திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அரங்கேறிவரும் தங்கக் கடத்தல் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளிலிருந்து அதிக அளவில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தின் வழியாக இறங்குவதும், அவற்றை அவ்வப்போது அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடித்து பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. விமான நிலைய அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவும் வகையில், விஞ்ஞானிகளைப்போல இந்தக் கடத்தல் கும்பல்கள் டிஸைன் டிஸைனாக தங்கத்தைக் கடத்தி வந்தாலும், அதிகாரிகளிடம் வசமாய்ச் சிக்கிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில், இந்த முறை லேப்டாப் சார்ஜரில் தங்கத்தை மறைத்து கடத்திவந்திருக்கின்றனர்.

நேற்று சிங்கப்பூரிலிருந்து வந்த ஸ்கூட் விமானமானது, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியிருக்கிறது. அப்போது அந்த விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவர் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த நபரை விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்துச் சென்று அவரையும், அவரது உடைமைகளையும் சோதனை செய்தனர்.

அப்போது அந்தப் பயணியின் லக்கேஜ் பெட்டியிலிருந்த லேப்டாப் சார்ஜரை எடுத்து சோதனைசெய்ய, சிறிய உருளை வடிவில் தங்கத்தை மறைத்துக் கடத்திவந்தது தெரியவந்திருக்கிறது. அதையடுத்து விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் ரூ.30,52,129 மதிப்பிலான அந்த 501.5 கிராம் தங்கத்தைப் பறிமுதல்செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே திருச்சி விமான நிலையத்தில் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள், அழகுசாதனப் பொருள்களில் மறைத்துவைத்து தங்கத்தைக் கடத்திவருவது அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.