6 பிணங்களுக்கு நடுவில் அமர்ந்திருந்த சிறுமி... - குலைநடுங்கவைக்கும் திருவண்ணாமலைக் கொடூரம்

நாங்க இன்னும் அந்த அதிர்ச்சியிலருந்து மீளல. குழந்தைங்க வெட்டுப்பட்டு கொலையாகிக் கெடந்த அந்தக் கொடூரமான காட்சி எங்க கண்ணு முன்னால வந்து வந்து போகுது
ஆட்டை வெட்டுகிற மாதிரி கொடுவாளாலும், கோடாரியாலும் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் துள்ளத் துடிக்க வெட்டிக் கொன்ற காட்சியைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறாள் அந்தச் சிறுமி.
திருவண்ணாமலை மாவட்டம், மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி - வள்ளி தம்பதியருக்கு ஐந்து மகள்கள், ஒரு மகன் என்று மொத்தம் ஆறு பிள்ளைகள். மூத்தவரான சௌந்தர்யா திருமணமாகி கிருஷ்ணகிரியில் வாழ்ந்துவருகிறார். இந்த நிலையில், கடந்த 12-12-2022 அன்று இரவு மனைவி, 3 மகள்கள், ஒரு மகன் என மொத்தக் குடும்பத்தையும் வெட்டிக் கொன்றுவிட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார் பழனி. தமிழ்நாட்டையே பதைபதைக்கவைத்த இந்தச் சம்பவத்தின் பின்னணியைத் தெரிந்துகொள்ள மோட்டூர் கிராமத்துக்குச் சென்றோம்.

‘‘நாங்க இன்னும் அந்த அதிர்ச்சியிலருந்து மீளல. குழந்தைங்க வெட்டுப்பட்டு கொலையாகிக் கெடந்த அந்தக் கொடூரமான காட்சி எங்க கண்ணு முன்னால வந்து வந்து போகுது. ராத்திரி நேரத்துல, மக்கள் வீட்டைவிட்டு வெளிய வரவே பயப்படுறாங்க. குறிப்பா, அந்த வீட்டுப் பக்கம் போகவே பயமா இருக்கு’’ என்று மிரட்சியாகச் சொன்ன கிராம மக்களிடம் ஆறுதல் வார்த்தைகள் சொல்லி மெல்லப் பேச்சுக்கொடுத்தோம்.
‘‘பழனிக்கு இது சொந்த ஊர் கிடையாது. ஆனா, இந்த ஊரைச் சேர்ந்த வள்ளியைக் கல்யாணம் செஞ்சதுக்கப்புறம் அவனும் இங்கேயே தங்கிட்டான். அவங்க குத்தகைக்கு எடுத்துருக்குற தோட்டத்துல சாமந்திப் பூ போட்டுருக்காங்க. அதுனால, அங்க இருக்குற தோட்டத்து வீட்டுலதான் அவங்க குடியிருந்தாங்க. பழனி தினமும் குடிச்சுட்டு வந்து, மனைவியைத் தொந்தரவு செஞ்சு அடிப்பான். தன்கூட தனிமையில இருக்கப் பிடிக்காத அவளுக்கு வேற யார்கூடவோ தொடர்பு இருக்குன்னு சந்தேகப்பட்ட பழனி, சைக்கோவாவே மாறிக் கொடுமைப்படுத்துவான். அவனோட இந்த சந்தேக புத்திதான், இப்படி ஒரு கொடூரத்துல வந்து முடிஞ்சிருக்கு. படுபாவி கொஞ்சம்கூட ஈவு இரக்கமில்லாம கசாப்புக் கடையில ஆட்டை வெட்டுற மாதிரி கொடுவாளாலயும் கோடாரியாலயும் குழந்தைகளை வெட்டிக் கொன்னுருக்கான்.

தெனமும் காலை அஞ்சு மணிக்கெல்லாம் வள்ளியோட சேர்ந்து பிள்ளைகளும் எந்திரிச்சு, தோட்டத்துல, சாமந்திப்பூ பறிப்பாங்க. ஏழு மணிக்குள்ள பூக்கூடையை ரோட்டுல கொண்டுவந்து வெச்சுட்டா, வியாபாரி வந்து எடை போட்டு எடுத்துக்கிட்டுப் போவார். 13-ம் தேதி காலையில வள்ளியோட பூக்கூடை ரோட்டு ஓரத்துல இல்ல. குழந்தைங்களையும் வீட்டுக்கு வெளியில காணோம். அதனால, ஊருக்குள்ள இருக்குற வள்ளியோட அம்மாவுக்கு போன் செஞ்ச வியாபாரி, ‘உங்க பொண்ணு இன்னைக்கு பூ பறிக்கலையா... வெளியூருக்கு எங்கயாவது போயிட்டாங்களா?’னு கேட்டுருக்கார். பதறிப்போன வள்ளியோட அம்மா, மக வீட்டுக்கு வந்து பார்த்தப்போ, கதவு திறந்த கிடக்க, வாசல்படியிலயே தூக்குல தொங்குன நிலைமையில பழனி பிணமா கெடந்துருக்கான்.
அந்த அம்மாவோட அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிப்போய் பார்த்தோம். பழனிக்குப் பக்கத்துலயே வள்ளியும், அவளோட நாலு குழந்தைங்களும் கொடூரமா வெட்டுப்பட்டு செத்துக் கெடந்தாங்க. ஆறு பிணங்களுக்கு மத்தியில, அவங்களோட 9 வயசு மக பூமிகா சம்மணங்கால் போட்டு பேயறைஞ்ச மாதிரி உட்கார்ந்துக்கிட்டிருந்தா. நைட்டு முழுக்க அத்தனை பிணங்களுக்கு மத்தியில அந்தக் குழந்தை உக்கார்ந்திருந்தத நினைக்கும்போது நெஞ்சே பதறுது. அவ தலையிலயும் பின்பக்கத்துல பலமான வெட்டுக்காயம் இருந்துச்சு. சம்பவத்தை நேர்ல பார்த்த அதிர்ச்சியில, நடுங்குன நிலைமையில இருந்த அந்தக் குழந்தைக்குப் பேச்சே வரல. ரத்தம் படிஞ்சிருந்த அவளோட உடையை மாத்தி, ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கிட்டு ஓடினோம். இப்போ வரைக்கும் ‘குழந்தை உயிருக்கு ஆபத்து இல்ல. நல்லா இருக்கா’னு டாக்டருங்க சொல்றாங்க. அந்தக் குழந்தையாவது பிழைக்கணும்னு நாங்களும் சாமியை வேண்டிக்கிறோம்’’ என்றனர் கண்ணீர் ததும்ப.

திருவண்ணாமலை எஸ்.பி கார்த்திகேயனிடம் கொலைக்கான காரணம் குறித்துக் கேட்டதற்கு, “இவர்கள் அனைவரையும் வெட்டியது பழனிதான். அவர் ஒருவர் மட்டுமே இந்த வழக்கில் குற்றவாளி. அவரும் தற்கொலை செய்துகொண்டிருப்பதால், கொலைக்கான உண்மையான காரணத்தை உடனே கண்டறிய முடியவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுமியாலும், தற்சமயம் பேச முடியவில்லை. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலிருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அவளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இன்னும் அந்த அதிர்ச்சியிலேயே சிறுமி இருக்கிறாள். கணவன், மனைவிக்கு இடையேயான தகராறில்தான், இந்தக் கொடூரம் நிகழ்ந்திருப்பதாக முதற்கட்டமாகத் தெரியவந்திருக்கிறது. சம்பவம் நடந்த இடத்திலிருந்து இரண்டு செல்போன்களைக் கைப்பற்றியிருக்கிறோம். அதை ஆய்வுசெய்த பிறகுதான் வேறு ஏதாவது துப்பு கிடைக்கிறதா என்று தெரியவரும்” என்றார்.
பழனியின் உடை, தூக்கில் தொங்கும் விதம், கொலையான ஐந்து பேரில் ஒருவர்கூட தப்பிக்க முடியாமல் போனது எப்படி... உணவில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்யப்பட்டனரா... ஒரு சிறுமி மட்டும் உயிரோடு தப்பியது எப்படி... என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ஒட்டுமொத்தமாக தன் குடும்பத்தை இழந்து அதிர்ச்சியிலிருக்கும் குழந்தை பூமிகாவுக்கு ஆலோசனையும் உதவியும் உடனடியாக வழங்கப்படவேண்டும்!