பஞ்சாப் மாநிலம், பதிண்டாவில் அமைந்திருக்கும் ராணுவ வீரர்கள் முகாமில் நேற்று அதிகாலை சமையலறைக்குப் பின்புறம் தூங்கிக்கொண்டிருந்த ராணுவ வீரர்கள்மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது. பீரங்கி பிரிவைச் சேர்ந்த கமலேஷ், சாகர் பன்னே, யோகேஷ்குமார், சந்தோஷ் நகரால் ஆகியோர் இந்தத் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், முகாமில் இருந்த 'இன்சாஸ்' துப்பாக்கியும், 28 தோட்டாக்களும் காணாமல் போனதாக இரண்டு தினங்களுக்கு முன்பு போலீஸில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. எனவே, கண்டெடுக்கப்பட்ட தோட்டாக்களையும், 'இன்சாஸ்' துப்பாக்கியையும் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, காவல்துறை, அடையாளம் தெரியாத இருவர்மீது ஐ.பி.சி பிரிவு 302 (கொலை) மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கிறது. இந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டுக்கான உண்மையைக் கண்டறிய, போலீஸுடன் இணைந்து ராணுவம் உயர்மட்ட விசாரணையை நடத்தவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில், இந்தத் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நான்கு பேரில் ஒருவரான யோகேஷ்குமார் (24) தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட தேவாரம் அருகேயுள்ள மூனாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் யோகேஷ்குமார் (24).

நேற்று அதிகாலை பஞ்சாப் ராணுவ வீரர்கள் முகாமில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் யோகேஷ்குமாரும் உயிரிழந்திருப்பதை இந்திய ராணுவம் உறுதிசெய்து, அவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறது.