புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகேயுள்ள நிலையூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் என்பவரின் மகள் சரிதா (24). இவர் பி.எஸ்சி., பி.எட் படித்திருக்கிறார். இவரும் அறந்தாங்கி தாலுகா மணக்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த சின்னையா மகன் சிவானந்தம் (24) என்பவரும் பள்ளியில் படிக்கும் நாள் முதல் காதலித்து வந்திருக்கின்றனர். சிவானந்தம் பி.சி.ஏ படித்துவிட்டு லோடு மேனாக வேலை பார்த்துவருகிறார்.

இவர்களின் காதலுக்கு சரிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், சரிதாவுக்கு அவரின் குடும்பத்தினர் வேறு ஒருவருடன் திருமணம் செய்துவைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சரிதா, சிவானந்தம் ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேறிவந்து ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலுள்ள கோயிலில் திருமணம் செய்துகொண்டனர்.
சரிதா தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்பதால், அவரைத் திருமணம் செய்துகொண்டதற்காக சிவானந்தம் அவரின் குடும்பத்தினரால் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஊருக்குள் சென்றால் சிவானந்தம் குடும்பத்தினரால், அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் சரிதாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து சரிதா தன்னுடைய காதல் கணவர் சிவானந்தத்துடன், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையை நேரில் சந்தித்து, தன்னுடைய கணவரின் உயிருக்கு அவருடைய பெற்றோர், குடும்பத்தினரால் ஆபத்து இருப்பதாகவும், அவருக்குப் பாதுகாப்பு வழங்கும்படி கண்ணீர் மல்க மனு அளித்தார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட எஸ்.பி, சம்பந்தப்பட்ட சரக காவல் நிலையத்துக்குப் புகார் மனுவை அனுப்பி விசாரிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார்.