விழுப்புரம் மாவட்டம், இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் முகேஷ். இவர், விழுப்புரம் அடுத்த சிந்தாமணியிலுள்ள இந்தியன் வங்கிக் கிளையில் காசாளராகப் பணியாற்றிவந்தார். கடந்த 25-ம் தேதி காலையில் வழக்கம்போல வங்கிப் பணிக்குச் சென்றிருக்கிறார். சுமார் 10:40 மணியளவில் தனக்கு உடல்நலம் சரியில்லை எனவும், அதனால் அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் செல்கிறேன் எனவும் வங்கி மேலாளரிடம் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.

ஆனால், அதன் பின்னர் அவர் வங்கிக்குத் திரும்பாமல் இருந்திருக்கிறார். எனவே, அவரை போனில் தொடா்புகொண்டபோது இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்திருக்கிறது. அதன் பிறகு, அவரின் கேபினில் சோதித்தபோது மொத்தம் ரூ.43,89,500 வங்கிப் பணம் காணாமல் போயிருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும், வங்கியின் சிசிடிவி காட்சிகளைச் சோதித்துப் பார்த்தபோது முகேஷ் பணத்தை எடுத்துச் சென்றது உறுதியாகியிருக்கிறது. அதன் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து சிந்தாமணி வங்கி மேலாளர், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்படி போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.
மேலும், காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் முரளி, சந்திரசேகர், பாண்டியன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு முகேஷைத் தேடும் பணி தீவிரமடைந்தது. இந்த நிலையில், மர்ம நபர்களால் முகேஷ் மிரட்டலுக்கு உள்ளாகி கடத்தப்பட்டதாகவும், இது குறித்து முகேஷே தன்னுடைய சகோதரிக்கு ஆடியோ ஒன்று அனுப்பியதாகவும் சர்ச்சைக் கருத்துகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், "அது பொய்யான தகவல். அவரை யாரும் கடத்தவில்லை" என்று தனிப்படை போலீஸார் நமக்கு பதிலளித்திருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு (26-ம் தேதி) முகேஷ் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, ஆன்லைன் ரம்மி மீதான மோகத்தில் இந்தத் தொகை மட்டுமின்றி, நூதன ஏமாற்று வேலையில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது.

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். "முகேஷ் வங்கி வேலைக்கு வருவதற்கு முன்னர், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகியிருக்கிறார். ஆரம்பக்கட்டத்தில் வெற்றியைப் பெற்றவர், அதன் பின்னர் பணத்தை இழக்கத் தொடங்கியிருக்கிறார். எனவே, 'விட்ட பணத்தைப் பிடிக்க வேண்டும்' என்று உறவினர்கள், நண்பர்களிடம் சுமார் 12 லட்சம் வரை கடன் வாங்கியிருக்கிறார். அதே சமயத்தில் அவரின் வீட்டையும் கட்டியிருக்கிறார். இதனால் இன்னும் அவருக்கு கடன் சுமை அதிகரித்திருக்கிறது. கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பாகதான் வங்கி வேலைக்கே வந்திருக்கிறார். கடன் சுமை அதிகரிப்பால்... 'மீண்டும் பணம் கிடைத்தால் ரம்மி விளையாட்டின் மூலம் வெற்றிபெற்று கடன்களையெல்லாம் அடைத்துவிடலாம்' என்று தவறாக எண்ணியிருக்கிறார்.
அதன்படியே தனது வங்கி ஊழியர்களிடமும் கடன் பெற்று, அந்தப் பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் போட்டு, இழப்பைச் சந்தித்திருக்கிறார். மேலும் இவர் வங்கி காசாளர் என்பதால், வங்கி லாக்கருடைய ரகசிய எண் இவருக்கு தெரிந்திருந்திருக்கிறது. அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டவர்... பல சேமிப்புக் கணக்குகளில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, நீண்ட நாள்களாக அப்படியே இருக்கும் சேமிப்புக் கணக்குகளில், தொலைபேசிக்கு குறுஞ்செய்தி செல்லாத கணக்குகளாக டார்கெட் செய்து பணத்தை எடுத்து கையாடல் செய்திருக்கிறார். இவ்வாறாக சுமார் 25 லட்சத்துக்கும் மேல் நூதன முறையில் கையாடல் செய்திருக்கிறார் என்பது தற்போது தெரியவந்திருக்கிறது.

அந்த வங்கியின் கிளையில் இருந்த பண விவரத்தை இவர்தான் பார்த்து வந்திருக்கிறார். எனவே, இவ்வாறு குறிப்பிட்ட தொகையை எடுத்து கடனைக் கொடுத்துவிட்டு... அதில், மீதி பணம் மூலம் ஆன்லைன் ரம்மியில் சம்பாதித்து மீண்டும் அதேபோல் வைத்துவிடலாம் என்றே இவ்வாறு 43.89 லட்சத்தை எடுத்துச் சென்றதாகத் தெரியவந்திருக்கிறது. அவரது தொலைபேசி எண் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தற்போது அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். மேலும், அவர் எடுத்துச்சென்ற தொகையும் மீட்கப்பட்டிருக்கிறது. அவர்மீது 381-வது பிரிவின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. வங்கி தரப்பிலிருந்து கையாடல் செய்யப்பட்ட பணம் குறித்த விவரம் அளிக்கப்பட்டால், அவர் மீதான வழக்குப் பிரிவுகள் மாற்றம் செய்யப்படலாம்" என்றனர்.