கர்நாடகா மாநிலம், குல்பர்காவின் ஷாபாத் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (22). இவர் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் வாழ்வாதாரம் தேடி தெலங்கானா மாநிலத்தின், ஹைதராபாத் நகரத்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தெலங்கானாவின் ஹயத்நகரிலுள்ள விரிவுரையாளர்கள் காலனியில் ஒரு கட்டடம் கட்டப்பட்டுவந்திருக்கிறது. கவிதா கட்டட வேலைக்குச் செய்வதற்காக, நேற்று காலை 8 மணியளவில் அந்தப் பகுதிக்குக் குழந்தைகளுடன் சென்றதாகக் கூறப்படுகிறது. மதியம் 2:30 மணியளவில், 6 வயது மகன் பசவ ராஜு, 3 வயது மகள் லஷ்மி ஆகியோருடன் மதிய உணவு சாப்பிடச் சென்றிருக்கிறார்.

அப்போது வெயிலின் வெப்பம் அதிகமாக இருந்ததால் 3 வயது மகள் லஷ்மி வெப்பம் தாங்க முடியாமல் அருகிலிருந்த பாலாஜி ஆர்கேட் அபார்ட்மென்ட்டின் அடித்தளத்தில் தூங்கியிருக்கிறார். மதியம் மூன்று மணியளவில், அந்தப் பகுதிக்கு எஸ்.யூ.வி காரை நிறுத்த வந்த உரிமையாளர், சிறுமி இருப்பதை அறியாமல் காரை சிறுமி மீது ஏற்றியிருக்கிறார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து, சிறுமியின் தாயார் கவிதா இது தொடர்பாக காவல்துறையில் முறையிட்டிருக்கிறார். இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருவதாக போலீஸார் தெரிவித்தனர்.