விருதுநகர் மாவட்டம், செங்கோட்டை அருகே செங்குன்றாபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன் (28). இவருடைய மனைவி மோகனா (24) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர்கள் இருவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணேசன்-மோகனா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த உறவினர் இளைஞர் ஒருவருடன், மோகனா திருமணம் மீறிய உறவில் இருப்பதாகச் சந்தேகப்பட்டு கணேசன் அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த கணேசன், மோகனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கணேசன், மோகனாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியிருக்கிறார். அதில் அவர் அலறித் துடிக்க, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கணேசனை தடுக்க முயன்றிருக்கின்றனர். ஆனால், கணேசன் அவர்களையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார்.
இது குறித்த தகவல் உடனடியாக ஆமத்தூர் காவல் நிலைய போலீஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீஸார், காயம்பட்டவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில், தப்பியோடிய கணேசன், விஷம்குடித்து மயக்கநிலையில் கிடப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீஸார், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவரை மீட்டு விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.