Published:Updated:

'சமாதானத்தின் பரிசு எம்.பி. ஸீட்டா?': கயல்விழி காரசாரம்!

'சமாதானத்தின் பரிசு எம்.பி. ஸீட்டா?': கயல்விழி காரசாரம்!

கயல்விழி காரசாரம்!
''சமாதானத்தின் பரிசு எம்.பி. ஸீட்டா?''
'சமாதானத்தின் பரிசு எம்.பி. ஸீட்டா?': கயல்விழி காரசாரம்!
'சமாதானத்தின் பரிசு எம்.பி. ஸீட்டா?': கயல்விழி காரசாரம்!

'முதல்வர் குடும்பத்தையும் மாறன் குடும்பத்தையும் கைகுலுக்க வைத்ததில் மு.க. அழகிரியின் மகள் கயல்விழிக்கு முக்கியப் பங்கு உண்டு!' என்று ஒரு தரப்பில் சொல்லப்பட... 'கயல்விழி இதற்கு என்ன சொல்கிறார்?' என அறிய நினைத்தோம். பேட்டி என்று கேட்டதுமே, ''எதிலும் லேசில் அசைந்து கொடுக்காத இயல்புடைய என் அப்பாவை சமாதானமடைய வைத்ததில் எங்கள் எல்லோருக்குமே பெரிய திருப்தி!'' என்று சந்தோஷம் பொங்க நம்மிடம் பேசினார் கயல்விழி.

''கீரியும் பாம்புமாக சீறிக்கொண்டு இருந்தவர் களை எப்படி சமாதானப்படுத்த முடிந் தது?''

''குடும்பம் என்றால் சச்சரவுகள் இருக்கத்தானே செய்யும்! அதிலும் உறவுகள் அதிகமான குடும்பங்களில் எழக்கூடிய அலைகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. தாத்தா, உறவுகளாலேயே சூழப்பட்டவர். அவரை ஆணி வேராகக் கொண்டு ஆலமரமாக விரிந்து படர்ந்திருக்கும் எங்கள் குடும்பத்தில் பிரச்னைகள் உருவா னது எல்லோருக்கும் தெரிந்ததுதான். என்ன காரணத்தாலோ அந்தப் பிரச்னைகள் அடுத் தடுத்து, உறவுகளுக் கிடையிலான இடைவெளியை பெரிதாக்கிக்கொண்டே இருந்தன. இப்படியே போனால், 'ஒட்டுமில்லை... உறவு மில்லை!' என்கிற நிலை வந்துவிடுமோ என இரு தரப்பி லுமே பயந்தோம். அதன் பிறகுதான் சமாதான முடிவுக்கு வந்தோம்.

குடும்ப உறவினர்கள் அனைவருமே ஒன்றுகூடிப் பேசினோம். இந்தப் பிரச்னை

சுமுகமாக முடிய வேண்டும் என்ற எண்ணத்தோடு குடும்ப உறுப்பினர்கள் பலரும் உள்ளன்போடு செயல்பட்டார்கள். இதில் அத்தை செல்வி, பொதுவான ஆளாக இருந்து இரு தரப்பினரோடும் பேசினார். ஒருவழியாக தாத்தா, பாட்டியைக் கொண் டாடுகிற விதத்தில் இரு குடும்பங்களும் இணைந்து விட்டோம்!''

''உங்கள் தந்தை அழகிரி முதலில் சமாதானத்துக்கு மறுத்தாராமே?''

''மோதிக்கொண்ட இருவருக்குமிடையே சமாதானம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறதென்றால், பெரிதாகக் காயம் பட்டவர் வீம்பு காட்டத்தானே செய்வார்! அது போல்தான் அப்பாவும்..! அப்பா எத்தகைய கஷ்டம் வந்தாலும் இடிந்து போய்விட மாட்டார். ஆனால், சென்ற வருடத்தில் நடந்த சில பிரச்னைகளால் அப்பா சொல்லிக்கொள்ள முடியாத அளவுக்கு வருத்தப்பட்டார். என் பாட்டிக்காகத்தான் (தயாளு அம்மாள்) எந்த ரியாக் ஷனும் செய்யாமல் அமைதியாக இருந்தார் அப்பா. மற்றபடி, சமாதான முயற்சிக்கு அப்பா மறுப்பேதும் சொல்லவில்லை.

பாட்டி அப்போலோவில் அட்மிட் ஆகியிருந்தபோது செல்வி அத்தை வந்திருந்தார்கள். அப்போ என் பையன் இதயா, 'போய் வருகிறேன் பாட்டி' எனச் சொல்லி இருக்கிறார். உடனே, செல்வி அத்தை இதயாவைக் கட்டிக்கொண்டு, 'நல்லாப் படிக்கிறியா?' என வாஞ்சையோடு கேட்டிருக்காங்க. அத்தையும் இதயாவும் பேசிக்கிட்டதைப் பத்தி அப்பாகிட்ட சொன்னப்போ, அவருக்கும் ரொம்ப வருத்தமாயிடுச்சு. 'அப்பா அதிரடியானவர்'னு வெளியில இமேஜ் அமைஞ்சுடுச்சே தவிர, ஒருபோதும் அவர் அதிரடியா நடந்துக்க மாட்டார். அவர்கிட்ட பழகிப் பார்த்தவங்க அவரை ஒரு குழந்தைனுதான் சொல்வாங்க.''

''சமாதானப் பேச்சுவார்த்தையின்போது உங்களுக்கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிற்க ஸீட் கேட்டு டிமாண்ட் வைக்கப்பட்டதாமே?''

''(உரக்கச் சிரிக்கிறார்) இந்தக் கற்பனைக்கெல்லாம் நான் எப்படி பதில் சொல்ல முடியும்? ரெண்டு குடும்பங் களும் பழைய வருத்தங்களை மறந்துட்டு, சந்தோஷமா இணைந்ததில் எல்லோருமே மகிழ்ச்சியோட உச்சத்தில இருக்கோம். இதில் டிமாண்ட் வைக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? எம்.பி. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. தேர்தல் தேதிக்கான அறிவிப்புகூட வெளியாகவில்லை. அப்படியிருக்க எனக்கு ஸீட் கேட்கப்பட்டதாகச் சொல்வது அபத்தமாக இல்லையா?''

''அழகிரி, ஸ்டாலின், மாறன் சகோதரர்கள் என அனைவருமே கைகோத்த தினத்தில் கனிமொழி மிஸ்ஸானது ஏன்? அவர் பின்னுக்குத் தள்ளப் படுகிறாரா?''

''என்னையும் கனிமொழி அத்தையையும் மையப்படுத்தி 'மொழியா... விழியா?' என கட்டுரை வெளியிட்ட ஜூ.வி., இப்படியரு கேள்வி கேட்பதில் எனக்கு ஆச்சர்யம் இல்லை (கோபமாகிறார்). ஒரு உயிருக்கு மொழியும் முக்கியம்தான், விழியும் முக்கியம்தான். கடலூர் மாநாட்டில் என் முதல் மேடைப் பேச்சுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து எனக்குத் துணை நின்றவர் கனிமொழி அத்தைதான். இலக்கியத்திலும் அரசியல் நடவடிக்கைகளிலும் கனி அத்தையின் வளர்ச்சியைப் பெருமிதத்தோடு ரசிப்பவள் நான். பத்திரிகைகளில் வருகிற செய்திகளை இருவருமே சேர்ந்து படித்துச் சிரிப்போம்.

குடும்பரீதியான சமாதானம் உண்டான தினத்தில் அத்தை நாடாளுமன்றத்துக்குச் செல்வதற்காகப் பயணப்பட்டுக்கொண்டு இருந்தார். இதற்கிடையில், குடும்பத்தினர் அனைவரும் சந்திக்க வருவது தெரிந்து ஆச்சர்யத்தோடு வீட்டுக்குத் திரும்பி வந்தார். இரு தரப்பு குடும்பங்கள் கைகோத்ததில் எங்களைப் போலவே கனி அத்தைக்கும் அளவில்லாத மகிழ்ச்சி. எங்கள் குடும்ப உறுப்பினர்களோடும் சித்தப்பா (ஸ்டாலின்) குடும்ப உறுப்பினர்களோடும் கனி அத்தை மிகுந்த பாசத்தோடு பேசினார். இந்த விஷயங்கள் மீடியாக்களின் கவனத்துக்கு வராததால், சிலர் தவறான வதந்திகளைக் கிளப்புகிறார்கள்!''

''சமாதானப் பேச்சுகள் நடந்தேறிய சில நாட்களிலேயே மறுபடியும் மனக் கசப்புகள் உருவெடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே?''

''இனி யார் நினைத்தாலும் எங்கள் குடும்ப உறவுகளைப் பிரிக்க முடியாது. எங்களுக்குள் ஒருபோதும் மனவருத்தங்கள் உருவெடுக்காது. குடும்பரீதியாக ஏற்பட்டிருக்கும் இந்த இணக்கம், வருகிற தேர்தலில் எதிர்க்கட்சிகள் வகுத்து வைத்திருக்கும் திட்டங்களைத் தவிடுபொடியாக்கும். இனி எத்தகைய சூழ்ச்சிகளையும் ஒட்டுமொத்த குடும்பமாக இணைந்தே எதிர்கொள்வோம்!''

- இரா.சரவணன்