பாலிவுட் நடிகை ஜியா கான், 2013-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி மும்பை ஜுகு இல்லத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஜியா கான் தற்கொலை செய்வதற்கு முன்பு, நடிகர் சூரஜ் பன்சோலியைக் காதலித்துவந்தார். ஜியா கான் தற்கொலை செய்துகொள்வதற்கு சூரஜ் பன்சோலிதான் காரணம் என்று, ஜியா கானின் தாயார் குற்றம்சாட்டியிருந்தார். ஜியா கான் தற்கொலைக்கு முன்பு எழுதியதாக ஒரு கடிதம் ஜியா கான் படுக்கை அறையிலிருந்து மீட்கப்பட்டது. இதனால் சூரஜ் பன்சோலி தன்னுடைய மகளைக் கொலைசெய்துவிட்டதாகக் கூறி, ஜியா கானின் தாயார் போலீஸில் புகார் செய்தார். தற்கொலை கடிதத்தின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து சூரஜ் பன்சோலியைக் கைதுசெய்தனர்.

பின்னர் சூரஜ் பன்சோலி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று கோரி ஜியா கானின் தாயார் ரபியா கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 10:30 மணிக்கு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது.
ஆனால், காலையில் ஜியா கானின் தாயார் மேலும் சில ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதனால் தீர்ப்பு வழங்கப்படுவது தாமதமானது. பின்னர் தீர்ப்பு 12:30 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட சூரஜ் பன்சோலி வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவித்தார். ``அவருக்கு எதிராகப் போதிய சாட்சியங்கள் இல்லை. ஜியா கானின் தாயார் ரபியா கான் இந்தத் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம்" என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இது குறித்துப் பேசிய ரபியா கான், ``என்னுடைய போராட்டம் தொடரும். தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். தற்கொலைக்குத் தூண்டிய வழக்கிலிருந்துதான் சூரஜ் பன்சோலி விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், என்னுடைய மகளை அவர் கொலைசெய்யவில்லை என்று நிரூபிக்கப்படவில்லை. ஜியா கொலைசெய்யப்பட்டார் என்று ஆரம்பத்திலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறேன். இப்போது தற்கொலை வழக்கிலிருந்துதான் அவர் விடுக்கப்பட்டிருக்கிறார். கொலை தொடர்பான விசாரணை இன்னும் இருக்கிறது" என்று தெரிவித்தார். கோர்ட்டில் ஆஜரான சூரஜ் பன்சோலி இது குறித்து, ``உண்மை எப்போதும் வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.