சத்தீஸ்கர் மாநிலத்தின் தம்தாரி மாவட்டத்தில் 65 வயது மூதாட்டி ஒருவர், மருத்துவச் செலவு காரணமாக தன்னுடைய 40 வயது மாற்றுத்திறனாளி மகனைக் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக பாதிக்கப்பட்டவரின் மனைவி, கடந்த மே 15-ம் தேதியன்று, ருத்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேங்க்ரெலிலுள்ள வீட்டில் தன் கணவரை யாரோ கொன்றதாக போலீஸில் புகாரளித்திருக்கிறார்.

அதன் பிறகு போலீஸார் நடத்திய விசாரணையில், 65 வயது மூதாட்டிக்கும், அவரின் மருமகளுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லையென்பதும், அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது என்பதும் தெரியவந்திருக்கிறது.
இறுதியில் ஒருவழியாக அந்த மூதாட்டி தன்னுடைய மகனைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார். போலீஸும் அவரைக் கைதுசெய்தது. பின்னர் இது குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரியொருவர், ``குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நேற்று அவர் கைதுசெய்யப்பட்டார்.

மருமகளுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது. மகனின் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை என்று அவர் கூறினார். அதோடு, மே 15-ம் தேதியன்று அவரின் மருமகள் கான்கேரில் ஒரு திருமணத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது, அவர் தன்னுடைய மகனை அரிவாளால் வெட்டிக் கொன்றிருக்கிறார்" என்று தெரிவித்தார்.