருக்கும்?'' என்று கேட்டால், ''சில முக்கிய விவகாரங்கள் சோனியாவின் கவனத்துக்குப் போனதால்தான் இந்த அதிரடி மாற்றம். முதலில், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரெங்கராஜனை ராஜ்யசபா எம்.பி. ஆக்கி, அவரை நிதியமைச்சராக்குவதற்கான முயற்சி நடந்தது. ஆனால், பிரதமர் மன்மோகன் சிங், அந்த சமயத்தில் ப.சிதம்பரம் மீது கொண்ட மதிப்பால் அதற்கு முட்டுக்கட்டை போட்டு விட்டார்.

இந்நிலையில், கடந்த நவம் பரில் இந்தியாவின் முக்கியத் தொழிலதிபர்களை அழைத்து, மும்பையில் கருத்தரங்கு ஒன்றை நடத்தினார் அத்வானி. பி.ஜே.பி-யின் தொழில் கொள்கையை எடுத்துச் சொல்லும் வித மாக அமைந்த அந்தக் கருத்தரங்கில் மிட்டல், அம்பானி சகோதரர்கள் உள்ளிட்ட தொழிலதிபர்கள் பலரும் கலந்துகொண்டனர். இப்படி தொழிலதி பர்கள் எல்லாம் அத்வானி நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்டால், 'அடுத்தது அவர்கள் ஆட்சிதானோ' என்ற தோற்றம் உருவாகிவிடும் என்பதால், அந்தக் கூட்டத் தில் முக்கியத் தொழிலதிபர்கள் சிலர் கலந்துகொள்வதைத் தடுக்க காங்கிரஸ் தரப்பில் முயற்சிகள் நடந்தன. அதையும் மீறி காங்கிரஸால் பலனடைந்த சகோதர தொழிலதிபர்களேகூட அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். அவர்களிடம் தனது அதிருப்தியை வெளியிட்ட காங்கிரஸ் மேலிடம், 'உங்களுக்காக நாங்கள் செய்ததையெல்லாம் மறந்து விட்டீர்களா?' என்று கேட்டதும், 'அதையெல்லாம் நீங்கள் சும்மா செய்யவில்லையே...?' என்று பதிலுக்குக் கேட்டார்களாம். இதுவெல்லாம் சோனியாவின் கவனத்துக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது!'' என்கிறார்கள்.

சிதம்பரம் மாற்றப்பட்டதன் பின்னணியில், கூட்டணிக் கட்சியினரின் குடைச்சலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். சர்வ தேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ந்ததைத் தொடர்ந்து, பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்கவேண்டும் என்று பல தரப்பிலுமிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால், ப.சிதம்பரம், விமானங்களுக்குப் பயன்படுத்தும் பெட்ரோல் விலையை அவசரமாக குறைத்திருக்கிறார். இதனால், சில விமான சர்வீஸ் நிறுவனங்கள் லாபமடைந்ததுதான் மிச்சம்!' என்று கூட்டணித் தலைவர்கள் தரப்பு முணுமுணுக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர் ஒருவர், ''சிவராஜ் பாட்டீல் விவகாரம் குறித்து அலசப்பட்ட அந்த காரிய கமிட்டி கூட்டத்துக்காக சிவகங்கையிலிருந்து டெல்லி போய்ச் சேர்வதற்குள் போன் மூலமாகவே தலைநகரில் சில அவசர மூவ்களை ப.சிதம்பரம் நடத்தியிருக்கிறார். அதனால்தான் பதவிப் பறிப்பு இல்லாமல் இலாகா மாற்றம் என்ற அளவில் போனது!'' என்ற அவர், இன்னொரு விஷயத்தையும் சொன்னார்.

''இதுவரை அரசியல்வாதியாக இல்லாமல் அரசை வழிநடத்துகிற தலைவராக மட்டுமே இருந்த மன்மோகன் சிங், அண்மைக்காலமாக அரசியலும் பண்ண ஆரம்பித்திருக்கிறார். எப்படியாவது தனக்கென ஒரு ஆதரவு வளையத்தை உருவாக்கிக் கொண்டு அடுத்த ஐந்து வருடங்களுக்கும் தானே பிரதமராகத் தொடர வேண்டும் என்பது சிங்கின் திட்டம்! அதனால்தான் ப.சிதம்பரம் போன்ற, தனது

உடையும் சிதம்பர ரகசியம்!

பொருளாதார மாற்றக் கொள்கைகளைப் புரிந்துகொள்ளக்கூடியவர்களை அரவணைத்துச் செல்வதில் அவர் முனைப்புக் காட்டுகிறார். இப்போதும் சிதம்பரத்தின் அமைச்சர் பதவியைக் காப்பாற்றிக் கொடுத்திருப்பவர் அவர்தான். 'ரெங்கராஜனிடம் நிதிப் பொறுப்பை ஒப்படைக்கலாம்' என்ற சோனியாவின் யோசனைக்கு மாற் றாக, தன்னிடமே அந்தப் பொறுப்பை வைத்துக் கொண்டிருக் கிறார் மன்மோகன் சிங்! இதுவும் சிதம்பரத்துக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயம்தான். வேறு யாரிடமாவது நிதித் துறை போயிருந்தால், அத்துறையின் கடந்த காலங்களைத் தோண்டித் துருவுவார்கள்! அது தேவை யற்ற சர்ச்சைகளுக்கு வழி வகுக்கும். 'எனக்கும் மேலாக சிறப்பாகச் செயல்பட, மன்மோகன் சிங்கைவிட வேறொருவர் இருக்க முடியாது' என்று மீடியாக்களிடம் சிதம்பரம் பேசியதன் சூட்சுமமும் அதுதான். சிதம்பரத்திடமிருந்து நிதித்துறை பறிக்கப்பட்டதுமே பங்குச் சந்தையில் ஆரோக்கிய மான மாற்றங்கள் நிகழ ஆரம்பித் திருக்கின்றன. கூடிய சீக்கிரமே பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலைக் குறைப்பு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை போன்றவற்றை எதிர்பார்க்கலாம்!'' என்றார்.

இப்படிப்பட்ட கருத்துகளை வைத்து சிவகங்கை, காரைக்குடி போன்ற ஏரியாக்களில் பொதுமக்களிடம் பட்டிமன்றம் தூள்பறக்கிறது.

- குள.சண்முகசுந்தரம்