காதலில் தோல்வியடைந்துவிட்டாலும், தான் காதலித்த பெண்ணை வேறு ஒருவர் காதலித்தால் பல ஆண்களுக்குக் கோபம் வராமல் இருப்பதில்லை. அது போன்று ஒருவருக்குக் கோபம் வந்து தன்னுடன் பணியாற்றும் சக ஊழியரைக் கொலைசெய்திருக்கிறார் வங்கி ஊழியர் ஒருவர். மும்பை ராம் நகர் ரயில் நிலையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் ஒருவர் இறந்துகிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. போலீஸார் விரைந்து சென்று, இறந்தவர் உடலைக் கைப்பற்றியபோது தலையில் பலத்த காயம் இருந்தது. அதோடு அவரிடமிருந்து பர்ஸ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

அதில் இறந்தவர் பெயர் சந்தேஷ் பாட்டீல் என்றும், பிரபல தனியார் வங்கியில் பணியாற்றுவதும் தெரியவந்தது. வங்கியில் அவரைப் பற்றிய தகவல்களைச் சேகரித்த போலீஸார், ரயில் தண்டவாளத்தில் உடல் கிடந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். இதில் சந்தேஷ் பாட்டீலுடன் ரயில் தண்டவாளம் அருகில் ஒருவர் நடந்து செல்வது தெரியவந்தது. அந்த நபர் சந்தேஷ் பாட்டீலுடன் ஒரே வங்கியில் பணியாற்றும் சுத்தன் சஃபி என்று தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்தபோது, அந்த நபர் பாட்டீலைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் அனில் கதம் ஊடகங்களிடம் பேசுகையில், ``பாட்டீலும், சஃபியும் ஒரே வங்கியின் வெவ்வேறு கிளைகளில் கிரெடிட் கார்டு பிரிவில் பணியாற்றி வந்திருக்கின்றனர். அதே வங்கியில் பணியாற்றும் 25 வயது பெண் ஒருவரை சஃபி காதலித்துவந்தார். ஆனால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அவர்களின் காதல் முடிவுக்கு வந்துவிட்டது. சமீபத்தில் பாட்டீல் அந்தப் பெண்ணைக் காதலிப்பது குறித்து சஃபிக்குத் தகவல் கிடைத்தது.

உடனே சஃபி கடும் கோபமடைந்தார். பாட்டீலை `மது அருந்தலாம் வா' என்று சஃபி அழைத்தார். இருவரும் ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, பாட்டீல் கீழே குனிந்தபோது கல்லால் தலையின் பின்புறத்தில் சஃபி அடித்திருக்கிறார். அதோடு மிகப்பெரிய கல்லை எடுத்து பாட்டீல் தலையில் போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவரைக் கைதுசெய்து விசாரித்துவருகிறோம்" என்றார்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.