ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப் படையின் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென வீட்டின்மேல் விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, இன்று காலை 9 மணியளவில் ஹனுமன்கர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக இந்திய விமானப் படையின் MiG-21 என்ற போர் விமானம் வழக்கமான பயிற்சிக்காக சூரத்கர் விமானப் படைத் தளத்திலிருந்து புறப்பட்டிருக்கிறது. அப்போது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஹனுமன்கர் பகுதியிலுள்ள பஹ்லோல் நகர் அருகே விமானம் வீட்டின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், கடைசி நேரத்தில் பைலட் முன்கூட்டியே பாராசூட் மூலம் வெளியே குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தற்போது விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து இந்திய விமானப் படை தரப்பில், ``விமானம் டேக்-ஆஃப் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே பைலட்டுக்கு விமானத்தில் அவசரநிலை ஏற்பட்டது. உடனடியாக ஏற்கெனவே உள்ள நடைமுறைகளின்படி பைலட் விமானத்தை மீட்க முயன்றும் இறுதியில் முடியவில்லை. பின்னர் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் பைலட் குதித்துவிட்டார். அடுத்து துரதிஷ்டவசமாக விமானம் ஹனுமன்கர் மாவட்டத்திலுள்ள பஹ்லோல் நகரில் ஒரு வீட்டின்மீது விழுந்து விபத்துக்குள்ளானதில், எதிர்பாராதவிதமாக மூன்று பேர் உயிரிழந்தனர்.

விமானத்திலிருந்து கீழே குதித்த பைலட் சிறுகாயங்களுடன் மீட்கப்பட்டார்" என்பதைக் குறிப்பிட்டு உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு இந்திய விமானப் படை உத்தரவிட்டிருக்கிறது.
இதேபோல் கடந்த ஜனவரியில் இரண்டு போர் விமானங்கள் பயிற்சியின்போது விபத்துக்குள்ளானதில், பைலட் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.