கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வானையம்மாள் (75). கணவரை இழந்த அவர் தனியாக வசித்துவந்தார். நேற்று முன்தினம் வீட்டில் மூதாட்டி இறந்த நிலையில் இருப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர்.

மூதாட்டி தனியாக இருந்ததால் ஈஸ்வரி என்ற பெண் தன் மகன் சஞ்சய்யுடன் சிறிது காலம் அவர் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். பிறகு ஈஸ்வரி தன் மகனுடன் வேறு வீட்டுக்குச் சென்றுவிட்டார். இருப்பினும் அவ்வப்போது தெய்வானைக்கு உதவி செய்துவந்திருக்கின்றனர்.
இந்த நிலையில், சஞ்சய்க்கு புதிய பைக் வாங்க ரூ. 50,000 பணம் தேவைப்பட்டது. இதையடுத்து, மூதாட்டியிடம் நகையைப் பறிக்க திட்டமிட்ட சஞ்சய், அவரின் நண்பர் கௌதம், 16 வயது சிறுவன் ஆகியோர் தெய்வானையம்மாள் வீட்டுக்குச் சென்றனர். அங்கு மூதாட்டியைக் கொலைசெய்து 8.5 பவுன் நகையைத் திருடிச் சென்றனர்.
தகவலறிந்து அங்கு சென்ற ஈஸ்வரி பீரோவில் இருந்த ரூ.20,000 பணத்தை எடுத்துச் சென்றிருக்கிறார். இந்த அனைத்துத் தகவல்களும் தெரிந்துகொண்ட மூதாட்டியின் மருமகள் பானுமதி அதை மறைத்து அவர்களுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பானுமதி, சஞ்சய், கௌதம், சிறுவன் உள்ளிட்ட ஐந்து பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து நகை, பைக் பறிமுதல் செய்யப்பட்டன. சிறுவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்திருக்கின்றனர்.
சம்பவம் நடைபெற்ற 8 மணி நேரத்தில் வழக்கு பதிவுசெய்து கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் போலீஸார் கைதுசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.