மேற்கு வங்க மாநிலத்தின் மேதினிபூர் மாவட்டத்திலுள்ள காதிகுல் கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த பட்டாசு ஆலையில் நேற்று காலை 11 மணியளவில் வெடி விபத்து ஏற்பட்டதில், ஒன்பது பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் நடந்தவுடனேயே இதில் விசாரணை மேற்கொண்ட மாநில அரசு, இந்த விவகாரத்தை, குற்றப் புலனாய்வுத்துறையிடம் ஒப்படைத்தது. அதன்படி குற்றப் புலனாய்வுத்துறைக்குழு, நேற்றிரவு 9 மணியளவில் சம்பவ இடத்தை வந்தடைந்து தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் விசாரணையைத் தொடங்கியது.

தொடக்கத்தில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ஏழு பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது 9 பேரின் உடல் மீட்கப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பு தெரிவித்திருக்கிறது.
இது குறித்து பேசிய மேதினிபூர் காவல் கண்காணிப்பாளர் அமர்நாத், ``இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. மேலும், வேறு யாராவது உயிரிழந்தார்களா என்பதைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அதோடு இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த இருவர் எக்ரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையிலிருந்து கொல்கத்தாவின் எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டவிரோத தொழிற்சாலை மீது ஏற்கெனவே மூன்று முதல் நான்கு வழக்குகள் இருக்கின்றன. பல முறை ரெய்டு சென்றும், தொழிற்சாலை தொடர்ந்து நடத்தப்பட்டுவந்திருக்கிறது. இதில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபர் கிருஷ்ணபாதா பாக் அல்லது பானு பாக் என அழைக்கப்படுபவர் என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன" என்றார்.

முன்னதாக இந்தச் சம்பவம் குறித்த தகவல் வெளியானவுடனேயே, இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2.5 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும் நிவாரணத் தொகையாக முதல்வர் அறிவித்தார்.
இதற்கிடையில் பா.ஜ.க தலைவர் சுகந்தா மஜும்தார், இந்த வெடி விபத்தை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.