சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, ஸ்டான்லி நகர், 5-வது தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் என்கிற ஸ்டான்லி நகர் சண்முகம் (23). இவர்மீது கொலை வழக்கு உட்பட ஒன்பது வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஆர்.கே.நகர் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான சண்முகம், கடந்த 28-ம் தேதி அதிகாலையில் வண்ணாரப்பேட்டைக்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள ஹண்டிங் மைதானம் அருகே சிலர் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் சண்முகம், தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது சண்முகத்துக்கும் அங்கிருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஆத்திரமடைந்த சண்முகம், `நான் யாருன்னு தெரியுமா... என் பெயரைக் கேட்டாலே நடுங்குவார்கள்’ என மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்தவர்களை மிரட்டியிருக்கிறார். அதனால் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தவர்கள், கற்களால் சண்முகத்தைத் தாக்கியிருக்கிறார்கள். அதில் காயமடைந்த சண்முகம் கீழே விழுந்திருக்கிறார். இதையடுத்து, அங்கிருந்த பெரிய கல்லை எடுத்த சிலர் சண்முகத்தின் தலையில் போட்டு கொலைசெய்துவிட்டு தப்பித்துச் சென்றுவிட்டனர்.
இது குறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், சண்முகத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சண்முகத்தின் மனைவி, காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் கொலை வழக்கு பதிவுசெய்த போலீஸார், ரௌடி சண்முகத்தைக் கொலைசெய்தது யாரென்று விசாரித்தனர்.

விசாரணையில் பழைய வண்ணாரப்பேடடை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்கிற ஆளா (23), இளங்கோவன் (25), கரிமுல்லா கரீம் (19), ஆனந்தகுமார் (19), அசோக்குமார் (19) ஆகிய ஐந்து பேரும், இரண்டு சிறுவர்களுடன் சேர்ந்து சண்முகத்தைக் கொலைசெய்தது தெரியவந்தது. அவர்களைப் பிடித்து விசாரித்த போலீஸார் ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவர்களை சிறார் பள்ளியில் சேர்த்தனர். கைதான சக்திவேல் என்கிற ஆளா மீது மூன்று வழக்குகளும், இளங்கோவன் மீது இரண்டு வழக்குகளும் இருக்கின்றன.