மகாராஷ்டிரா மாநிலம், அகோலா மாவட்டத்திலுள்ள பராஸ் என்ற இடத்தில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அந்த நேரம் கோயிலில் மத நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. இதனால் திரளான பக்தர்கள் கூடியிருந்தனர். அவர்கள் மழை பெய்ததால் அங்குள்ள அறை ஒன்றில் ஒதுங்கி நின்றனர். அதன் அருகில் மிகப்பெரிய வேப்ப மரம் ஒன்று நின்றது. அந்த நேரம் கடுமையான காற்று வீசியதால், மரம் ஒடிந்து பக்தர்கள் நின்றுகொண்டிருந்த அறையின்மீது விழுந்தது. இதில் 40 பக்தர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர்.
இது குறித்து கேள்விப்பட்டதும் தீயணைப்புத்துறையினரும், போலீஸாரும் விரைந்துவந்து ஜெசிபி இயந்திரத்தின் மூலம் மரத்தை அப்புறப்படுத்தினர். இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

மேலும் 36 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனலிக்காமல் மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் கவலைக்கிடமான முறையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நிமா அரோரா, போலீஸ் உயர் அதிகாரிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டார். அதோடு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்குத் தேவையான சிகிச்சைக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். இது குறித்து கேள்விப்பட்ட மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, வருத்தம் தெரிவித்திருப்பதோடு இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண உதவி அறிவித்திருக்கிறார். அதோடு காயமடைந்தவர்களுக்குத் தகுந்த சிகிச்சையளிக்கவும் கேட்டுக்கொண்டிருக்கிறார். துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் இந்தச் சம்பவம் குறித்து வருத்தமும், இரங்கலும் தெரிவித்திருக்கிறார்.