வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகிலிருக்கும் ஆசனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மனைவி செந்தாமரை. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில், கூலி வேலைக்குச் சென்றுவிட்டு நேற்று மாலை வீட்டுக்குத் திரும்பிய குமரேசன் கள்ளச்சாராயம் வாங்கிக் குடித்ததாகவும், இதனால் ஏற்பட்ட பாதிப்பால் சில நிமிடங்களிலேயே அவர் சுருண்டு விழுந்து இறந்துவிட்டதாகவும் மனைவி செந்தாமரை புகாரளித்திருக்கிறார். இது தொடர்பாக, வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் செந்தாமரை கொடுத்திருக்கும் புகார் மனுவில், ‘‘என் கணவருக்குக் குடிப்பழக்கம் உண்டு.

நேற்று மாலை 3 மணியளவில், சுஜாதா என்ற பெண் சாராய வியாபாரியிடம் கள்ளச்சாராயம் வாங்கிக் குடித்திருக்கிறார். சாராயம் குடித்துவிட்டு 200 மீட்டர் நடந்து வருவதற்குள்ளாக வாந்தி எடுத்து, வாயிலிருந்து நுரைதள்ளிக் கீழே விழுந்திருக்கிறார். மாலை 4 மணியளவில் என் கணவர் இறந்துவிட்டார். இதனால் நானும், என் பிள்ளைகளும் தெருவில் நிற்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. எனவே, சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, நாங்கள் வாழ ஒரு நல்வழியை ஏற்படுத்தித் தருமாறு வேண்டுகிறோம்’’ என்று கூறியிருக்கிறார். இதற்கிடையே, குமரேசனின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணைநடத்திவருகின்றனர்.