கோவை, வடவள்ளி வேம்பு அவென்யூ பகுதியில் லோட்டஸ் அப்பார்ட்மென்ட் இருக்கிறது. இந்த அப்பார்ட்மென்ட்டில் பெயின்ட் அடிக்கும் வேலை நடைபெற்றுவருகிறது. முரளி என்ற பெயின்டர், அத்திபாளையம் பகுதியைச் சேர்ந்த சந்திரன், சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ் ஆகிய இருவரை வேலைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

சந்திரன் தொங்கு சாரத்தின் மூலம் பெயின்ட் அடித்திருக்கிறார். மற்ற இருவரும் கயிற்றைப் பிடித்திருக்கின்றனர். யாரும் எதிர்பாராத வகையில், கயிறு அறுந்து சந்திரன் தலைகீழாக விழுந்திருக்கிறார்.
நான்கு மாடிக் கட்டடத்திலிருந்து விழுந்தவரின் தலையின் பின்பகுதி சுவரில் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு கவலைக்கிடமாகியிருக்கிறார். உடன் வேலை செய்தவர்கள் அதிர்ச்சியாகி, என்ன செய்வதென்று அறியாமல் திகைத்துப்போயிருக்கின்றனர்.

சுமார் ஒரு மணி நேரம் ஆகியும் ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிய சந்திரனை, குடியிருப்புவாசிகளும் கண்டுகொள்ளவில்லை. நீண்ட நேரத்துக்குப் பிறகே 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

உடன் பணிபுரிந்தவர்களும், குடியிருப்பு வாசிகளும் உடனே சந்திரனை மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க வாய்ப்பிருக்கிறது எனக் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.