Published:Updated:

கோயில் குளத்தில் மூழ்கி ஐவர் பலியான விவகாரம்; பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த இபிஎஸ்!

குளத்தில் மூழ்கி ஐவர் பலி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோயில் குளத்தில் மூழ்கி ஐவர் பலியான விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

Published:Updated:

கோயில் குளத்தில் மூழ்கி ஐவர் பலியான விவகாரம்; பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த இபிஎஸ்!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோயில் குளத்தில் மூழ்கி ஐவர் பலியான விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

குளத்தில் மூழ்கி ஐவர் பலி

தீர்த்தவாரி நிகழ்ச்சி:

சென்னை, நங்கநல்லூர் எம்.எம்.டி.சி பகுதியில் பிரசித்திப் பெற்ற தர்மலிங்கேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திரம் திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு விழாவின் ஒரு பகுதியாகத் தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று (06.04.2023) நடைபெற்றது. அதன்படி, காலையில் அர்ச்சகர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் சுவாமியைப் பல்லக்கில் தூக்கிக்கொண்டு ஊர்வலமாக வந்தனர்.

தீர்த்தவாரி நிகழ்ச்சி
தீர்த்தவாரி நிகழ்ச்சி

மூவரசம்பேட்டையிலுள்ள குளத்துக்குப் பல்லக்கு கொண்டுவரப்பட்டது. அங்கே, பல்லக்கிலிருந்த உற்சவரை இறக்கி குளத்தில் நீராடிவிட்டு, கரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டனர். அதையடுத்து, தன்னார்வலர்கள் குளத்தைச் சுற்றி வளையம்போல நின்றுகொண்டனர். அர்ச்சகர்கள் உற்சவர் சிலையை எடுத்துக்கொண்டு குளத்தில் மூன்று முறை மூழ்கி எழுந்தனர்.

குளத்தில் மூழ்கி பலி:

மூன்றாவது முறையாகக் குளத்தில் மூழ்கி எழுந்தபோது, குளத்தின் எதிர்முனையில் நின்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர், திடீரென நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நான்கு பேர், அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தனர். அது தோல்வியில் முடிய... ஐந்து பேரும் நீரில் மூழ்கினர்.

குளத்தில் மூழ்கி பலி
குளத்தில் மூழ்கி பலி

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்றவர்கள், உடனடியாகக் குளத்தில் குதித்து, நீரில் மூழ்கியவர்களைத் தேடினர். அதே சமயத்தில் இந்த விபத்து குறித்துத் தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பகுதியிலிருந்தவர்கள் குளத்தில் இறங்கி தீவிரமாகத் தேடியும், நான்கு இளைஞர்கள் சடலமாகவே மீட்கப்பட்டனர். மற்றொருவரின் உடல் கிடைக்கவே இல்லை.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள், ஐந்தாவது இளைஞரின் உடலைக் கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேலாகத் தீவிரமாகத் தேடி, மீட்டெடுத்தனர். இந்த விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த பழவந்தாங்கல் பகுதி போலீஸார், அந்த இளைஞர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மீட்புப்பணி
மீட்புப்பணி

விசாரணையில், உயிரிழந்தவர்கள் புழுதிவாக்கம் முத்து முகமது தெருவைச் சேர்ந்த ராகவ் (19), நங்கநல்லூர் எம்.எம்.டி.சி காலனியைச் சேர்ந்த வனேஷ் (19), புழுதிவாக்கம் ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்த ராகவன் (22), நங்கநல்லூர் எம்.எம்.டி.சி காலனியைச் சேர்ந்த சூர்யா (22), மடிப்பாக்கம் பாலையா கார்டன் பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் (23) என்பது தெரியவந்தது.

கோயில் குளம் இல்லை:

விபத்து நடந்த இடத்தை ஆலந்தூர் மண்டல குழுத் தலைவர் சந்திரன் தொடங்கி அறநிலையத்துறை இணை ஆணையர் ரேணுகா தேவி வரை பலரும் நேரில் ஆய்வுசெய்தனர். அதைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உள்ளிட்டோரும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த சங்கர் ஜிவால், "முதலில் ஒருவர் குளத்தில் சிக்கிக்கொள்ள, அவரைக் காப்பாற்றச் சென்ற மற்றவர்களும் நீரில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனர். இந்தக் குளம் பஞ்சாயத்துக்குச் சொந்தமான குளம் என்று தகவல் கிடைத்திருக்கிறது.

சங்கர் ஜிவால் ஆய்வு
சங்கர் ஜிவால் ஆய்வு

குளத்தின் பராமரிப்பு குறித்து விசாரணை நடைபெறுகிறது. மேலும், இந்தக் குளம் கோயிலுக்குச் சொந்தமில்லாத நிலையில், இதற்கு எப்படி வந்தார்கள் என்பது குறித்தும்... இந்த விபத்து குறித்தும் கோயில் நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொள்ளப்படும். விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா, அனுமதி வாங்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இது போன்ற சம்பவம் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

அமைச்சர் ஆறுதல்:

குரோம்பேட்டை மருத்துவமனையிலிருந்த உயிரிழந்த ஐந்து இளைஞர்களின் குடும்பத்தினரைச் சந்தித்த ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவருடன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி உள்ளிட்ட பலரும் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "இந்த விபத்து குறித்து தகவல் தெரிந்ததும் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆறுதல்
அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆறுதல்

அவர் `உடனடியாக நேரில் செல்லுங்கள்' என்று கூறினார். உயிரிழந்த ஐந்து பேரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். தகுந்த பாதுகாப்புடன் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்" என்று கூறினார்.

இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம்:

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், "தீர்த்தவாரி நிகழ்ச்சியில், குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்கள் குறித்த செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்துக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டிருக்கிறேன்" என்று கூறப்பட்டிருந்தது.

இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம்
இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம்

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, பா.ம.க தலைவர் அன்புமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். மேலும், நடைபெற்றுவரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் உயிரிழந்த ஐந்து பேருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

கவன ஈர்ப்பு தீர்மானம்:

அப்போது பேசிய அவர், ``திருக்கோயில்களுக்குச் சொந்தமான குளங்களையும், திருக்கோயில் நிகழ்ச்சிகள் நடைபெறும் குளங்களையும் தூர்வாரும் பணிகளை உடனடியாக இந்த அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும், இளம் வயதிலே இறந்த ஐவருக்கும் அரசு அறிவித்த நிவாரணம் போதாது. நிவாரணத்தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன். இதுபோலவே விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருள்மிகு முருகன் திருக்கோயிலில் நாராயணன் என்ற 45 வயது பக்தர் ஒருவர், அங்குள்ள குளத்தில் குளித்தபோது மூழ்கி இறந்துவிட்டார். அவர் குடும்பத்துக்கும் அரசு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களை இழந்து வாடும், அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

உயிரிழந்த இளைஞர்கள்
உயிரிழந்த இளைஞர்கள்

இதற்கு பதிலளித்துப் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, "சர்வ மங்கள சேவா என்னும் சங்கம்தான் இந்தக் கோயிலை நிர்வகித்து வந்தது. இந்த நிகழ்வு நடந்தவுடன் முதலமைச்சர் அழைத்து 'பூஜை நடக்கும்போது குளங்கள் ஏன் தூர்வாரப்படவில்லை' என்னும் கேள்வியைக் கேட்டார். கோயில் நிர்வாகம் இப்படி ஓர் உற்சவம் நடப்பது குறித்து அறநிலையத்துறைக்கு எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. எனினும் இதைக் குறையாகச் சொல்லாமல்... இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பிள்ளைகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதலமைச்சர் நிதியிலிருந்து உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அவர்கள் கேட்கும் நிவாரணங்களைச் செய்துதர அரசு தயாராக இருக்கிறது" என்று கூறினார்.