ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில், 38 வயது நபரிடம் நான்கரை லட்ச ரூபாய்க்கு ஏழு வயது சிறுமி விற்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது குறித்து போலீஸார் தெரிவித்த தகவலின்படி, தோல்பூர் மாவட்டத்தின் மேனியா பகுதியில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.

முன்னதாக பூபால் சிங் (38) என்பவரின் குடும்பத்தினர், இதில் சம்பந்தப்பட்ட சிறுமியின் தந்தையிடம் நான்கரை லட்ச ரூபாய்க்கு சிறுமியை வாங்கியிருக்கின்றனர். மேலும், கடந்த செவ்வாயன்று அந்தச் சிறுமியை பூபால் சிங் திருமணம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நடுத்தர வயதுடைய நபர் ஒருவருக்குச் சிறுமியைத் திருமணம் செய்துவைத்திருப்பதாக போலீஸுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.
பின்னர் இது தொடர்பாக, உடனடியாக நடவடிக்கை எடுக்கும்விதமாக மேனியா பகுதி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் கண்டேல்வால் தலைமையிலான குழுவினர், சிறுமியின் வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில், சிறுமியின் கை, கணுக்காலில் மருதாணி வைத்திருந்தது தெரியவந்திருக்கிறது.

இறுதியில், சிறுமியின் தந்தையிடம் நான்கரை லட்ச ரூபாய் கொடுத்து சிறுமியை வாங்கியதாக பூபால் சிங்கின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர் என்று போலீஸ் அதிகாரி கண்டேல்வால் தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவத்தில் யார் யார் ஈடுபட்டனர், எத்தனை பேர் ஈடுபட்டிருக்கின்றனர் என்பது குறித்து வழக்கு பதிவுசெய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.