மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரைச் சேர்ந்தவர் ரோஹினி. இவரின் மகன் வழக்கறிஞர் விஷால் காம்ப்ளே. ரோஹினியின் சகோதரர் பிரதீப். பிரதீப்புக்கும், ரோஹினிக்குமிடையே சொத்துப் பிரச்னை இருந்துவருகிறது. இது தொடர்பாக மும்பை கோர்ட்டில் விசாரணை நடந்துவருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக ரோஹினியும், அவரின் மகன் விஷாலும் கடந்த மாத தொடக்கத்தில் மும்பை வந்தனர். மும்பை செம்பூரிலுள்ள ஹோட்டலில் தங்கியிருந்தனர். ரோஹினியின் சகோதரி வினயா மும்பை குர்லாவில் வசிக்கிறார். வினயா தன்னுடைய சகோதரியை போனில் தொடர்புகொள்ள முயன்றார். ஆனால், அவரை போனில் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் ரோஹினி தங்கியிருந்த ஹோட்டலுக்கு வினயா சென்று பார்த்தபோது, அவர்களின் லக்கேஜ் அப்படியே இருந்தது. இதனால் இருவரையும் காணவில்லை என்று வினயா போலீஸில் புகார் செய்தார்.
கடந்த 21-ம் தேதிதான் போலீஸார் இரண்டு பேரையும் காணவில்லை என்று புகாரை பதிவுசெய்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் விஷாலுடன் கடைசியாக யார் போனில் பேசியது என்ற விபரத்தை சேகரித்தனர். இதில் முனிர் பதான் என்பவர் விஷாலுடன் பேசியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைப் பிடித்துச் சென்று விசாரித்தபோது, உண்மை தெரியவந்தது. இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் ஹேம்ராஜ் அளித்த பேட்டியில், ``முனிர் பதானிடம் விசாரித்தபோது விஷால், அவரின் தாயாரை பன்வெலில் இருக்கும் சொத்தைக் காண்பிப்பதாகக் கூறி, ஹோட்டலிலிருந்து வெளியில் அழைத்திருக்கின்றனர்.

அவர்கள் இரண்டு பேரையும் காரில் கடத்திச் சென்றிருக்கின்றனர். ராஜஸ்தானிலுள்ள அஜ்மீர் மாவட்டத்துக்கு அழைத்துச் சென்று விஷாலிடம் சொத்து ஆவணங்களில் கையெழுத்து போடும்படி கூறி சித்ரவதை செய்தனர். ஆனால், அவர் சொத்து ஆவணங்களில் கையெழுத்திட மறுத்துவிட்டார். இதனால் அங்கிருந்து மும்பை வரும் வழியில் அகமதாபாத் அருகில் கொலைசெய்து நெடுஞ்சாலையில் தூக்கிப் போட்டுவிட்டு வந்திருக்கின்றனர். ரோஹினியை வீடு ஒன்றில் அடைத்துவைத்திருப்பது தெரியவந்தது.
உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தோம். அவர்களைக் கடத்தியது, கொலைசெய்தது தொடர்பாக பிரதீப் மகன் பிரனவ், ஜோதி வாக்மாரே, அவரின் கணவர் ரோஹித், முனிர் பதான், ராஜு ஆகிய ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். குற்றவாளிகள் அனைவரும் குர்லா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டது'' என்று தெரிவித்தார்.